ஜி பிலிம் பேக்ட்ரி சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ள படம் ‘ஆமா, நான் பொறுக்கிதான்’.
இப்படத்தின் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். கதாநாயகிகளாக அனிஷா, தீப்தி இருவரும் நடிக்கவுள்ளனர். மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன், பொன்னம்பலம், சாம்ஸ், சுமன் ஷெட்டி, கயல் வின்சென்ட், மும்பை வில்லன் ஜித்தேந்திரசிங் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.
சர்வதேச அளவில் தவறான தொழில் செய்யும் வில்லனுக்கு ஒரு ஜோடியால் சிக்கல் ஏற்படுகிறது. அந்த ஜோடியை தீர்த்துக் கட்ட வில்லன் எடுக்கிற முயற்சியில் பெண் மட்டும் இறந்துபோகிறார். அவள் சாகும் நிலையில் தன்னை இந்த நிலைக்கு ஆளானவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும்படி கணவனிடம் வேண்டுகோள் வைக்கிறார்.
வெகுண்டெழுந்த கணவன் அந்த வில்லனை தேடி மாநிலம் மாநிலமாக, நாடு நாடாக சென்று கண்டுபிடிக்க போகிறான். வில்லனை கண்டுபிடித்தானா, அந்த கணவன் யார் என்பதை மிக அழுத்தமாக அதேநேரம் விறுவிறுப்பான கதையாக எழுதியிருக்கிறார் இயக்குநர் தேவராஜ்.
படம் சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்களிலும் லண்டன், மலேசியா, ஹாங்காங், ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளிலும் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
யூ.கே.முரளி இசையமைப்பில் 4 பாடல்கள் இடம் பெறுகின்றன. சண்டை காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளன.
அப்பாவி கணவனாக இருந்து அதிரடியாக வில்லனை பழிவாங்கும் கேரக்டரில் நடிகர் ஜெய் ஆகாஷ் தனக்கே உரிய பாணியில் நடிக்கயிருக்கிறார். படம் பற்றி ஜெய் ஆகாஷ் பேசும்போது, “நெகட்டிவ் வைபரேஷன் எப்போதுமே சினிமாவில் பாசிட்டிவ் ரிசல்ட் தந்திருக்கிறது. உதாரணத்திற்கு ‘பிச்சைக்காரன்’, ‘நானும் ரவுடிதான்’ இப்படி பல படங்களை சொல்லலாம். இதனால்தான் இந்தப் படத்திற்கு இப்படியொரு தலைப்பினை வைத்துள்ளோம்.
இது மிக, மிக பரபரப்பான படமாக இருக்கும். முதல்முறையாக பெரும் பொருட்செலவில் பல நாடுகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இன்று தொடங்கிய படப்பிடிப்பு 60 நாட்களில் முடியும். 3 கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெறும். விறுவிறுப்பான கதையில் காமெடியும் இருக்கிறது.
இந்தப் படத்தில்தான் முதல்முறையாக நான் 5 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறேன். அதில் ஒன்று பார்வையற்ற கேரக்டர். என்னைப் போலவே நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் பொய்யாக பார்வையற்றவராக வேஷம் போட்டு ஹீரோயினை கரெக்ட் செய்ய வருவார். அந்த காட்சிகள் மிகவும் கலகலப்பாக இருக்கும்.
இந்த ஆண்டின் தொடக்கமே எனக்கு மிக அருமையாக இருக்கிறது. இந்த ‘ஆமா, நான் பொறுக்கிதான்’ படம் என் கேரியரில் மிகப் பெரிய படமாக இருக்கும். இத்திரைப்படம் மே மாதம் வெளியாகிறது..” என்றார் சந்தோஷத்துடன்..!
இந்தப் படத்தின் பூஜையில் ஹீரோ ஜெய் ஆகாஷ், ஹீரோயின்கள் அனிஷா, தீப்தி, நடிகர்கள் பொன்னம்பலம், பவர்ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ், தயாரிப்பாளர்கள் ஷாஜகான், ஆனந்தன், இயக்குநர் தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.