full screen background image

ஆடி மாத திருமணத்தால் ஆடிப் போகும் நாயகியின் வாழ்க்கை..!

ஆடி மாத திருமணத்தால் ஆடிப் போகும் நாயகியின் வாழ்க்கை..!

நிலா புரோமோட்டர்ஸ் சார்பில் துரை சுதாகர் தயாரித்துள்ள படம் ‘ஆடி.’

இதில் தயாரிப்பாளரான துரை சுதாகரே இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.  டோனா என்கிற புதுமுகம் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

aadi-3

இசை – பழனி பாலு, ஒளிப்பதிவு – ராஜன், நடனம் – ராதிகா, பாடல்கள் – விக்டர் தாஸ், கார்த்திக், பாலு, சண்டை பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், எழுத்து, இயக்கம் – எஸ்.எம்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் எஸ்.எம்., “தமிழர்களின் திருமணத்தில் பொதுவாக ஆடி மாதத்தில் திருமணம் நடக்காது. அந்த மாதத்தில் திருமணம் நடந்தால் முதல் குழந்தை பிறக்கும் நேரம் உச்சிவெயில் காலமாக இருப்பதால் அது தவிர்க்கப்பட வேண்டும் என்று விஞ்ஞான ரீதியாகவும் காரணம் சொல்வார்கள்.

ஆனால் சந்தர்ப்ப, சூழ்நிலையால் ஆடி மாதத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டி வந்து அதன் பின்பு அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் சூறாவளி என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

நாயகன் ஒரு தப்பாட்டக் கலைஞன். நாயகி அவனது சொந்த அக்கா மகள். அக்கா மகள் மீது காதல் கொண்டு வாழ்கிறான் நாயகன். அதே ஊர்ப் பண்ணையாரின் மகன் ஒரு காமாந்தகன். பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கையில் வீழ்த்தும் குணம் உள்ளவன். தனது காமப் பார்வையை நாயகி மீதும் செலுத்த, பொங்கி எழுந்த அவள் அந்த அயோக்கியனை எச்சரித்து விரட்டுகிறாள்.

aadi-2

முள் மீது சேலை விழாவிட்டால்கூட…. முள் செடி பக்கம் போன சேலை எப்படியும் கிழிந்து இருக்கும் என்று எண்ணும் உலகை எண்ணி பயப்படுகிறாள் நாயகியின் தாய். ‘நடந்த சம்பவத்தை உன் மாமனிடம்கூட சொல்லாதே..’ என்று நடக்காத சம்பவத்துக்கு ஒரு சத்தியம் வாங்குகிறாள் தாய்.

அதோடு, பிரச்சினை பெரிதாவதற்குள் திருமணத்தை நடத்த விரும்பி, யாரும் திருமணம் நடத்த விரும்பாத ஆடி மாதத்தில் திருமணம் செய்து வைக்கிறாள். ஆனால் ஆடி வேலையை காட்டியதோ இல்லையோ ஆட்கள் வேலையைக் காட்டுகிறார்கள்.

வீண் ஜம்பத்துக்காக வில்லன், நான் எப்போதோ நாயகியை அனுபவித்து விட்டேன் என்று ஊரில் செய்தியைப் பரப்ப அது ஹீரோவின் காதில் வந்து விழுகிறது. அதை நம்பி அவனும் தன் மனைவியிடம் விளக்கம் கேட்கிறான். தவறு ஏதும் நடக்கவில்லை என்று தெரிந்து கொண்டு நாயகன் கேட்பதாக எண்ணும் நாயகி, ‘அம்மா சத்தியம் வாங்கியதால்தான் சொல்லவில்லை’ என்கிறாள்.

aadi-7

ஆனால், நாயகி கெட்டுப் போனதாக எண்ணும் நாயகன் தன் மனைவியை வார்த்தைகளால் காயப்படுத்த, மனம் நொறுங்கும் நாயகி அடுத்து என்ன முடிவெடுத்தாள் என்பதே திரைக்கதை. துன்பம் தொடரும் அவள் வாழ்வில், ஆனந்தம் ஆடி வந்ததா என்பதே இந்த ஆடி படத்தின் கதை..

முற்றிலும் புதுமுகங்களுடன் தமிழ்த் திரையுலகம் மறந்தே போயிருக்கும் கிராமியத்தனம் நிறைந்த கதையுடனும், காட்சிகளுடனும் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ‘ஆடி’ திரைப்படம், ஆடி அசைஞ்சு இல்லாமல் மிக விரைவாகவே திரைக்கு வரவிருக்கிறது..” என்றார்.

Our Score