இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் போஸ் வெங்கட்..!

இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் போஸ் வெங்கட்..!

நடிகர் போஸ் வெங்கட் சின்னத்திரை தொடர்கள் மற்றும் வெள்ளித்திரையில் பல படங்களிலும் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லனாக நடித்து வருகிறார். இவர் இப்போது இயக்குநராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகுகிறார்.

இந்தப் படத்தை ரூபி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஹஷீர் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். நடிகரும், இயக்குநருமான யார் கண்ணனின் மகளான காயத்ரி நாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்ரமணி மற்றும் சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இசை – இனியன் ஜெ.ஹாரீஸ், ஹரிசாய், படத் தொகுப்பு – ரிஷால் ஜெய்னி, கலை இயக்கம் – சிவசங்கர், பாடல்கள் – விவேகா, சண்டை இயக்கம் – தினேஷ் சுப்பராயன், டிசைன்ஸ் – ஜோசப் ஜாக்சன், தயாரிப்பு மேலாண்மை – ஆர்.பாலகுமார், எழுத்து, இயக்கம் – போஸ் வெங்கட்.

பல வகையான திரைப்படங்களில் நடித்ததுடன், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் போஸ் வெங்கட் நடித்திருப்பதால் அவர் இயக்கும் படம் எப்படி இருக்கும் என இந்த படத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகியிருக்கிறது.

தனது அறிமுகப் படம் பற்றி போஸ் வெங்கட் கூறும்போது, “இது ஒரு நீண்ட கால கனவு, இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இயக்குநர்களுடன் பணிபுரியும் போதும், திருட்டுத்தனமாக அவர்கள் வேலை செய்யும் பாணியை கவனிப்பேன், அதை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

சினிமாவில் இயக்குநராக என் திறமையை வெளிக்காட்ட என்னை ஊக்கப்படுத்திய என் குடும்பம், சினிமா மற்றும் சின்னத்திரை நண்பர்கள் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்தாக வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, என் ஸ்கிரிப்ட் மீது நம்பிக்கையை வைத்து முழு ஆதரவையும் வழங்கிய ரூபி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹஷீருக்கு எனது நன்றிகள்.

இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு முழு நீள கமர்சியல் படமாக இருக்கும்…” என்றார்.

Our Score