full screen background image

ஆலகாலம் – சினிமா விமர்சனம்

ஆலகாலம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஸ்ரீஜெய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில் நாயகனாக ஜெயகிருஷ்ணாவும், நாயகியாக சாந்தினியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ், இப்படத்தில் நாயகனுக்கு அம்மாவாக முதன்மையான வேடத்தில் நடித்துள்ளார்.

இயக்கம் ஜெயகிருஷ்ணா, இசை என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவு கா.சத்தியராஜ், படத் தொகுப்பு  மு.காசிவிஸ்வநாதன், கலை இயக்கம் தேவேந்திரன், நடன இயக்கம் பாபா பாஸ்கர், அசார், சண்டை இயக்கம் ராம்குமார், வடிவமைப்பு டிசைன் பாய்ண்ட், தயாரிப்பு . ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ், நிர்வாகத் தயாரிப்புமணி தாமோதரன், பத்திரிக்கை தொடர்பு சக்தி சரவணன்.

இப்படத்தை அறிமுக இயக்குநரான ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தனது ரசனையின் மூலமும், தேடல் அனுபவத்தின் மூலமும் சினிமாவைக் கற்றுக் கொண்டு களத்தில் இறங்கி உள்ளார் இயக்குநர் ஜெயகிருஷ்ணா.

காதலும், பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஆலகாலம் என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷங்கள் தற்போதைய உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.  

இந்த விஷங்களின் வீரியத்தால் மனித இனங்கள் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், ஒரு இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையை சூறையாடுகிறது வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம்…!

இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா?.. தாயின் லட்சியம், இளைஞனின் முயற்சி, காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா என்பதே இந்த ஆலகாலம்திரைப்படம் சொல்லும் கதை.

குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுப்பதுடன் எப்படி உறவுகளையும் சீரழிக்கும் என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லி இருக்கும் படைப்புதான் இந்த ‘ஆலகாலம்’.

தற்போதைய பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் குடியை ஒரு கொண்டாட்டமாகவும், கேளிக்கையாகவும் வெளிப்படுத்தி வரும் நிலையில் ‘குடி குடியை கெடுக்கும்’ என்பதை ஓங்கி ஒலிக்கும் படமாக வந்துள்ளது இந்த லகாலம்’ திரைப்படம்.

விழுப்புரம் அருகே உள்ள ‘கிரிமேடு’ கிராமத்தைச் சேர்ந்த யசோதா என்ற ஈஸ்வரி ராவ், தனது கணவன் கள்ளச் சாராயம் குடித்து இறந்து போனதால் தனது மகன் ஜெய்யை ஒழுக்கமானவனாக வளர்த்து வந்திருக்கிறார்.

ஜெய் இப்போது பொறியியல் கல்லூரியில் சேர்கிறான். விடுதி வாழ்க்கை.. புதிய நண்பர்கள்.. புதிய சூழல்.. ஜெய் மகிழ்ச்சியாக இருக்கிறான். அடக்கமான குணத்துடன், படிப்பிலும் கெட்டியாக இருக்கும் ஜெய்யைப் பார்த்து, அவனுடன் படிக்கும் பணக்கார மாணவியான தமிழ் என்ற சாந்தினிக்கு காதல் ஏற்படுகிறது.

அதே வகுப்பில் படித்து வரும் இன்னொரு பணக்கார மாணவன் சாந்தினியை ஒரு தலையாய் காதலிக்கிறான். அந்தக் காதல் கை கூடாததால் கோபத்தில் அவன் பல தந்திரங்கள் செய்து ஜெய்யை குடிகாரனாக ஆக்குகிறான். குடிப் பழக்கத்துக்கு ஆளாகும் ஜெய் கொஞ்சம், கொஞ்சமாக அதில் மூழ்குகிறான்.

இந்த நேரத்தில் இவர்களது காதல் கல்லூரி முழுவதும் தெரிய வர.. காதலர்கள் இருவரையும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்கிறார்கள். பெற்றோரை அழைத்து வரும்படி உத்தரவிடுகிறார் கல்லூரி முதல்வர்.

இந்த நேரத்தில் சாந்தினியின் வீட்டில் கடுமையான சண்டை நடக்க.. சாந்தினி கோபத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்து ஜெய்யிடம் “நாம் உடனேயே திருமணம் செய்து கொள்ளலாம்” என்றழைக்கிறார். ஜெய்யும் இதற்கு சம்மதிக்க கல்யாணமும் ஆகிறது.

இதன் பின்பும் கல்லூரிக்குள் ஜெய்யை அனுமதிக்க முதல்வர் மறுக்க.. கல்லூரி வாழ்க்கையைத் துறந்துவிட்டு தனக்குத் தெரிந்த எலெக்ட்ரிக்கல் வேலைக்கு செல்கிறார் ஜெய். சாந்தினியோ தனது பணக்காரத்தனத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் ஜெய்யுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறார்.

இந்த நேரத்தில் ஜெய்யை மீண்டும் குடிப் பழக்கம் சூழ்ந்து கொள்ள.. அளவான குடி, மிதமான குடியாகி.. பின்பு அதீதமான குடியாகி கடைசியில் பெரும் குடிமகானாகவே ஆகிவிடுகிறான் ஜெய். வயிற்றில் குழந்தையுடன் ஜெய்யுடன் அல்லல்படுகிறாள் தமிழ்.

கடைசியில் இவர்களது காதல் கதை என்னவானது…? ஈஸ்வரி ராவின் நிலைமை என்ன..? ஜெய் திருந்தினானா..? தமிழ் என்னவானாள்..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

கதையின் நாயகனாக ஜெய் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயகிருஷ்ணா தனக்கு வந்த நடிப்பை, தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக முன் வைத்திருக்கிறார். ஒரு அச்சு அசலான குடிகாரனைத் திரையில் காட்சிப்படுத்தி, குடி, குடியை எப்படிக் கெடுக்கிறது என்பதையும்… உறவுகளை எப்படிச் சீரழிக்கிறது என்பதையும்… இயல்பான தனது நடிப்பினால் உணர்த்தியிருக்கிறார்.

குடியினால் முழுவதுமாக குடிகாரனாக பிறகு பிச்சைக்காரனை போல டாஸ்மாக் கடைக்குள்ளேயே ஓசி சரக்கு கேட்பதும், ஊனமான பின்பும்கூட தவழ்ந்த நிலையிலேயே பிச்சையெடுத்துக் குடிப்பதும், குப்பையில் கிடைக்கும் பாட்டில்களிலும், பிளாஸ்டிக் கப்புகளிலும் இருக்கும் ஒரு துளி மதுவை சுவைக்கும் அசிங்கத்தைக்கூட தனது சங்கோஜமில்லாத நடிப்பில் காண்பித்திருக்கிறார் ஜெயகிருஷ்ணா.

தெருவில், டாஸ்மாக் கடை வாசலில், சாலையில் பிச்சைக்காரக் கோலத்தில் ஜெயகிருஷ்ணா நடித்திருக்கும் காட்சிகளைப் பார்த்தால் நிச்சயமாக வேறொரு பெரிய ஹீரோக்கள்கூட இதை செய்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. இதற்காகவே நடிகர் ஜெயகிருஷ்ணாவை எவ்வளவு வேண்டுமானாலும்  பாராட்டலாம்..!

தமிழ் எனும் நாயகியாக நடித்திருக்கும் நடிகை சாந்தினி கல்லூரி மாணவியாகவும், மனைவியாகவும், ஒரு குழந்தைக்குத் தாயாகவும், மூன்றுவிதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார்.

தான் வரும் அனைத்துக் காட்சிகளிலும் தனது சிறப்பான நடிப்பையும் காண்பித்திருக்கிறார் சாந்தினி. தனது தாய், தந்தையை விட்டுவிட்டு காதலனை நம்பி வந்து, அந்தக் காதலனும் குடியே கதி என்று கிடக்க.. தனது பரிதாபமான நிலைமையை பல காட்சிகளில் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி பரிதாபத்தைப் பெறுகிறார் சாந்தினி. பாராட்டுக்கள்..!

ஜெய்யின் தாய் ‘யசோதை’யாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் தனது அனுபவம் மிக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தாய்ப் பாசத்தின் உச்சத்தை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் திரையை மட்டுமல்ல.. படம் பார்ப்போரையும் தனது ஆவேச நடிப்பால் தெறிக்க விட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கா.சத்யராஜின் ஒளிப்பதிவு மீடியம் பட்ஜெட்டுக்குத் தகுந்தாற்போல் கதையுடனேயே பயணப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் தாயே தாயே’ பாடல் தாய்ப் பாசத்தை முன் வைக்கிறது. ‘அன்பிலே உந்தன் அன்பிலே’ பாடல் காதலை வளர்த்தெடுத்திருக்கிறது. ‘குடி மாமா குடி’ பாடல் குடிகாரர்களின் கேளிக்கையைக் கொண்டாடியிருக்கிறது.

மதுவின் ருசி அறியாதவர்கள், அவர்களது நண்பர்கள் மூலமே மது பழக்கத்தை விளையாட்டாகத் தொடங்குகிறார்கள். பின்பு அந்த மது என்ற அரக்கனை தங்களது கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும் திறமையுள்ளவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு அறிவில்லாதவர்கள் மது என்னும் அரக்கனுக்கு அடிமையாகி தங்களது குடும்பத்தைக் கவனிக்காமல், தனது உடலையும் சீரழித்துக் கொண்டு, உற்றார் உறவுகளையும் பகைத்துக் கொண்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் என்பதை இந்தப் படம் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்குள் இயல்பாகவே ஏற்படுகிறது. இதுவே இந்தப் படத்தின் வெற்றி என்றும் கூறலாம்.

இதுவரையிலும் குடியை எதிர்க்கும் வகையில் வந்த எந்தப் படத்திலும் இல்லாத வகையில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வித்தியாசமாக அமைத்ததற்காக இந்தப் படத்தின் இயக்குநரை பெரிதும் பாராட்டுகிறோம்.

பொதுவாக விஷத்தைத்தான் ஆலகாலம்’ என்பார்கள். ஆனால் இந்த மது என்பது ‘மெல்லக் கொல்லும் விஷம்’ என்று கூறும் வகையில் இந்தப் படத்தை எந்தவித சமரசமும் இன்றி எடுத்ததற்காக இயக்குநரை நிச்சயமாகப் பாராட்டலாம்.

ஆனாலும் மதுவை தங்குத் தடையில்லாமல் நாடு முழுவதும் அனுமதித்திருக்கும் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து ஒரு வரி வசனம்கூட இதில் இல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறோம். முதலில் இயக்குநர் கண்டிப்பதாக இருந்தால் மதுவை விற்பனை செய்யும் அரசுகளைத்தான் கண்டித்திருக்க வேண்டும். பின்புதான் மது அருந்துபவர்களைக் குற்றம், குறை சொல்லியிருக்க வேண்டும்.

எப்படியிருந்தாலும் மது என்னும் அரக்கனைப் பற்றி இன்றைய இளைய சமுதாயத்திற்கும் புரியும் வகையில் எளிமையான திரைக்கதையில் சொல்லியிருக்கும் இந்தப் படத்திற்கு நிச்சயமாக மாநில அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

இந்தப் படம் வெறும் படமல்ல.. ஒரு பாடமும்கூட..!

RATING : 4 / 5

 

Our Score