கோடம்பாக்கத்தில் ஒரு சிலர் எப்படி ஒரே நாள் இரவில் மார்க்கெட்டின் உச்சத்துக்குப் போனார்கள் என்பதை ஆச்சரியத்துடன்தான் பார்க்க வேண்டும். அதே ஆச்சரியத்துடன்தான் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இன்னமும் லைம்லைட்டுக்கு வர முடியாமல் தவிக்கும் நடிகர்களையும் பார்த்தாக வேண்டும்..
இந்த துரதிருஷ்ட ஹீரோக்களில் ஜெய் ஆகாசும் ஒருவர்.. ‘ரோஜாவனம்’, ‘பெண்கள்’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘இனிது இனிது காதல் இனிது’, ‘ராமகிருஷ்ணா’, ‘குருதேவா’, ‘செவல்’, ‘த்ரீ ரோஸஸ்’, ‘கிச்சா வயசு 16’, ‘காற்றுள்ளவரை’, ‘அடடா என்ன அழகு’, ‘ஆயுதப் போராட்டம்’, ‘காதலன் காதலி’ என்று பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெய் ஆகாஷ் இப்போது தமிழிலேயே ‘வின்’ மற்றும் ‘ஆனந்தம்’ ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ‘வின்’ படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே தயாரிக்கப்பட்டு வருகிறதாம். தெலுங்கு மொழி படத்திற்காக சென்ற ஆண்டே டோலிவுட்டில் பிரஸ் மீட்டெல்லாம் முடிந்த பின்பு தமிழுக்காக இப்போதுதான் இங்கே வந்திருக்கிறார்கள். பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், மெர்குரி சத்யா, தினேஷ் நாயர், காவ்யா, கெளசல்யா, ஏஞ்சல்சிங், நிகிதா சக்ரி என்று இரு மொழி கலைஞர்களும் நடித்திருக்கும் இப்படத்திற்கு பிரபல மெல்லிசை குழு இயக்குநரான யு.கே. முரளி இசையமைத்துள்ளார். எழுதி இயக்கியிருக்கிறார் வினோத்குமார்..
சஸ்பென்ஸ் திரில்லர் வகையைச் சேர்ந்த இப்படத்தில் சங்கர் கணேஷ், தேவா, ரைஹானா மூவரும் சேர்ந்து பாடிய ஒரு குத்து பாடல், காதை கிழித்துவிட்டது..! இந்தப் பாடலுக்கான ஆட்டத்தையும் பார்த்தபோது, சங்கர் கணேஷுக்கு என்ன வயது என்றுதான் கேட்க தோன்றுகிறது..! ஆனாலும் இது ரொம்ப ஓவரா இல்லீங்களாண்ணா..?
ஜெய் ஆகாஷ் தமிழ், தெலுங்கு இரண்டிலுமே பல ஆண்டுகளாக முட்டி மோதியும் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல் தடுமாறுகிறார்.. சிறந்த இயக்குநர்கள் மூலமாக, சிறந்த கதைகளில் பயணம் செய்தால்தான் அந்த இடத்தைப் பிடிக்க முடியும் என்பதை யாராவது அவரிடம் சொன்னால் தேவலை..!!!