கடந்த வாரம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘தலக்கோணம்’ படத்தின் கதாநாயகன் ஜிதேஷ். இதற்கு முன்பு இவர் ‘சிக்கி முக்கி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர் சிறு வயது முதலே நடிக்கும் ஆர்வம் கொண்டவர். ஏரோனேட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்திருந்தும் இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நடன இயக்குனர் ஸ்ரீதரிடம் முறையாக நான்கு வருட காலம் நடனப் பயிற்சி பெற்றவர். சில திரைப்படங்களிலும் நடனமாடியிருக்கிறார். அஜீத் நடித்த ஏகன் படத்திலும், ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்திலும் நடனமாடியிருக்கிறார்.
அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.. சுட்டி டிவியில் குழந்தைகளுக்கு நடனம் சொல்லித் தரும் நடன இயக்குனராகவும், அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.
இதே நேரத்தில் மேடை நாடகங்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்டதால் பல்வேறு நாடகங்களிலும் நடித்து வந்திருக்கிறார். ஒரு முறை இவர் நடித்த நாடகத்தை பார்த்த ‘சிக்கி முக்கி’ படத்தின் தயாரிப்பாளர் இவரை தன் படத்தில் நாயகனாக அறிமுகம் செய்திருக்கிறார்.
சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். கலைஞர் டிவியின் ‘நாளைய இயக்குனரில்’ வெளி வந்த ‘விழா’ படத்தின் இயக்குநர் பாரதி பாலகுமாரனின், ‘சத்ய பிரமாணம்’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.
பின்னர் இங்கிலாந்து சென்று அங்கேயும் இரண்டு குறும் படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று ஆங்கில இலக்கியத்தில் முதன்மையான நாவலான ஷெர்லாக் ஹோம்ஸில் வரும் பகுதியை பற்றி எடுக்கப்பட்ட குறும் படம். இதில் ஜிதேஷ்தான் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் மிஸ்ஸிங் ச்சாப்டர் என்ற இங்கிலாந்து குறும் படத்திலும் நடித்துள்ளார்.
இப்படி வெளிநாடு சென்று குறும்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இந்த ஹீரோ விளம்பரப் படங்களையும் விட்டுவைக்கவில்லை. ‘ராமராஜ் காட்டன் பனியன்’, ‘மகாராஜா சில்க்ஸ்’, ‘சென்னை சில்க்ஸ்’, ‘ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்’ போன்ற விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறாராம்.
‘தலக்கோணம்’ படம் வெளியானதைத் தொடர்ந்து ஹீரோ ஜிதேஷ் மட்டும் தனியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தலக்கோணம் படத்தின் இசை வெளியீட்டு விழா, பிரஸ்மீட் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஹீரோவை அழைக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு.. “எனக்கும் தெரியல ஸார்.. நான் நல்லபடியா முழு ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடிச்சுக் கொடுத்தேன். பட்.. அவங்கதான் என்னை கூப்பிடலை. கூப்பிடாத இடத்துக்கு போகக் கூடாதுன்னு நான் அங்க வரலை.. அவ்ளோதான்..” என்றார். எப்பவும் ஹீரோயினால்தான் டிரபுள் வரும்.. இங்க அதிசயமா ஹீரோவாலயா..?
தொடர்ந்து பேசிய நடிகர் ஜிதேஷ், “பெரிய இயக்குனர்கள் படங்கள்ல நடிக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கேன்.. அதே மாதிரி சமந்தா மாதிரி முன்னணி ஹீரோயின்களோடவும் நடிக்கணும். தமிழ் சினிமாவுல ஒரு நல்ல இடத்துக்கு வரணும்னு ஆசைப்படறேன். இந்த நியாயமான என்னோட ஆசைகள் இந்த வருஷம் நிறைவேறிரும்னு நான் நிச்சயமா நம்புறேன்.. இப்போ அடுத்த படத்துக்காக தீவிரமா கதை கேட்டுக்கிட்டிருக்கேன்..” என்றார்.
இப்படித்தான் நம்பிக்கை வைக்கணும்.. சமந்தா கிடைக்கலைன்னாலும் அட்லீட்ஸ் சம்யுக்தாவாவது கிடைக்காதா..? நம்பிக்கை வைங்க பிரதர்..! நிச்சயம் ஜெயிப்பீங்க..