கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான ‘பென்சில்’ திரைப்படம் அதே வெள்ளிக்கிழமையன்றே டோரண்ட் எனப்படும் இணைய இறக்குதள சேவைத் தளங்களிலும், சில சினிமா இணையத்தளங்களிலும் வெளியானது.
அதோடு இல்லாமல் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட திருட்டு டிவிடிக்களும் வெளியாகிவிட்டன.
‘பென்சில்’ படம் நன்கு, விறுவிறுப்பாக இருப்பதாக தியேட்டர்களில் இருந்து செய்திகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் தொழிலை பாதிக்கும் நோக்கத்தில் திருட்டு டிவிக்களும் தமிழகத்தில் உலா வந்த செய்தி தயாரிப்பாளரையும், படத்தின் ஹீரோவையும் ரொம்பவே வருத்தப்பட வைத்துவிட்டது.
உடனடியாக இறங்கி வந்த படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார் நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தனது ‘பென்சில்’ படத்தின் திருட்டு டிவிடிக்களை கைப்பற்றி இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த பென்சில் திரைப்படம் ‘4th Period Mystery’ என்கிற கொரியன் திரைப்படத்தின் காப்பி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொரியப் படத்தின் கதையை முறைப்படி அனுமதி பெற்று தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்களா என்பது பற்றி பென்சில் படத்தின் தயாரிப்பாளர்கள் இதுவரையிலும் வெளியில் சொல்லவில்லை.