ஆடாம ஜெயிச்சோமடா – சினிமா விமர்சனம்

ஆடாம ஜெயிச்சோமடா – சினிமா விமர்சனம்

இந்தியாவில் ஒரு மதமாகவே பரவியிருக்கும் கிரிக்கெட் மோகத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் குறுக்குவழி வெளியானதில் இருந்தே கிரிக்கெட் மீதான மோகம் நாட்டில் குறைந்து கொண்டே போகிறது. அந்த கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் என்கிற ஒரு விஷயத்தை மையக் கருத்தாக எடுத்துக் கொண்டு தன்னுடைய நடிகர், நடிகைகளை வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் ஆடியிருக்கிறார் இயக்குநர் பத்ரி.

கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் விஷயங்கள் மீடியாக்களில் லீக்கானதால் இது தொடர்பாக நிறைய பேரை கைது செய்த சென்னை போலீஸுக்கு இந்தக் கூட்டணியின் தலைவன் ஆல்பர்ட்டை மட்டும் கைது செய்ய முடியவில்லை. ஆல்பர்ட் யாரென்றே தெரியவில்லை. வெறும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது என்றாலும், இந்த வழக்கில் தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்று சென்னை கமிஷனரான கே.எஸ்.ரவிக்குமார் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.

கருணாகரன் ஒரு கால் டாக்சி டிரைவர். ஒரு நாள் இவரது காரில் பயணமாகிறார் தயாளன் என்னும் மேட்ச் பிக்ஸிங் புக்கி. இந்த புக்கி கொஞ்சம் அப்படி இப்படி பார்ட்டியும்கூட.. வண்டியை கொஞ்சம் தள்ளி நிறுத்தியதால் கண்டுபிடிக்க முடியாமல் தனது பை, செல்போனை டிரைவர் திருடிச் சென்றுவிட்டதாக கருணா மீது போலீஸில் புகார் கொடுக்கிறார் தயாளன்.

ஆனால் கால்டாக்சி அலுவலகத்தின் உதவியால் கருணாவை கண்டுபிடிக்கிறார். இருவரும் மறுபடியும் ராசியாக.. தயாளனுக்கு அன்றைய இரவுவரையிலும் டிரைவர் பணியாற்றுகிறார் கருணாகரன். கருணாவுக்கு இருக்கும் பணத்தேவையை அறிந்த தயாளன் தான் அதற்கு உதவி செய்வதாகவும் மறுநாள் ஹோட்டலுக்கு வரும்படியும் சொல்லிவிட்டுப் போகிறார்..

மறுநாள் கருணாகரன் ஹோட்டலுக்கு போக.. அங்கே தயாளன் மர்டர்.. போலீஸ் கருணாவை வளைத்துப் பிடிக்க அதற்குள்ளாக மும்பை போலீஸ் வேடத்தில் நரேன் அண்ட் கோ கருணாவை இழுத்துக் கொண்டு போய் விசாரிக்கிறது.. இப்போதுதான் தயாளனின் உண்மை முகம் கருணாகரனுக்கு தெரிகிறது.

தயாளன் கிரிக்கெட் புக்கி என்பது போலீஸுக்குத் தெரிய.. கேஸ் சிக்கலாகிறது.. இந்த நேரத்தில் நரேன் கும்பலிடமிருந்து தப்பித்த கருணாகரன் அதிர்ஷ்டவசமாக கமிஷனர் ஆபீஸுக்கு வந்து நிற்க.. போலீஸுக்கு அல்வா கிடைப்பது போலாகிறது.. கருணாவை தேடி மும்பை போலீஸ் நரேனும் வந்து அங்கேயே வந்து சேர.. அவர்களையும் தூக்குகிறது போலீஸ்..

இப்போது அந்த ஆல்பர்ட் யார் என்பதை கண்டறிவதுதான் போலீஸின் முதல் வேலையாக இருக்கிறது.. கருணா தயாளனை தான் கொலை செய்யவில்லை என்கிறார். நரேன் தனக்கும் மேட்ச் பிக்ஸிங்கிற்கும் சம்பந்தமில்லை என்கிறார்.. போலீஸ் நம்ப மறுக்கிறது..!  தயாளனை கொலை செய்தது யார்..? அந்த ஆல்பர்ட் யார்..? கடைசியில் எப்படி அது நிரூபணமாகிறது என்பதை மிக சுவாரஸ்யமாக எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் பத்ரி.

