‘சிக்ஸ் பேக்’ என்னும் உடற்கட்டை நவீனமாககும் வித்தையை பாலிவுட் ஹீரோக்கள்தான் முதலில் ஆரம்பித்தார்கள். அமீர்கான், ஹிரித்திக் ரோஷன், சல்மான்கான், விவேக் ஓபராய், ஷாரூக்கான், அக்சய்குமார் என்று பாலிவுட் ஹீரோக்கள் வரிசையாக நடத்திக் காட்டிய அணிவகுப்புக்கு பிறகு தமிழ் நடிகர்களும் தொடர்ந்தார்கள்.
முதலில் சூர்யா, பின்பு விஷால், சிம்பு, தனுஷ் என்று தொடர்ந்த இந்தப் பட்டியலில் இப்போது புதிதாய் இணைந்திருக்கிறார் நடிகர் அதர்வா.
அவர் தற்போது நடித்து வரும் ‘ஈட்டி’ படத்திற்காகத்தான் இந்த சிக்ஸ் பேக்காம்.. தடகள வீரராக நடிக்கிறார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் ஆகியவற்றில் சிறந்த விளங்கும் இளைஞராக நடிக்கிறாராம். இதற்காக அவர் ஒரு வருடமாக டயட்டில் இருந்து கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து சிக்ஸ் பேக் லெவலுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
“தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வரும் ஒருவன், இங்கு எதிர்பாராத பிரச்சினை ஒன்றை சந்திக்கிறான். அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதுதான் ஈட்டி படத்தின் கதை.
ஒரு ஸ்போர்ட்ஸ்மேனுக்குரிய பாடி லாங்குவேஜை கொண்டு வரத்தான் இந்த முயற்சி. கடந்த ஒரு வருடமாக கடுமையான பயிற்சியும், உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்ததால் இந்த சிக்ஸ் பேக் எனக்குக் கிடைத்திருக்கிறது. இதைக் கொண்டு வர ஒரு ஆண்டு வேண்டும். ஆனால் இதனைக் கலைக்க ஒரு நாள் போதுமானது. இந்த சிக்ஸ் பேக்கை தொடர இருக்கிறேன். இது தவிர படத்துக்காக எல்லாவிதமான தடகள விளையாட்டு போட்டிகளிலும் பயிற்சி பெற்றேன்…” என்கிறார் அதர்வா.
அப்படியே படத்துல நல்ல கதை, திரைக்கதை இருக்குற மாதிரியும் பார்த்துக்குங்க.. இல்லைன்னா எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் மாதிரி போயிரும்..!