ஏவி.எம். நிறுவனத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவி.எம். சரவணனின் பேத்தியான அபர்ணாவின் கணவர் நடிகர் ஆர்யன் ஷியாம். தற்போது இவர், ‘அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து அதில் நாயகனாக நடித்துள்ளார்.
இது தவிர தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட, திருப்பதி வெங்கடாஜலபதி புராண வரலாற்றைச் சொல்லும், ‘நாயகன்’ என்ற படத்திலும் ஆர்யன் நடித்திருந்தார். இதில் வெங்கடாஜலபதியாக அவர் நடித்துள்ளார். திருமதி ஞானம் பாலசுப்பிரமணியம் (பம்பாய் ஞானம்) இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்தமைக்காக திருப்பதி தேவஸ்தானம் ஆர்யனுக்கு ‘யூத் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை வழங்கியிருந்தது. இந்தப் பட்டம் பற்றிய செய்தி வெளியானவுடன் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை பயன்படுத்தவே கூடாது என்று சொல்லி நடிகர் ஆர்யனுக்கு பல இடங்களில் இருந்தும் மிரட்டல்கள் வந்தனவாம்.
இது குறித்தும் நேற்றைய ‘அந்த நாள்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யன் சில தகவல்களைத் தெரிவித்தார்.
இது குறித்து நடிகர் ஆர்யன் பேசும்போது, “நாயகன்’ திரைப்படத்தில் நான் சிறப்பாக நடித்திருந்ததால் திருப்பதி தேவஸ்தானம்தான், இந்த ‘யூத் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை எனக்கு அளித்தது.
இந்தத் தகவல் வெளியான பிறகு, பல இடங்களில் இருந்தும் மிரட்டல்கள் வந்தன. என்னிடமும் என் தந்தையிடமும் சிலர் பேசினார்கள். ‘யூத் சூப்பர் ஸ்டார்’ என்ற அந்தப் பட்டத்தை என் குடும்பமோ, உறவினரோ, தயாரிப்பாளரோ அளிக்கவில்லை. திருப்பதி தேவஸ்தானம்தான் அளித்தது. ஆனால், அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து மறைமுகமாக மிரட்டினார்கள். இதனால், அந்தப் பட்டத்தை பயன்படுத்தப் போவதில்லை என முடிவெடுத்துவிட்டேன்…” என்றார்.
அவரிடம், “ரஜினி தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததா..?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அதற்கு ஆர்யன், “ரஜினி ஒரு ஆன்மிகவாதி. இந்த மாதிரி விசயத்தை எல்லாம் பொருட்படுத்தவே மாட்டார். தவிர என், ‘அந்த நாள்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரையே அவர்தான் வெளியிட்டார். அவருக்கும், இந்த மிரட்டல்களுக்கும் சம்பந்தமில்லை. மிரட்டியவர்கள் குறித்து வெளிப்படையாகப் பேச தற்போது நான் விரும்பவில்லை…” என்றார் ஆர்யன்.