full screen background image

“இந்தப் படத்திற்காக அமலாபாலுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்..” – தனுஷின் நம்பிக்கை பேச்சு

“இந்தப் படத்திற்காக அமலாபாலுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்..” – தனுஷின் நம்பிக்கை பேச்சு

நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பல வெற்றிப் படங்களையும், விருது படங்களையும் தயாரித்த நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பில் இப்போது உருவாகியிருக்கும் படம்  ‘அம்மா கணக்கு’.  இது இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘நில் பேட்டா சனாட்டா’ என்கிற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்காகும். 

இப்படத்தில் அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி, சிறுமி யுவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்திப் படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரியை இந்த ‘அம்மா கணக்கு’ படத்தையும்  இயக்கியுள்ளார்.

IMG_0174

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் பேசும் போது, “நாங்கள் தயாரித்த ‘காக்கா முட்டை,’, ‘விசாரணை’  போன்ற படங்களுக்கெல்லாம் விருதுகள் கிடைத்து பாராட்டப்படுவது கடவுள் அருளால் தானாக அமைவதுதான். நாங்கள் விருதுகளுக்காக திட்டமிட்டு படமெடுப்பதில்லை.

இந்த ‘அம்மா கணக்கு’ படத்தை தயாரித்ததில் வுண்டர்பார் பிலிம்ஸ் பெருமைப்படுகிறது. ஏனென்றால் இது சமுதாயத்துக்குத் தேவையான கருத்தைச் சொல்லியிருக்கும் படம்.

பலருக்கும் பள்ளியில் படிக்கும் போது கணக்குப் பாடம் மட்டுமே கடினமாகத் தெரிகிறது. இது ஏன்..? நான்கூட ப்ளஸ் டூவில் கணக்கில் பெயிலானவன்தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீதும்,  அவர்கள் படிப்பின் மீதும் ஒரு கனவுடனும்,  கவலையுடனும் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளுக்கோ படி, படி என்றால் பிடிப்பதில்லை. ஏன் பெற்றோர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்று பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை.

இந்தப் படம் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி இருக்கும். இந்த இந்திப் ப்படத்தை பார்க்காமலேயே வெறும் ட்ரெய்லரைப் பார்த்தே ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஆனந்த் எல்.ராயிடம் கேட்டேன். அப்படியே ரீமேக் உரிமையையும் வாங்கினேன். உரிமை வாங்கிய பிறகுதான் படத்தையே பார்த்தேன். அந்த ட்ரெய்லரே அந்த அளவுக்கு தூண்டுதலாக இருந்தது.  அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஒரு அம்மா தன் மகள் மீது வைத்துள்ள பாசம் கனவு பற்றிச் சொல்கிற படம் இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடித்து அசத்திவிட்டார்.

இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா சார் இசையமைத்துள்ளார்.. அவரது இசை படத்துக்கு பெரிய பலமாக இருக்கும். ஆரி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் ‘ஜிகர்தண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர். ஹாலிவுட் தரத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்றே கூறவேண்டும்.

படத்தில் நடித்த பிறகு தன் நடிப்பைப் பற்றி என் அபிப்பிராயத்தை அறிய  அமலாபால் மிகவும் ஆவலாக இருந்தார். தன் நடிப்பைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தார். அமலாபாலின் குளோஸ்அப் காட்சிகளுக்கெல்லாம் இசைஞானி இசையமைத்திருக்கிறார். இதைவிட சிறப்பு என்ன வேண்டும்..?

இப்போது சொல்கிறேன், அமலாபால் ஏற்றிருக்கிற பாத்திரம் மிகவும் சிறப்பானது. அவர் நடித்ததிலேயே இதுதான் பெஸ்ட் என்று சொல்வேன். இந்தப் படத்தின் மூலம் அமலாபாலுக்கும் சுட்டிப் பெண் யுவாவுக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்..’ என்றார்.

aswini iyer diwari

படத்தின் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி பேசும்போது, ”தமிழில் படம் இயக்கும் இந்த வாய்ப்பு எனக்கு ஒளிப்பதிவாளர் ஆரியால் கிடைத்தது என்பேன். தமிழில் என்னை அறிமுகம் செய்துள்ள வுண்டர்பார் பிலிம்சுக்கும் தனுஷ்சாருக்கும் நன்றி.” என்றார்.

நடிகை அமலாபால் பேசும்போது, “இது, எனக்கு விசேஷமான படம். கதாநாயகர்களுக்கு ஜோடியாக ஒரே மாதிரி நடித்துக் கொண்டிருந்த எனக்கு சற்று மாறுதலாக அமைந்திருக்கும் படம்.

actress amala paul

ஒரு நாள் தனுஷ் சாரே எனக்கு போன் செய்து இந்தப் படம் பற்றிப் பேசினார். ‘ஒரு பொண்ணுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். நல்ல கதை’ என்றார். ஏதோ சிறு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் போலிருக்கிறது என்று நினைத்து உடனேயே ‘ஓகே’ சொன்னேன். பிறகு ‘பத்தாவது படிக்கும் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்’ என்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘படத்தை பாருங்கள். அப்புறம் பேசுங்கள்’ என்றார். படத்தைப் பார்த்தேன். அந்தப் பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. நடிக்க ஒத்துக் கொண்டேன்.

எனக்கு இப்போது 24 வயதுதான் ஆகிறது. இந்த ‘அம்மா கணக்கு’ படத்தில் 15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நான் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர், சாந்தி. மகளுக்கு உயர் கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காக, கஷ்டப்பட்டு உழைக்கும் வேலைக்கார பெண்ணாக நடித்திருக்கிறேன்.

இது, எனக்கு சவாலான வேடமாகவும் இருந்தது. படப்பிடிப்புக்காக அதிகாலை 7 மணிக்கே மீன் மார்க்கெட்டுக்கு போய் விடுவேன். மாலை 6 மணிவரை அந்த சூழ்நிலைக்கு என்னை பழக்கிக் கொண்டு நடித்தேன். நான் நடித்த ‘மிலி’ என்ற மலையாள படம் போல், ‘மைனா’ என்ற தமிழ் படம் போல் இந்தப் படமும் எனக்கு சவாலான படம்தான்.

இந்த படம் எனக்கு கிடைத்ததே தேசிய விருது கிடைத்த மாதிரிதான். என் நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன். அதற்காக படத்தில் முடிந்தவரை முயற்சித்து இருக்கிறேன். படம் முடிந்து திரையில் என்னைப் பார்த்தபோது, நான் வேறு ஆள் மாதிரி தெரிந்தேன்.

நிஜவாழ்க்கையில், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பெண். ‘அம்மா கணக்கு’ படத்தில் சாந்தி கதாபாத்திரம் மிக பொறுமையானவள். என்னை கதாபாத்திரமாக மாற்றிக் கொள்வதற்காக, தினமும் யோகா மற்றும் தியானம் செய்தேன். என் கணவர் டைரக்டர் விஜய் ஒரே ஒரு நாள் படப்பிடிப்புக்கு வந்தார். என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். ‘‘இப்படியே நீ இருந்து விடலாம்’’ என்று கிண்டலாக பாராட்டினார்.

நான் தற்போது மலையாளத்தில் ‘சாஜகானும் பரிக்குட்டியும்’ என்ற படத்திலும், ‘ஹெப்புலி’ என்ற கன்னட படத்திலும் வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறேன். தொடர்ந்து இது போன்ற மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்…’’என்றார்.

நிகழ்ச்சியில் வுண்டர்பார் பிலிம்ஸ் முதன்மை நிர்வாகி வினோத்குமார், ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு ஆரி, சிறுமி யுவா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

Our Score