full screen background image

“நடிகர்-நடிகை-இயக்குநர்கள் படத்தின் ரிலீஸ் சமயத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை..” – நடிகர் அருண்பாண்டியன் குற்றச்சாட்டு..!

“நடிகர்-நடிகை-இயக்குநர்கள் படத்தின் ரிலீஸ் சமயத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை..” – நடிகர் அருண்பாண்டியன் குற்றச்சாட்டு..!

நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ்  பட நிறுவனம் சார்பாக கவிதா பாண்டியன், S.N.ராஜராஜன் தயாரித்திருக்கும் படம் ‘சவாலே சமாளி.’   இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

IMG_0338

விழாவில் தயாரிப்பாளர் அருண் பாண்டியன் பேசும்போது, “முன்பெல்லாம் ஒரு திரைப்படம் எடுத்து அதை ரிலீஸ் செய்வது மிக எளிதாக இருந்தது. பைனான்சியர்கள், விநயோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், நடிகர்கள் அனைவருக்குமே படம் தயாரிப்பில் பங்கு இருக்கும்.  கிடைக்கும்.

ஆனால், இப்போதோ படத் தயாரிப்புச் செலவில் பெரும் பகுதி பணம் பெரிய நடிகர், நடிகைகள், இயக்குநர்களுக்கு சம்பளமாகவே போய்விடுகிறது. தயாரிப்பாளர்களுக்கு லாபமோ, பண வரவோ கிடைப்பதில்லை. படம் ரிலீஸ் செய்யும்போது அந்த தயாரிப்பளருக்கு யாரும் உதவிகூட செய்வதில்லை.

இப்போது படங்களின் சேட்டிலைட் ரைட்ஸும் விற்பதில்லை. ‘அங்காடி தெரு’ படத்தை நான்தான் வாங்கி வெளியிட்டேன். படத்தைப் பார்த்தபோது ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைத்தேன். பலரும் எச்சரித்தார்கள். அதையும் மீறி வாங்கினேன். லாபமடைந்தேன். சாட்டிலைட் ரைட்ஸும் நல்ல விலைக்கு போனது.

இப்போது சமீபமாக ஒரு வருடமாக சேட்டிலைட் சேனல்கள் படங்களை வாங்குவதில்லை. இந்த சேட்டிலைட் ரைட்ஸ் உரிமையை நினைத்துத்தான் பல மீடியம் பட்ஜெட் படங்கள் தப்பிக்க நினைக்கின்றன. அத்தனையும் வீணாகிப் போய்க் கிடக்கிறது.

ஒரு படம் தயாரித்து முடியும்போது தயாரிப்பாளரை தவிர மற்றவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். மீதியெல்லாம் தயாரிப்பாளர் தலையில்தான் விழுகிறது. இதனால் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிலை கடத்தல்வரை சென்றுள்ளார்.

என் மகள் படத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடப் போவதாக சொன்னவுடன் முதலில் நான் மறுத்தேன். ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார். கூடவே துணைக்கு ராஜராஜனையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். கடைசியில் வேறு வழியில்லாமல்தான் இதற்கு சம்மதித்தேன்.

அப்போதுகூட இப்படியே இவர்களைவிட்டால் மொத்தமும் நம் தலையில் விழுந்து நாம்தான் கஷ்டப்பட வேண்டி வரும் என்று யோசித்து இவர்களுக்குத் துணையாக பன்னீர் போன்ற தொழில் தெரிந்தவர்களை அனுப்பி வைத்தேன்.

இப்போதுகூட 8 கோடி செலவாகிவிட்டாலும் படத்தை ரிலீஸ் செய்து, பல வகைகளில் வியாபாரம் செய்து கையைக் கடித்தால்கூட அந்தப் பக்கமாக கையை உதறிவிட்டுத் தப்பித்துவிடலாம் என்று நினைத்துத்தான் இந்தப் படத்திற்கு கை கொடுத்திருக்கிறேன்.

இந்தப் படத்தை நானே சொந்தமாக உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறேன். இதை கேள்விப்பட்ட ஹீரோ அசோக் செல்வனும், ஹீரோயின் பிந்து மாதவியும் தங்களது சம்பளத்தில் ஐந்து, ஐந்து லட்சம் ரூபாயை விட்டு தருவதாக கூறினார்கள். ஆனால் நான் அவர்களது பெருந்தன்மையை மதித்து அவர்களுக்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்து விட்டேன்.  அவர்களுக்கு எனது நன்றி..!

இன்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அந்த படத்தின் வெளியீட்டின்போது  அந்த தயாரிப்பாளரின் பிரச்னைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் கூட உதவ முன் வருவதில்லை…” என்று வருத்தப்பட்டு கூறினார்.

விழாவில் நடிகர் ராம்கி, நிரோஷா, அசோக் செல்வன், பிந்து மாதவி, பாடலாசிரியர் சிநேகன், ஒளிப்பதிவாளர் P.செல்வகுமார், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், கவிதா பாண்டியன், எஸ்.என்.ராஜராஜன், கீர்த்தி பாண்டியன், படத்தின் இயக்குனர் சத்யசிவா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

Our Score