‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கம்பீர குரல் வளத்தாலும், வில்லனாக மிரட்டலான நடிப்பு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அர்ஜுன் தாஸ்.
அதன் பிறகு ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக தனது தீவிரமான திரை இருப்பு மூலம் தன்னை நிலைநிறுத்தி கொண்டவர்.
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்திற்கு வில்லனாக இரட்டை வேடத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சியில் நடனம் ஆடிக்கொண்டே என்ட்ரி கொடுப்பதும், பிரியா வாரியருடன் இணைந்து நடனமாடுவதும் இணையத்தில் வைரலாகியதுடன் அவரது நடிப்பை பாராட்டி பலரும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வலம் வரும் அர்ஜுன் தாஸ், GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து தற்போது வெளிவந்துள்ள உள்ள படம் ‘பாம்’.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தில் கதாநாயகியாக ஷிவாத்மிகா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட், அபிராமி, நாசர், சிங்கம் புலி, பால சரவணன், டிஎஸ்கே மற்றும் பூவையர் உள்ளிட்டடோர் நடித்துள்ளனர்.
இசை டி. இமான், ஒளிப்பதிவு ராஜ்குமார் பி.எம், எடிட்டிங் பிரசன்னா ஜி.கே. கதை மற்றும் திரைக்கதையை விஷால் வெங்கட், மணிகண்டன் மாதவன் மற்றும் அபிஷேக் சபரிகிரிசன் ஆகியோர் எழுதியுள்ளனர், வசனம் மகிழன் பி.எம் எழுதியுள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்படத்தக்கது.
இந்நிலையில், காமேடி ஜேர்னரில் வெளிவந்துள்ள பாம் படத்தில் அவர் “மணிமுத்து” என்ற கதாபாத்திரத்தில் ஒரு கிராமத்து இளைஞனாக, தனது தனித்துவமான குரல் வளத்தாலும், உடல்மொழியாலும் கதைக்கு ஏற்ப நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி குணச்சித்திர நடிகராக புது அவதாரத்தில் தன்னை நிலைநிறுத்தி கொண்டு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
ஆக்ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த அர்ஜுன் தாஸை ஒரு குறிப்பிட்ட வளையத்தில் அடைத்து வைக்க பலர் நினைத்தனர். ஆனால், தன்னுடைய துணிச்சலான முயற்சியால் அதை உடைத்தெரிந்து வெற்றி கதாநாயகனாக மாறியுள்ளார்.
‘பாம்’ படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ், தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என்பதுதான் நிஜம்.