full screen background image

‘ரஜினிகாந்த் டூப் ஜீவா’ன்னு டைட்டில்லேயே வருதே..?!

‘ரஜினிகாந்த் டூப் ஜீவா’ன்னு டைட்டில்லேயே வருதே..?!

கோச்சடையான் படம் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் எங்களைத் தோற்கடிக்க முடியாது என்பதை போல ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அதன் தயாரிப்பாளர் தான் போட்ட பணத்தை ஏறக்குறைய தாண்டிவிட்டார். கூடுதலாக கோச்சடையானின் அடுத்த பாகத்தையும் ஆரம்பிக்க எண்ணியுள்ளாராம்.

‘கோச்சடையான்’ படத்தை விமர்சனம் செய்பவர்கள் அதிகம் சொல்வது “இதில் ரஜினி நடிக்கவே இல்லை.. ச்சும்மா வீடியோவுக்காக ஒரு நாள் ஆக்ட் பண்ணியிருக்காரு. அவ்ளோதான்…” என்றார்கள். ஆனால் இந்தப் படத்தில் ரஜினிக்காக சில காட்சிகளில் டூப் போட்ட நடிகர் ‘லொள்ளுசபா’ ஜீவாவோ “இது முற்றிலும் தவறான செய்தி…” என்கிறார்.

இது குறித்து ‘தமிழ் இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டி இது :

“கோச்சடையான்’ ஒரு பொம்மைப் படம், அதில் ரஜினிகாந்த் நடிக்கவே இல்லை என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். ஆனால் இதில் கொஞ்சமும் உண்மையில்லை.  இந்தப் படத்தில் 80 சதவீதம் ரஜினி சார்தான் நடித்தார். சில காட்சிகளில் அவரைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்று என்னை நடிக்க வைத்தார்கள்.

இந்தப் படத்தில் நாகேஷ் சார் மாதிரி நடிப்பதற்கான ஆளை ஆடிஷன் எல்லாம் வைத்து தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் ரஜினி சார் மாதிரி நடிக்க ஆடிஷன் வைக்காமல் நேரடியாகவே என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஸ்கிரிப்டை என்னிடம் தந்து டயலாக்கை பேசிக் காண்பிக்கச் சொன்னார்கள். நான் நடித்துக் காட்டியதும், “அப்பாவோட ஜெராக்ஸ் மாதிரி அப்படியே பண்றீங்களே” என்று சௌந்தர்யா பாராட்டினார். இதில் பல சீன்களை நானும் ரஜினிசாரும் சேர்ந்தே பண்ணியிருப்போம். அதனால் இந்த சீனிலெல்லாம் நான்தான் நடித்தேன் என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. அதை இயக்குநர்தான் சொல்லவேண்டும்.

ரஜினி சார் படத்துல நடிக்கிற பாக்கியம் நிறைய பேருக்கு கிடைக்கும். ஆனால் அவராவே நடிக்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. கீதையில் “எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்பட்டது’ என்று ஒரு வரி வரும். அதைப் போல் நான் ரஜினியிடம் கற்ற விஷயங்களை அவரது படத்திலேயே பயன்படுத்தியிருக்கிறேன்…”

“என்னை நடிக்க கூப்பிட்டார்கள். நான் நடித்தால் கிரெடிட்ஸில் பெயர் போடுவதாகச் சொன்னார்கள். சொன்னபடியே பெயரும் போட்டார்கள். படம் முடிந்த உடனே எல்லோரும் எழுந்து போவதால் அதை கவனித்திருக்க மாட்டார்கள். படம் முடிந்த உடன் ஓடும் கிரெடிட்ஸில் ‘ரஜினிகாந்த் டூப் ஜீவா’னு என் பெயர் வரும். என்னை இசை வெளியீட்டு விழாவில் கூப்பிட்டு கௌரவிப்பதாகச் சொல்லி ஏமாற்றியதாகவும் சில செய்திகள் வரு கிறது. அதுவும் பொய்தான். செளந்தர்யா எனக்கு என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதை நிறைவேற்றிவிட்டார்.”

“கோச்சடையான்’ படப்பிடிப்பு தளத்தில் ரவிக்குமார் சார், என்னை ரஜினி சாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘இவர்தான் ஜீவா. உங்களுக்கு டூப் போடுவதற்காக வந்திருக்கார்’ என்று சொன்னார். உடனே “ஜீவா.. ஹா.. ஹா..” என்று சிரித்தபடி கட்டி அணைத்துக் கொண்டார். ரஜினி சார், கே.எஸ்.ரவிக்குமார், நான் மூன்று பேரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

யாரை நமக்கு ரொம்ப பிடிச்சிருக்கோ, அவங்க பக்கத்துல போய் பேசினோம்ன்னா நம்மளோட எதிர்பார்ப்பு அப்படியே கம்மியாயிடும்னு சொல்லுவாங்க. அது ரஜினிகாந்த் விஷயத்தில் பொருந்தாது. அவர் நம்மளை அழைக்கிற விதம், எழுந்து நின்று புகைப்படம் எடுத்துக்கிற விதம் இப்படி நிறைய விஷயங்களைப் பார்க்கும்போது ‘ச்சே.. இதுதான் தலைவன்’ அப்படிங்கிற உணர்வு வந்தது. அவர் மீதான அன்பு, பாசம், பக்தி, மரியாதை எல்லாமே எனக்கு 1000 மடங்கு அதிகமாயிடுச்சு..”

“ஒரு தடவை மேக்கப்மேன் மூலமா என்னை அழைத்தார். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். ‘சார். நான் இதுவரைக்கும் சம்பாதித்தது எல்லாமே உங்களோட பெயரை வைச்சு, நடிச்சு சம்பாதித்ததுதான்’னு சொன்னேன். அதற்கு அவர் கையை மேலே காட்டிவிட்டு, ‘எல்லாமே கடவுள் கொடுத்தது. உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல உருவாக்கிக்கணும்’ என்றார்.

நன்றி : தமிழ் இந்து

Our Score