மேன் ஆஃப் தி மேட்ச் விருது கண்டிப்பாக சிம்ஹாவுக்குத்தான்.. மனுஷன் வருகின்ற காட்சிகளிலெல்லாம் பவுண்டரியும், சிக்ஸருமாக  அடித்துத் தள்ளியிருக்கிறார். புத்திசாலி போலீஸாக தன்னை நினைக்கும் ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒரு சொதப்பலாகிவிட அதற்கு அவர் காட்டும் ரியாக்சன்கள் அனைத்தும் சிரிக்க வைப்பவை..

தயாளனின் டைரி என்று சொல்லி ஒரு டைரியைக் காட்டி அதில் இருக்கும் காட்சிகளை சீனாக தொகுத்து இடையிடையே ரவிக்குமாரால் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தொடரும் அந்தக் காட்சிகள் செம பரபரப்பு. இதைவிட அந்த டைரி தன்னுடையது என்று சொல்லி நடிகர் சேஷு வந்து நிற்கும் காட்சியும், இதற்கு சிம்ஹா நெளியும், நெளிப்பும் ஆஹா.. ஓஹோதான்.. உம்மணாமூஞ்சிகளையும் சிரிக்க வைத்திருக்கிறார். இதேபோல் டெல்லி போலீஸ் என்று தெரியாமல் அஸிஸ்டெண்ட் கமிஷனர் மீது கை வைத்துவிட்டு பின்பு ஸாரி ஸார் என்று அசடு வழிய நிற்கும் காட்சியையும் மறக்க முடியாதது.. இவருடைய ஸ்டண்ட் காட்சிகளை நடத்திவிட்டு பின்பு அதன் எதிர் விளைவுகளை ரவிக்குமார் விவரிக்கும்போது.. செம செம..

கருணாகரன் அமைதியாக அவ்வப்போது அடிக்கும் சிங்கிள் டிஜிட் விட்டுகளும் படத்தை சுவாரஸ்யப்படுத்தியிருக்கின்றன. அவருடைய காதல் எபிசோட் மிக இனிமையான, இளமையான ஸ்டோரி.. எந்தவித குழப்பமும் இல்லாமல் வரும் காதலும்.. அது கல்யாணத்தில் முடிந்து மறுபடியும் அனர்த்தம் ஆரம்பிக்கும்விதமும் மிக யதார்த்தம். இடைவேளைக்கு பின்பு வரும் அந்த டூயட்டுதான் படத்தின் வேகத்திற்கு கொஞ்சூண்டு தடையாக இருந்தது. அந்தப் பாடலை நீக்கியிருக்கலாம்..!

சிம்ஹாவுக்கு சரியான ஜோடி கே.எஸ்.ரவிக்குமார். இவர் சும்மாவே நல்லவனா.. கெட்டவனா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வசனங்களை பேசுவார். இதிலும் அப்படியே.. சிம்ஹாவை வாரு வாருவென்று வாருவதில் ரவிக்குமார் காணாமல் போய் உண்மையான ஏதோவொரு போலீஸ் ஆபீஸர்தான் நினைவுக்கு வருகிறார்.. இடம் மாறி உட்கார்ந்துவிட்டு இருவரும் பேசுகின்ற அந்த காட்சியை அவ்வளவு சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறார் இயக்குநர்.. அனைத்து பாராட்டுக்களும் இயக்குநருக்கே..!

நரேன் இந்தப் படத்தில் நடிக்க முன் வந்திருப்பதை பெரிய விஷயம்தான். ஏனெனில் அவரைவிட ஜூனியரான சிம்ஹா கையால் அடி வாங்குவதுபோல நடிப்பதென்றால் மிகப் பெரிய மனசு வேணும்.. நரேன் ஸாருக்கு அது வாய்த்திருக்கிறது.. வழக்கம்போலவே நடித்திருக்கிறார். சூறாவளி ஹீரோவை வைத்து படமெடுத்து அவர் படும் கஷ்டத்தை வசனத்தாலயே சொல்லி சிரிக்க வைத்திருக்கிறார்.

உம்மணாமூஞ்சி பைனான்ஸியர் ஆளவந்தாராக ராதாரவி. சூறாவளி படத்தின் டிரெயிலர் பார்த்துவிட்டு இவர் காட்டும் எக்ஸ்பிரஸன்கள் அனைத்தும் தியேட்டர் ஆடியன்ஸுடையது. முக பாவனையிலேயே நடிப்பைக் காட்டி அந்தக் காட்சியை ரசிக்க வைத்திருக்கிறார் இளையவேள்.

