ஜீவா, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘போக்கிரி ராஜா’ என்ற தனது படத்தின் பெயரை வைத்துக் கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுமதி அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பழைய படங்களின் பெயர்களை தங்கள் படங்களுக்கு சூட்டிக் கொள்ள இப்போதைய இளம் கதாநாயகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே ரஜினியின் ‘பில்லா’ படத்தின் பெயர் அஜீத் படத்துக்கு சூட்டப்பட்டது. ‘பில்லா-2’ படத்திலும் அஜித்தே நடித்தார். இதுபோல், ரஜினியின் ‘மாப்பிள்ளை’ படத் தலைப்பு தனுஷ் படத்துக்கு வைக்கப்பட்டது. ‘நான் மகான் அல்ல’ என்ற பெயரை கார்த்தி தனது படத்துக்கு பயன்படுத்தினார். ‘முரட்டுக் காளை’ தலைப்பு சுந்தர். சி படத்தில் பயன்படுத்தப்பட்டது. ரஜினியின் ‘பாயும்புலி’ படத் தலைப்பில் விஷால் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகிறது.
இந்த நிலையில், தற்போது நடிகர் ஜீவாவும் தனது படத்துக்கு ரஜினியின் ‘போக்கிரி ராஜா’ தலைப்பை வாங்கியுள்ளார். ‘போக்கிரி ராஜா’ படம் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1982-ல் வெளியானது. ஏவி.எம். நிறுவனம் தயாரித்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். “போக்கிரிக்கு போக்கிரி ராஜா, விடிய விடிய சொல்லித் தருவேன், வாடா என் மச்சீகளா…” போன்ற இனிமையான பாடல்களும் இடம் பெற்றிருந்தன.
இந்தத் தலைப்பை கேட்டு நடிகர் ஜீவா உள்ளிட்ட படக் குழுவினர் ரஜினிகாந்தையும், ஏவி.எம். நிறுவனத்தையும் அணுகினர். அவர்களும் ‘போக்கிரி ராஜா’ தலைப்பை பயன்படுத்த பெருந்தன்மையோடு அனுமதி அளித்தனர் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக சிபி நடிக்கிறார். ராம்பிரகாஷ் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் புதுச்சேரியில் தொடங்குகிறது.









