full screen background image

டொவினோ தாமஸ் தமிழகத்தின் இளம் பெண்களின் கனவு நாயகனாக வருவார்..!

டொவினோ தாமஸ் தமிழகத்தின் இளம் பெண்களின் கனவு நாயகனாக வருவார்..!

சரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘அபியும் அனுவும்’.

தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தரண் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஒளிப்பதிவாளரும், பெண் இயக்குநருமான பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் படத்தில் பங்குகொண்ட நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

abhiyum anuvum movie

நிகழ்ச்சியில் பேசிய திரைக்கதை ஆசிரியர் உதயபானு மகேஸ்வரன், “இந்த மாதிரி ஒரு கதையை சொல்லி, திரைக்கதை அமைக்க சொல்லி கேட்டார் விஜயலட்சுமி மேடம். இந்தக் காலத்துக்கு தேவையான ஒரு படம்தான் இது. படம் நிச்சயமாக வெற்றி பெறும்..” என்றார்.

actress pia

படத்தின் நாயகியான பியா பேசும்போது, “இந்த நல்ல வாய்ப்பை கொடுத்த விஜயலட்சுமி மேடம் மற்றும் சரிகம நிறுவனத்துக்கு நன்றி. இது எனக்கு ரொம்பவே சவாலான படம். இந்த கதாபாத்திரத்தை செய்ய எனக்கு எந்த படமும் இன்ஸ்பிரெஷனாக இல்லை. ரொம்பவே நேர்மையான படம், சமூகத்தில் நிறைய கேள்விகளை முன் வைக்கும். இதில் நடித்தது எனக்குப் பெருமையான விஷயம்…” என்றார்.

music director tharan

இசையமைப்பாளர் தரண் பேசும்போது, “விஜயலக்ஷ்மி அவர்களின் படத்தில் வேலை செய்தது எனக்கு பெருமையாக இருந்தது. அவர் ரொம்பவே வெளிப்படையாக பேசக் கூடியவர். படத்தில் இரண்டு பாடல்கள்தான். அந்த இரண்டு பாடல்களையும் திரைக்கதையில் சிறப்பாக பொருத்தியிருக்கிறார். டொவினோ தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வருவார். இது நிச்சயம் பேசப்படும் படமாக அமையும்…” என்றார் இசையமைப்பாளர் தரண்.

நடிகை ரோகிணி பேசும்போது, “விஜயலட்சுமியுடன் எனக்கு நீண்ட கால நட்பு இருந்து வருகிறது. வித்தியாசமான படம்னு சொல்லித்தான் என்னை நடிக்க அழைத்தார். உண்மையிலேயே இது ஒரு வித்தியாசமான படம். இந்த படத்தில் நான் தாண்டி வந்த உணர்வுகளை நான் நிஜத்தில்கூட இதுவரை உணர்ந்தது கிடையாது. இதுவரைக்கும் நான் செய்யாத விஷயங்கள் இந்த படத்தில் இருந்தது. அதை எனக்கு கொடுத்த விஜிக்கு நன்றி…” என்றார். 

thaanu

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “திரையுலகில் சரித்திரம் படைத்த மேதை பி.ஆர்.பந்துலுவின் மகள்தான் விஜயலட்சுமி. ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை விட்டுவிட்டு துறை மாறி இசையமைக்க போனபோது ‘ஏன் நீங்க படம் பண்ணாம போறீங்க?’ என கேட்டேன். ஆனால் இப்போது அவர் இயக்கும் படத்தை சரிகம தயாரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிக நல்ல படமாக வந்திருக்கிறது. நிச்சயமாக இந்தப் படம் வெற்றி பெறும்..” என்றார் கலைப்புலி எஸ் தாணு.

natty natraj

ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நட்ராஜ் பேசும்போது, “தமிழில் அடுத்த 5 வருடங்களுக்கு கான்செப்ட், கதையுள்ள படங்கள்தான் பேசப்படும். விஜயலட்சுமியிடம் 4 வருடங்கள் உதவியாளராக வேலை பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களிடம் வேலை பார்த்தது கல்லூரியைவிட்டு வெளியே வந்த ஒரு திருப்தி கிடைத்தது.

ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமிதான். டொவினோ தாமஸ் தென்னகத்தின் இம்ரான் ஹாஸ்மி என்று கூறலாம். முத்த நாயகன் என்றால் பொருத்தமாக இருக்கும். தரண் இசை படத்துக்கு பலம். பியா பாஜ்பாயின் கதைத் தேர்வு எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. நிறைய நல்ல நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள்..” என்றார்.

tovino thomas

படத்தின் ஹீரோவான டொவினோ தாமஸ் பேசுகையில், “என்னு நிண்டே மொய்தீன் படத்துக்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. நல்ல கதைக்காக நான் காத்திருந்தேன். ஒரு சில மலையாள படங்களை முடிக்க வேண்டியிருந்தது.

அந்த நேரத்தில்தான் விஜயலட்சுமி மேடம் என்னை தொடர்ந்து கதை கேட்க சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார். அவரை பற்றி இணையத்தில் தேடினேன். அப்போதுதான் அவர் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஜாம்பவானின் மகள் என்பது தெரிய வந்தது.

உடனேயே கதை கேட்டேன். சிறப்பான கதை. நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு படத்துக்காக சென்னையில் ஒரு பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போதுதான் பியாவை  முதன் முறையாக சந்தித்தேன்.

தமிழ் எனக்கு அவ்வளவாக தெரியாது. இந்த படத்தில் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. தமிழ் சினிமாவில் இது ஒரு பெஞ்ச் மார்க் படமாக இருக்கும். இதே படம் மலையாளத்திலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர், நடிகைகளுடன் நடித்தது நல்ல அனுபவம்…” என்றார்.

suhasini-pia

நடிகை சுஹாசினி பேசும்போது, “விஜிக்கும் எனக்கும் இருக்கும் உறவைப் பற்றி நிறைய பேசிக் கொண்டே போகலாம். என் இளம் வயதில் வெளிநாட்டு படங்களில் வருவது போல அபார்ட்மென்டில் தனியாக வசிக்கணும் என்பது என் ஆசையாக இருந்தது. விஜியும் நானும் அந்த அபார்ட்மென்டில் வசிக்கணும்னு நினைச்சேன்.

யாருக்கும் தெரியாத இன்னொரு விஷயத்தையும் கூற வேண்டும். மணிரத்னம் யாரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை என்றுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் விஜியின் அண்ணன் ரவி பந்துலு இயக்கிய ஒரு கன்னட படத்தில் துணை இயக்குநராக வேலை செய்திருக்கிறார். அதை இங்கு நினைவு கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

சின்ன வயதில் இருந்த விஜி, இன்னமும் அப்படியே உண்மையாக இருக்கிறார். 22 வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியிருக்காங்க. அவர் அழைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்காக கொடுத்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்..!

எல்லோரிடமும் ரொம்ப செல்லமாக பேசி வேலை வாங்குவார். டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய் ஜோடி படத்தில் பார்க்க ரொம்ப அழகா இருக்காங்க. ரொம்ப நாள் கழித்து பிரபுவுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி…” என்றார்.

இந்த  பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பி.ஆர்.விஜயலட்சுமி, வசனகர்த்தா சண்முகம், எடிட்டர் சுனில்ஸ்ரீ நாயர், ஒளிப்பதிவாளர் அகிலன், நடிகை கலைராணி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

Our Score