full screen background image

‘ஆடை’ – சினிமா விமர்சனம்

‘ஆடை’ – சினிமா விமர்சனம்

V Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் நாயகியாக நடிகை அமலா பால் நடிக்கிறார். மேலும், ரம்யா, ரஞ்சனி, விவேக் பிரசன்னா, ரோகித் நந்தகுமார், கிஷோர் தேவ், டி.எம்.கார்த்திக், பிஜிலி ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், இசை – பிரதீப் குமார், ஓர்கா, பாடல்கள் – பரத் சங்கர், படத் தொகுப்பு – சபீக் முகமது அலி, தயாரிப்பு வடிவமைப்பு – விதேஷ், சண்டை இயக்குநர் – ஸ்டன்னர் சாம், நடன இயக்கம் – எம்.ஷெரீப், அபு, உடைகள் வடிவமைப்பு – ஜெ.கவிதா, கிராபிக்ஸ் – ஹரிஹரசுதன், ஒலி வடிவமைப்பு – சம்பத் அல்வார், ஒலிக் கலப்பு – டி.உதயக்குமார், வண்ணம் – ஜி.பாலாஜி, புகைப்படங்கள் – ரஞ்சித், சுரேந்தர், ஒப்பனை – இம்தியாஸ் மோனாலி(அமலாபால்) வினோத், தயாரிப்பு நிர்வாகம் – எம்.செந்தில், இணை தயாரிப்பு – கிருபாகரன், தயாரிப்பு – வி ஸ்டூடியோஸ், தயாரிப்பாளர் – விஜி சுப்ரமணியன்.

திரை விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களை பெற்ற  ‘மேயாத மான்’ படத்தை இயக்கிய இயக்குநரான ரத்னகுமார்தான் இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது திரைப்படமாகும்.

சுதந்திரக் கொடி என்னும் காமினி ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பிரான்க் ஷோ என்னும் காமெடி ஷோவில் பங்கேற்கும் காம்பயர். எதற்கும் துணிந்தவர். சிகரெட், மது என்று ஆண்களுடன் சரிக்கு சமமாக இருக்கக் கூடியவர். வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு ராயல் என்பீல்டு வண்டியை பந்தாவாக ஓட்டிச் செல்லும் ஆணுக்குப் பெண் சளைத்தவரில்லை என்கிற கொள்கையுடையவர்.

அவருடைய அலுவலகத்தை அன்றைக்குக் காலி செய்யச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனால் அலுவலகத்தில் அனைத்தையும் காலி செய்துவிட்டு அனைவரும் வெளியேறுகின்றனர். ஐந்தாண்டுகள் அதே அலுவலகத்தில் அமர்ந்து குப்பை கொட்டியதால் அந்த பீலிங்கில் இருக்கிறார்கள் காமினியும் அவளது நண்பர்களும்.

அதே காலியான அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். கேலி, கிண்டலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதுவின் தாக்கம் அதிகமானதால் அனைவருமே தள்ளாட்டத்தில் இருக்கிறார்கள்.

விடிகிறது. மறுநாள் காலை அதே பில்டிங்கில் அதே இடத்தில் நிர்வாணமாகக் கண் விழிக்கிறாள் காமினி. அவளைச் சுற்றி யாருமே இல்லை. அவளுடைய நண்பர்கள் அனைவருமே வீட்டுக்குப் போய்விட்டதாக அவளுக்குத் தோன்றுகிறது.

தன்னுடைய உடைகள் எங்கே என்று தேடுகிறார்கள். ஒரு சின்ன துண்டு பேப்பர்கூட கிடைக்கவில்லை. அங்குமிங்கும் ஓடுகிறாள். தேடுகிறாள்.. தன்னுடைய நிர்வாணத்தை மறைக்க ஏதாவது கிடைக்குமா என்று பரபரக்கிறாள் எதுவுமே கிடைக்கவில்லை.

அவளுடைய அம்மா அவளுக்குப் போன் செய்து களைத்துப் போகிறாள். திரும்பவும் போன் செய்ய முயல்கிறாள் காமினி. ஆனால் பேலன்ஸ் இல்லாததால் அதுவும் முடியவில்லை. பில்டிங்கை சுற்றி வருகிறாள். அப்போது எதிர் பில்டிங்கில் இருந்த ஒரு ஆள் அவளைப் பார்த்துவிட்டு செல்போனில் படமெடுக்கிறான்.

அவளைத் தேடி அந்த பில்டிங்கிற்கு வருகிறான். ஆனால் அவனை உள்ளேவர விடாமல் செய்து கதவைப் பூட்டி வைக்கிறாள் காமினி. அந்த ஆள் விட்டுவிட்டுப் போன உணவு ஹோம் டெலிவரி விளம்பரத்தைப் பார்த்து அவர்களுக்கு போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்கிறாள்.

வரும் ஆளை அடித்து வீழ்த்திவிட்டு அந்த ஆளின் உடையை தான் அணிந்து கொண்டு இந்த பில்டிங்கைவிட்டு வெளியேறலாம் என்று திட்டமிடுகிறாள். ஆனால் வந்தது ஒரு பெண். அவளது உடையைக் கழற்ற முற்படும்போது ஏற்படும் சண்டையில் அந்த டெலிவரி பெண்ணை தாக்குகிறாள் காமினி. அவள் மயக்கமாகிறாள். ஆனால் செத்துவிட்டாள் என்று நினைக்கிறாள் காமினி.

