தமிழ் சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் எல்லாம் பெரிதாக கவனம் ஈர்ப்பதுண்டு. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயாராகும் படம் ‘ஆலம்பனா’.
‘அலாவுதீன்’ சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் இந்த ‘ஆலம்பனா’ திரைப்படம் தயாராகிறது.
‘விஸ்வாசம்’ படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரும் வெற்றியைக் கண்ட கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸும், தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். இதுவரை வந்த வைபவ் படங்களிலே ‘ஆலம்பனா’தான் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும் வைபவ் கேரியரில் இது மிக முக்கியமான படமாகவும் அமையும்.
படத்தில் முனிஸ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டி மன்றங்களின் ஹீரோவான திண்டுக்கல் ஐ.லியோனியும் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருவது போல காளி வெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். முரளி சர்மா ஒரு கேரக்டரில் நடிக்க, ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.
மிக வித்தியாசமான இந்தக் கதைக் களத்தில் பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது.
சமீபத்தில் வெளியான ‘கோமாளி’ படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தெறிக்கவிட்ட ‘ஹிப் ஹாப்’ ஆதி இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். ‘நெடுநால்வாடை’ படத்தில் கிராமத்தின் அழகை துளியும் குறையாமல் தன் கேமராவிற்குள் கொண்டு வந்த வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ‘ராட்சசனில்’ தன் இமலாய உழைப்பைக் கொடுத்த படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷ் படத் தொகுப்பினை கவனிக்கிறார். மாஸான சண்டைக் காட்சிகளால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பீட்டர் ஹெயின் சண்டை இயக்கத்தைக் கவனிக்க, கலை இயக்குநராக கோபி ஆனந்த் பணியாற்ற இருக்கிறார்.
முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர்.
மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாராகி வரும் இப்படம் ரசிகர்களின் ரசனைக்கு பெரு விருந்தாக இருக்கும் என்கிறது படக் குழு.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ‘ஆலம்பனா’ திரைப்படம் 2020-ம் ஆண்டில் கோடை கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது.