விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ செப்டம்பர் 23-ல் ரிலீஸ்..!

விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ செப்டம்பர் 23-ல் ரிலீஸ்..!

தமிழ்ச் சினிமாவின் ரசிகர்களும், விமர்சகர்களும் ஒரு சேர ஆவலுடன் காத்திருக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 23, வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கோபுரம் பிலிம்ஸ்’ சார்பில் மதுரை அன்புச்செழியன் தயாரித்திருக்கும் இந்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயின் ‘இறுதிச் சுற்று’ ரித்திகா சிங். மேலும் நாசர், ஆர்.என்.ஆர்.மனோகர், வேல ராமமூர்த்தி, வி.டி.வி. கணேஷ், சிங்கம்புலி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, யோகி பாபு, ஏ.வெங்கடேஷ், பூஜா பாலு, வினோதினி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், படத் தொகுப்பு – அனு சரண், இசை – கே, கலை – எஸ்.எஸ்.மூர்த்தி, உடை வடிவமைப்பு – ஜெனிபர் ராஜ், உடைகள் – ராமகிருஷ்ணன், பி.ஆர்.ஓ. – நிகில், கதை – அருள்செழியன், இயக்கம் – எம்.மணிகண்டன், தயாரிப்பு – அன்புச்செழியன்.

‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு வெளியாகும் இயக்குநர் எம்.மணிகண்டனின் மூன்றாவது படம் இது என்பதால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

அதோடு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ இப்போதுவரையிலும் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி வருவதால், அவருடைய ரசிகர்களும் அடுத்த வெற்றிக்காக இந்தப் படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

படத்திற்கு சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

இந்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தினை பல வெற்றிப் படங்களை வெளியிட்ட ஸ்ரீகிரீன் புரொடெக்சன்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதிலும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடுகிறது.