கோடம்பாக்கம் என்னும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் ஆள் நான் இல்லை என்பதை தனுஷ் பாலிவுட் படங்களில் நடிக்கத் துவங்கியதில் இருந்தே உணர்த்திவிட்டார். இப்போது மேலும் ஒரு படி மேலே போய் ஹாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார்.
ஹாலிவுட்டில் தயாராகும் ஒரு ஆங்கிலப் படத்தில் முக்கிய கேரக்டரில் தனுஷ் நடிக்கப் போகிறாராம். பிரபல ப்ரெஞ்சு நாவலான ‘ஒரு ஐக்கியா கப்போர்டில் மாட்டிக் கொண்ட ஒரு பக்கீரின் அசாதாரணப் பயணம்’ (‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’) என்கிற நாவல் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இந்தப் படத்தில்தான் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கவிருப்பவர் ஹாலிவுட்டின் மெகா ஸ்டாரான உமா தர்மன். இப்படத்தை மார்ஜானே சட்ரபி என்கிற பிரெஞ்சு இயக்குநர் இயக்கப் போகிறாராம்.
இந்த ஹாலிவுட் பட வாய்ப்பு குறித்து தனுஷ் பேசுகையில், “The Extraordinary Journey Of the Fakir Who Got Trapped In The Ikea Cupboard’ என்கிற முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் நடிக்க நான் ஆர்வமாகத்தான் உள்ளேன். படத்தின் இயக்குநர் மழ்ஜான் சத்ராபி இந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியாகப் பொருந்துவேன் என நினைத்து என்னை தேர்வு செய்துள்ளார்.
எனது கேரக்டரின் பல அம்சங்களை என்னால் உணர்ந்து நடிக்க முடியும் என்று நானும் நம்புகிறேன். எப்போதும் என்னுடன் இருந்து, நான் புதிய எல்லைகளைத் தொட, புதிய சவால்களை எடுத்துக் கொள்ள ஊக்குவிக்கும் எனது ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தப் படத்தில் தனுஷ் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறதாம். படப்பிடிப்பு இத்தாலி, மொரோகோ மற்றும் ப்ரான்ஸ் ஆகிய நாடுகளில் நடக்கவுள்ளது.









