full screen background image

ஹீரோயின்களை தமிழ்நாட்டு திருமதிகளாக்குவது மீடியாக்களின் பொறுப்பு..! இயக்குநர் சரணின் வேண்டுகோள்..!

ஹீரோயின்களை தமிழ்நாட்டு திருமதிகளாக்குவது மீடியாக்களின் பொறுப்பு..! இயக்குநர் சரணின் வேண்டுகோள்..!

தல அஜித்தின் ‘காதல் மன்னன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரண். ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் பட்டறையில் இருந்து வெளிவந்த இயக்குநர்களில் இவரும் ஒருவர்.

இதைத் தொடர்ந்து ‘அமர்க்களம்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘அல்லி அர்ஜூனா’, ‘ஜெமினி’, ‘ஜேஜே’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’., ‘அட்டகாசம்’, ‘இதயத் திருடன்’, ‘வட்டாரம்’, ‘மோதி விளையாடு’, ‘அசல்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இடையில் அவருடைய நண்பர்கள் செய்த துரோகத்தினால் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளான சரண்.. இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.

இப்போது நான்கு வருடங்கள் கழித்து ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தை சில நண்பர்கள் துணையுடன் தயாரித்து இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் முதல் ஊடகத் தொடர்பு நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தினார் சரண்.

இந்தப் படத்தில் வினய் நாயகனாக நடிக்கிறாராம். ஏற்கெனவே சரண் இயக்கிய ‘மோதி விளையாடு’ படத்திலும் வினய் ஹீரோவாக நடித்திருக்கிறார். அப்போதே “அடுத்து உங்களுடைய படத்திலும் நான்தான் ஹீரோவா நடிக்கணும்…” என்று அட்வான்ஸ் புக்கிங் செய்து கொண்டாராம். “அதை நினைவில் வைத்திருந்து என்னை அழைத்தார் சரண் ஸார்…” என்று நன்றியை வெளியிட்டார் வினய்.

அதிலும் வினய்க்கு இதில் இரட்டை வேடமாம். பக்காவான திருநெல்வேலி ஆள்… மாடர்னான சிட்டி யூத் என்று இரட்டை குதிரையில் சவாரி செய்திருக்கிறார் வினய் .

இந்த இரண்டு வினய்களுக்கு மூன்று ஹீரோயின்கள்.. சாமுத்திரிகா, ஸ்வஸ்திகா, கேஷா கம்பட்டி என பெயரில் அழகு தேவதைகளை அறிமுகம் செய்திருக்கிறார் சரண்.

ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்றெண்ணி தனது முதல் பட ஹீரோயினான மானுவை அழைத்து தனது புதிய ஹீரோயின்கள் மூவரையும் அறிமுகப்படுத்த வைத்தார். வெரி இன்ட்ரஸ்டிங் சிச்சுவேஷன்.. 

டேராடூனை சேர்ந்த சாக்சி சவுத்ரிக்கு, சாமுத்ரிகா என்று நாமகரணம் சூட்டி திருநெல்வேலி பொண்ணாக நடிக்க வைத்திருக்கிறாராம். சாமுத்ரிகா கையில் இப்போதே  தெலுங்கிலும், இந்தியிலும் இரண்டிரண்டு படங்கள் இருக்கிறதாம்.

கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிற, பெங்களூரில் பிறந்த மலையாள பெண்ணான சுரபிக்கு, ஸ்வஸ்திகா என்று பெயர் மாற்றி சிட்டி வினய்க்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறாராம் .

மூன்றாவது கதாநாயகியான கேஷா கம்பெட்டி தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மும்பை பொண்ணு. இவருடைய பெயரை மட்டும் மாற்றவில்லை. ஆனால் இவர் படத்தில் இரண்டு வினய்களையும் ஒரே நேரத்தில் காதலிக்கிறாராம்(!)..

இந்த ஹீரோயின்களை பிடிக்க கஷ்டப்பட்ட கதையையும் மேடையில் கூறினார் சரண். மும்பையில் தங்கி ஏகப்பட்ட மாடல்களை வரவழைத்து ஆடிஷன் டெஸ்ட் வைத்துதான் செலக்ட் செய்தாராம்.. கடைசியாக யாரும் கிடைக்கவில்லையே என்று நினைத்து கிளம்பும்போதுதான் சிக்கினாராம் கேஷா கம்பெட்டி.. 

