full screen background image

“சினிமாவே குடும்பம்; குடும்பமே சினிமா…” – நடிகர் சேத்தன் பேட்டி..!

“சினிமாவே குடும்பம்; குடும்பமே சினிமா…” – நடிகர் சேத்தன் பேட்டி..!

ஆயிரக்கணக்கான எபிசோடுகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள்.. என்று தமிழ் சின்னத்திரை உலகத்தில் தனக்கென ஒரு இடத்தில் கம்பீரமாய் அமர்ந்திருந்தவர் நடிகர் சேத்தன். 

மின் பிம்பங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மர்ம தேசம்’ தொடரில் நடிகர் சேத்தன் ஏற்று நடித்த கதாப்பாத்திரம், தூர தேசம் முதல் தூந்திரப் பிரதேசம்வரை அவரைக் கொண்டு போய் சேர்த்தது.

சேத்தன் தன் ராஜாங்கத்தைப் பெரிய திரையிலும் விரிவாக்க விரும்பினார். ‘தாம் தூம்’ படத்தில் அறிமுகமாகி இப்போதுவரையிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று 50 படங்களை முடித்துவிட்டார். இருந்தாலும் தமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு இடத்தை இன்னமும் பிடிக்கவில்லையே என்கிற ஏக்கம் அவருக்குள் இப்போதும் உள்ளது.

IMG_0800

இது தொடர்பாக பேசிய நடிகர் சேத்தன், “நான் டிவி சீரியல்களில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்தபோது என்னை வலைவீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா சார்தான். அந்தப் படம் ‘தாம் தூம்’.

அடிப்படையில் எனக்கு  நகைச்சுவையுணர்வு அதிகம்  உண்டு. ஆனால்  இதைச் சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டேன் என்கிறார்கள். ‘தாம் தூம்’ படத்தில் எனக்கு கதாநாயகனின் மாமா பாத்திரம்.

அப்போது என் டைமிங் முகபாவனைகளைப் பார்த்து ‘உங்களுக்கு காமெடி நல்லா வரும் போல இருக்கே?’ என்றார் இயக்குநர் ஜீவா. ‘ஆமாம் சார்… அப்புறம் ஏன் சார் என்னை சீரியசாக் காட்ட முயற்சி செய்கிறீர்கள்…’ என்றேன். அதுக்கு ‘நான் ஒன்றும் செய்ய முடியாது. ‘மர்மதேசம்’ தொடர் செய்து வச்சிருக்கிற வேலை இது’. என்றார். அந்தளவுக்கு ‘மர்மதேசம்’ தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

நான் முதலில் ஒப்பந்தமான படம் ‘தாம் தூம்’ என்றாலும் முதலில் வெளியான படம் ‘பொல்லாதவன்’தான். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்துவிட்டேன். நான் நடித்தவற்றில் குறிப்பிட்டுப் பெருமைப்பட வைத்த படம் Revelations. இது நான் நடித்து 2016-ல் வெளிவந்தது. இந்தப் படம் மும்பை, கல்கத்தா, புனே என்று பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளைப்  பெற்ற திரைப்படம்.

கடைசியாக வந்த படம் ‘தமிழ்ப் படம்-2.’ அதே இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர் இயக்குநர் அமுதன்.

actor chettan

எனக்கு பாசிடிவ், நெகடிவ், காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கு நாசர் சார்தான் முன்னோடி. அவர் எல்லாமும் ஏற்று நடிப்பார். எந்த வட்டத்திலும் சிக்காததால்தான் அவரால் காலம் கடந்து நிற்க முடிகிறது. நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன்.

என் மனைவி தமிழ் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள்’ 96′ படத்தில் நடித்தார். இப்போது 10-ம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். ‘சினிமாவே குடும்பம்’. ‘குடும்பமே சினிமா’ என்றிருக்கிறோம்…” என்றார் சேத்தன்.

இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘கென்னடி கிளப்’  படத்தில் பாரதிராஜா, சசிகுமாருடன் இணைந்து நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு படங்கள் உள்பட 5 புதிய படங்களிலும் நடித்து வருகிறார்.

Our Score