பல மூத்த நடிகைகளையே ஜொள்ளுவிட வைத்த ஆணழகன் கணேஷ் வெங்கட்ராமனும் கல்யாண வலையில் சிக்கிக் கொண்டார்.
2008-ம் ஆண்டு ‘அபியும் நானும்’ திரைப்படம் மூலமாக தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமான கணேஷ் வெங்கட்ராம் அதன் பின்பு ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘கோ’, ‘பனித்துளி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இப்போது தயாரிப்பில் இருக்கும் ‘தனி ஒருவன்’, ‘அச்சாரம்’, ‘பள்ளிக்கூடம் போகாமலே’, ‘முறியடி’ ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
ஆள் வாட்டசாட்டமாக அர்னால்டின் வாரிசை போல இருக்கும் கணேஷ் வெங்கட்ராம் பல விளம்பரப் படங்களிலும் நடித்தவர். விளம்பரப் படவுலகில் இப்போதும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இரு்பபவர்.
கிசுகிசுக்களில் சிக்காதவர். ஆனாலும் காதலில் விழுந்திருக்கிறார். நிஷா கிருஷ்ணன் என்ற தொலைக்காட்சி சீரியல் நடிகையை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தவர், இன்றைக்கு அதனை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த நிஷா கிருஷ்ணன் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது ஞாயிறுதோறும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடரில் திரெளபதி கேரக்டரில் நடிப்பது இவர்தான்.
இன்றைக்கு காதலர்கள் இருவரின் குடும்பத்தினரும் நேரில் சந்தித்து இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்து ஆசி வழங்கிய கையோடு நிச்சயத்தார்த்தமும் நடந்தேறியுள்ளது.
தன்னுடைய காதல் டூ கல்யாணம் பற்றி பேசிய கணேஷ் வெங்கட்ராமன், “எனக்குப் பொருத்தமான பெண்ணை ரொம்ப காலமாக தேடிக் கொண்டிருந்தேன். நிஷாவை ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டது. அதன் பின் அவரிடம் பேசி பழகியதில் நமக்குப் பொருத்தமான பெண் இவர்தான் என்பதை முடிவு செய்தேன். நான் எதிர்பார்த்த அம்சங்கள் நிஷாவிடம் நிறைய இருந்தது. இப்போது பெற்றோர் சம்மதத்துடன் நாங்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளோம். இந்தாண்டு நவம்பர் 22-ம் தேதி எங்களது திருமணம் நடைபெறும்..” என்று அறிவித்திருக்கிறார் கணேஷ் வெங்கட்ராமன்.
வாழ்த்துகள் கணேஷ் வெங்கட்ராமனுக்கு..!