ராஜ்கிரண் நடிப்பில் நடிகர் தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ திரைப்படம்

ராஜ்கிரண் நடிப்பில் நடிகர் தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ திரைப்படம்

எவ்வளவு நாளைக்குத்தான் இயக்குநர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிப் போய் “அங்க நில்லு.. இங்க நில்லு”ன்னு காட்டுற இடத்துல நிக்குறது..? நாமளும் ஒரு நாளைக்கு இது மாதிரி ‘ஸ்டார்ட்’, ‘கட்’ சொல்லி.. ஸ்டார்களை நடிக்க வைக்கணும் என்கிற ஆசை அனைத்து நடிகர்களுக்குமே உண்டு. இதில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷும் விதிவிலக்கல்ல.

ரொம்ப நாளாகவே தன்னுடைய பேட்டிகளில் “எனக்கு படம் இயக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. ஆனால் அது எப்போ முடியும்ன்னு தெரியலை..” என்று சொல்லி வந்தார் தனுஷ். இப்போதுதான் அவருக்கு  அந்த நேரம் கனிந்து வந்திருக்கிறது.

IMG_6921

துணிச்சலாக ‘ஸ்டார்ட்’, ‘கட்’ சொல்ல ரெடியாகிவிட்டார் தனுஷ். தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஆனால் படத்தின் ஹீரோ யார் என்று கேள்விப்படும்போதுதான் மனம் ‘கெதக்’ என்றாகிறது. இப்போது அப்பா கேரக்டர்களில் நடித்து வரும் முன்னாள் ஹீரோ ராஜ்கிரண்தான் தனுஷ் இயக்கப் போகும் முதல் படத்தின் ஹீரோவாம்.  படத்துக்கு, ‘பவர் பாண்டி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். தனுஷ் இதில் நடிக்கவில்லை. இயக்கம் மட்டுமே செய்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷ், கஸ்தூரிராஜா எழுதும் பாடல்களுக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு - பிரசன்னா ஜி.கே., கலை - ஜெயாசந்திரன், சண்டை பயிற்சி - Stunt சில்வா, நடனம் - பாபா பாஸ்கர், காஸ்ட்யூம் டிஸைன் - பூர்ணிமா, தயாரிப்பு மேற்ப்பார்வை எஸ்.பி.சொக்கலிங்கம், நிர்வாக தயாரிப்பு  - எஸ்.வினோத். படப்பிடிப்பு சென்னையில் இன்று (புதன்கிழமை) தொடங்கியிருக்கிறது.

IMG_6910

தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா முதன்முதலாக இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில்தான் ராஜ்கிரண் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம், 1991-ல் வெளிவந்தது. 25 வருடங்கள் கழித்து கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் முதன்முதலாக இயக்கும் படத்திலும் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தற்போது, ‘தொடரி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் ‘கொடி,’ ‘வட சென்னை’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தன்னுடைய சொந்தப் படத்தை இயக்க்க் கிளம்பியிருக்கிறார் என்பதால் இந்த இரண்டு படங்களும் அந்தரத்தில் விடப்பட்டுள்ளன. ‘வட சென்னை’ படத்தில்தான் கடைசியாக நடித்து வந்தார். தற்போது அதற்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்திருக்கிறாராம் தனுஷ்.

பெரிய ஹீரோ என்ன செய்தாலும் யாரும் கேட்கப் போவதில்லை. ஏற்கெனவே அவருடைய திருமதியார் ஐஸ்வர்யா தனுஷ் இரண்டு படங்களை இயக்கி இயக்குநராக தன் பெயரை தமிழ்த் திரையுலகில் பதிவு செய்துவிட்டார். மைத்துனி செளந்தர்யா ரஜினியும் இயக்குநர். இப்போது இவரும் இயக்குநர். குடும்பமே இயக்குநர் குடும்பமாகிவிட்டது. வாழ்த்துகள்.

அதே சமயம்.. “தனுஷே டைரக்டராயிட்டாரா..? அப்போ நானு..?” என்று சொல்லி சிம்பு தம்பியும் என்றைக்கு களத்தில் குதிக்கப் போகிறாரென்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதுவும் நடக்கும்..!