வினய் தன் பேச்சில் தனக்கு கல்யாணப் பேச்சுக்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டார். “இந்த படத்துல மூணு ஹீரோயின்கள் இருக்காங்க. நீங்களே பாருங்க.. இவ்ளோ அழகானவங்களையெல்லாம் விட்டுட்டு நான் அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ண முடியுமா..?” என்று மீடியாக்களிடமே கேள்வி கேட்டார் வினய்.

இவருக்குப் பின்னர் பேசிய இயக்குநர் சரண்,  “‘வினய் அவங்க வீட்ல செல்லப் பிள்ளை. அடிக்கடி ஷுட்டிங்னு மலேசியா, நியூஸிலாந்துன்னு போயிடறாரு.. எப்பவாவது வீட்டுக்கு வரும்போது, பெத்தவங்களை கூப்பிட்டுக்கிட்டு கோவில்களுக்கு ரவுண்டு போயிருவாரு.. அதுனாலதான் மற்ற படங்களின் விழாக்களில் கலந்து கொள்ள முடியாமல் போகுது. மற்றபடி வினய் ரொம்ப ரொம்ப நல்ல டைப்..” என்றார்.

“படத்தின் கதை என்ன..?” என்று கேட்டதற்கு, “நான் அவார்டுக்காக எல்லாம் படம் எடுக்கிறதில்லை. இது நூறு சதவிகிதம் முழுக்க முழுக்க பொழுது போக்குப் படம்தான்.. பொதுவா இரட்டை வேடப் படங்களில் வரும் எல்லா வழக்கமான விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்காது. இதுல அப்படியே டோட்டலா மாத்தியிருக்கேன்..” என்றார் இயக்குனர் சரண்,

படத்தில் நடித்திருக்கும் ‘ரொம்ப சுமார் மூஞ்சி குமார்’ டேனியல் பேசும்போது, “டைரக்டர் எங்ககிட்ட பேசும்போதேல்லாம் சிரிக்கவே மாட்டாரு.. உம்முன்னுதான் இருப்பாரு. ஆனா ஹீரோயின்கள்கிட்ட மட்டும்தான் சிரிச்சு சிரிச்சு பேசுவாரு…” என்றார்.

உடனே பதறி ஓடி வந்து மைக்கை பிடித்த டைரக்டர் சரண், “இப்போ என் பையன் இந்த மேடைல ஹீரோயின்களுக்கு பொக்கே கொடுக்கும்போது, என்ன மனநிலைல இருந்தானோ அதுபோலத்தான் நானும் இருக்கேன்.. ஏதாவது காமெடி டயலாக்கை ஹீரோயின்கள்கிட்ட சொல்லும்போது வேண்ணா நான் சிரிச்சு பேசி இருப்பேன். அவ்வளவுதான்.. பின்னாடி என் மனைவி உட்காந்திருக்காங்க. அதுனால இதை சொல்ல வேண்டியது அவசியமாயிருச்சு..” என்றார் சிரிப்புடன்.

ஆனாலும் சோதனை சரணை விடவில்லை.. அடுத்து பேசிய கதாநாயகி ஸ்வஸ்திகா மிக இயல்பாக, “டைரக்டர் எங்ககிட்ட எப்பவும் அன்பா இருப்பாரு. எப்பவும் சிரிச்சு சிரிச்சு பேசுவாரு…” என்று சொல்ல.. கூட்டம் கலகலத்து.. சரண் மட்டுமே முழித்தார்.

“நிறைய ஹீரோயின்கள் வருஷா வருஷம் அறிமுகமாகிக்கி்ட்டே இருக்காங்க.. ஆனா 4 படத்துக்கு மேல தாங்க மாட்டேன்றாங்களே…?” என்று ஒருவர் கேள்வி கேட்க..  “இவங்கெல்லாம் இங்கேயே இருந்து ஜெயிக்கப் போறாங்களா.. இல்ல தமிழ்நாட்டு திருமதிகளாகி நிக்கப் போறாங்களான்றது உங்க கைலதான் இருக்கு..! ஏன்னா நிறைய காதல்களை உருவாக்கறதும் நீங்கதான். ஜெயிக்க வைச்சதும் நீங்கதான். இவங்களையும் அதே லிஸ்ட்ல சேர்த்து நல்லபடியா கொண்டு போய் சேர்த்திருங்க..” என்றார்.

கிசுகிசு எழுதினாலும் தப்புங்கிறாங்க.. எழுதலைன்னாலும் எழுதுங்கன்னு சொல்றாங்க.. ஒண்ணுமே புரியலைய்யா..!!!

Our Score