தயாளனாக பாலாஜி.. தனது நடிப்பு கேரியரில் மிக முக்கியமான படமாக இதனை அவர் சொல்லலாம். இவர்தான் படத்தின் முதுகெலும்பு.. இவரை வைத்துதான் படத்தின் கதையை ஓடுகிறது.. last supper மாதிரி அந்த கடைசி சிரிப்பு கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.. சேட்டின் மனைவியிடமிருந்து ஊக்கை வாங்கி ‘அந்த’ இடத்தில் சொருகிவிட்டு அவர் கிளம்பும்போதே அவரது கேரக்டர் ஸ்கெட்ச் தெளிவாகிறது..! வெல்டன் பாலாஜி ஸார்..!

விஜயலட்சுமி சாதாரண ஹீரோயின்தான்.. ஆனால் கிளைமாக்ஸில் இவரால்தான் கருணாகரன் மட்டுமல்ல படமே தப்பிக்கிறது.. பாடல் காட்சிகளில் வழக்கமான ஹீரோயின்போல இருக்கிறார். அப்படியிருந்தும் இவருக்கு படங்கள் கிடைக்காதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

படத்தில் மிக முக்கியமான ஒரு சமூக விஷயத்தை அக்கறையுடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பத்ரி. விஜயலட்சுமி தனது காதலர் கருணாகரனிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். அது வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியான ஒரு பாத்ரூம். அந்தக் காட்சியை படமாக்கியவிதத்திலும், விஜயலட்சுமியின் மிக யதார்த்தமான நடிப்பிலும் அந்தக் காட்சியின் உண்மைத்தனத்தை உணர முடிந்த்து.. அந்த ஸ்டோர் ரூம் போன்ற வீடுகளில் வசித்த கொடூரத்தை அனுபவித்தவர்கள் நிச்சயம் இந்தக் காட்சியை ரசிப்பார்கள். கோடிக்கணக்கணக்கான இந்தியப் பெண்களின் மனதில் ஒளிந்திருக்கும் ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் பதிவு செய்திருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு அன்பான ஷொட்டு..!

ஷீன் ரோல்டன் பின்னணி இசையை பல இடங்களில் கேட்காமல் வைத்து காட்சிகளை  ரசிக்க வைத்திருக்கிறார். இதுக்காகவே அவருக்கு ஒரு ‘ஓ’ போடணும்..! பாடல்கள் பரவாயில்லை ரகம்.. அதை யாரு கேட்டா என்கிற நிலைமைதான் படத்துல.. அடுத்தது என்ன.. அடுத்தது என்ன..? என்கிற ஒரு திரில்லர் மனநிலைக்கு சிம்ஹாவும், கருணாவும் கொண்டு வந்துவிட.. இதையெல்லாம் யார் கேட்டா..?

வசனங்கள் படத்தின் இன்னொரு பலம். கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்தவரை எழுத வைத்தால்தான் சரியாக இருக்கும் என்றெண்ணி நடிகர் மிர்ச்சி சிவாவை எழுத வைத்திருக்கிறார் இயக்குநர் பத்ரி. சிவாவும் கிரிக்கெட் ஊழல் பற்றி தயாளன் மூலமாக ஒரு சின்ன காட்சி மூலம் விளக்குவது சாதாரண ரசிகனுக்குக்கூட நச் என்று புரிந்திருக்கும்..! சில இடங்களில் வசனங்கள் எல்லை மீறிச் சென்றிருக்கின்றன என்பதையும் கூறத்தான் வேண்டும்.. தவிர்த்திருக்கலாம்..!

சீரியஸ் படங்களை இயக்குவது சுலபம்.. ஆனால் காமெடிதான் மகா கஷ்டம்.. காமெடி நடிகர்களையே வைத்து எடுத்தாலும் மிகச் சரியான இயக்கமும், எடிட்டிங்கும் சேர்ந்தால்தான் அதில் காமெடியே உருவாகும். எடிட்டர் கே.ஜே.வெங்கட்ரமணனின் படத்தொகுப்பு வேலைக்கு மிகப் பெரிய சல்யூட்.

கிளைமாக்ஸில் தயாளனை கொலை செய்தது யார் என்பதுதான் மிகப் பெரிய சஸ்பென்ஸ். அதனை படத்தை பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.. அவசியம் பார்க்க வேண்டிய படமும்கூட.. இது போன்ற படங்களை பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக சினிமா பார்க்கும் ஆர்வம் தொடர்ந்து கூடும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. அந்த வரிசையில் இயக்குநர் பத்ரிக்கு நிச்சயமாக நன்றி சொல்ல வேண்டும்..!

வாழ்க வளர்க..!

அவசியம் பாருங்கள் மக்களே..!

Our Score