பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா , தனது சொந்த பட நிறுவனமான YSR பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் ‘பியார் பிரேமா காதல்’ என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்.
தற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில்.நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ஆலீஸ் என்ற படத்தைத் தயாரிக்கவிருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா அறிவித்துள்ளார்.
இந்த ‘ஆலீஸ்’ படத்தில் ‘பிக்பாஸ்-2’ நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, ‘பியார் பிரேமா காதல்’ என்ற வெற்றி படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான ரைசா வில்சன் நடிக்கிறார்.
அறிமுக இயக்குநரான மணி சந்துரு இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் இயக்குநர் மணி சந்திரன் தவிர, ஒளிப்பதிவாளர் எழில் அரசு, கலை இயக்குநர் ஏ.ஆர்.ஆர்.மோகன், படத் தொகுப்பாளராக ஏ.கே.அர்ஜுனா நாகாவும் அறிமுகமாகின்றனர். தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவே இசை அமைக்கிறார்.
படம் பற்றித் தயாரிப்பாளர்களில் ஒருவரான இர்பான் மாலிக் பேசும்போது, இந்த ‘ஆலிஸ்’ திரைப்படம் ஒரு பிரமாதமான கதையில் உருவாகப் போகிறது. இயக்குநர் கதை சொன்ன தருணத்திலேயே இந்த படத்துக்கு ஒரு பெரிய கதாநாயகிதான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெற்றியும், அதை தொடர்ந்து பெருகிய ரைசாவின் புகழும்தான் அவரையே தேர்ந்து எடுக்க வைத்துள்ளது. அவருடைய நடிப்பு திறமையும், கட்டுக்கோப்பான தொழில் நேர்த்தியும் அவரையே கதாநாயகியாக்கியது. மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ரசிகர்களுக்கு எங்களது நிறுவனம் தொடர்ந்து நல்ல படங்கள் வெளிவரும் என்று உத்திரவாதம் அளிக்கிறோம்..." என்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான இர்பான் மாலிக்.