அதே நேரம் அந்த பில்டிங்கில் திருடுவதற்காக உள்ளே வரும் இரண்டு திருடர்கள் மயங்கிக் கிடக்கும் டெலிவரி பெண்ணைப் பார்த்துவிட்டு பொணம்.. கொலை என்று நினைத்து போலீஸுக்கு போன் செய்து சொல்கிறார்கள்.

போலீஸும் வந்து பில்டிங்கை சுற்றி வளைக்கிறது. காமினியும் அதே பில்டிங்கிற்குள் நிர்வாணத்தில் இருந்து தன்னை மறைக்க வேண்டியும், அங்கிருந்து தப்பிக்கவும் பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள். கடைசியில் என்னாகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் மிச்சம் மீதிக் கதை.

முதலில் நடிகை அமலாபாலுக்கு ஒரு மிகப் பெரிய நன்றியும், பாராட்டுக்களும். இது போன்ற கதையில் நடிக்க எந்தவொரு பெரிய நடிகையும் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். அமலாபால் தைரியமாக இதில் நடித்துள்ளார். அவருடைய தைரியத்திற்கு நமது பாராட்டுக்கள்.

இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் 95 சதவிகிதக் காட்சிகளில் அவர் நிர்வாணமாகத்தான் காட்சியளிக்கிறார். படமாக்கப்படும்போது ஸ்கின் டிரெஸ்ஸை பயன்படுத்தியிருக்கிறார் என்பது சில காட்சிகளின் கோணங்களில் தெரிகிறது என்றாலும் இதற்கே மிகப் பெரிய மனது வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.

பிரான்க் ஷோக்களுக்காக விதம், விதமான காட்சியமைப்புகளில், கதைகளில் தன்னைப் பொருத்திக் கொண்டு மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார் அமலாபால். அதிலும் முதல் காட்சியில் சப்வேயில் பேய் வடிவத்தில் மேக்கப் போட்டுக் கொண்டு அவர் செய்யும் அலப்பறை ஐயோடா சாமி என்று கதற வைக்கிறது.

தன்னுடைய பழமைவாத அம்மாவைச் சமாளிக்கும்விதமாய் வீட்டில் அவர் நடந்து கொள்ளும்விதமும், உடன் வேலை செய்யும் தோழர்களிடம் நடந்து கொள்ளும்விதத்திலும் இந்தக் காலப் பெண்களின் சுதந்திரப் போக்கு தெளிவாகத் தெரிகிறது.

தன்னுடைய நிர்வாண உடலுடன் அவர் படும் அல்லல்களும், கஷ்டங்களும் அவர் காட்டு்ம் நடிப்பின் ஒவ்வொரு ஷாட்டிலும் தெறிக்கிறது. கேரக்டர் ஸ்கெட்ச் இதுதான் என்கிறபோது அதற்குக் குறைவில்லாமல் நடித்து தன் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார் அமலா பால்.

இவருடைய அம்மாவான ரஞ்சனி.. வழக்கமான அம்மாவாக.. சுதந்திரக் கொடி என்று அழகான பெயர் வைத்து அடக்கமாக வளர்த்தால் இப்படி அடங்காம திரியிறியே என்று புலம்பி புலம்பியே கடைசிவரையிலும் பரிதாபமான ஒரு அம்மாவை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்.

தன்னை பாத்ரூமில் வைத்துப் பூட்டியதே அமலாபால்தான் என்பது தெரிய வரும்போது ரம்யா காட்டும் அதிர்ச்சியும் அதைத் தொடர்ந்து நடக்கும் அடிதடி சண்டையும் டாஸ்மாக் பாரில் நடப்பது போலவே தெரிந்தது. ரம்யாவுக்கும் இதில் போல்டான கேரக்டர்தான்.

நண்பர்களில் விவேக் பிரசன்னாவுக்கு பிரசன்னமான ஒரு கேரக்டர். சம்பவம் என்று சொல்லி சக தோழனை கிண்டலடிப்பதில் துவங்கி.. நள்ளிரவில் போலீஸிடம் மாட்டி அவர்களையே ஏக கிண்டல் செய்து கடைசியில் லாக்கப்பில் தர்ம அடி வாங்கிவிட்டு கதையை மாத்திப் போட்டு டிக்டாக்கில் ஒப்பாரி வைக்கும் காட்சி கலகலப்பானது.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவுதான் படத்தில் மிகப் பெரிய பலம். இடைவேளைக்கு பின்பு அமலா பாலின் தவிப்பை, கோபத்தை, ஆற்றாமையை.. புலம்பலை மிகச் சரியாக அவருடைய மறைக்கப்பட்ட நிர்வாண உடல் மொழியுடன் பதிவாக்கியிருக்கிறார். இரவு நேரக் காட்சிகளின் கலர் டோனைக் கூட்டி மதுவருந்திய நிலையில் இருக்கும் தோழர்களின் அக்கப்போர் சண்டை காட்சிகளை படமாக்கியிருப்பது ருசிகரம்.

பிரதீப்குமாரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். காட்சிகளே அடுத்து என்ன என்று ஏக்கத்தைத் தோற்றுவித்திருக்கும் சூழலில் பாடல்கள் தேவையே இல்லை என்கிற மனநிலையில் இருந்ததால் எதையும் கேட்கும் சூழலில் பார்வையாளர்களும் இல்லை.

ஆனால் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் இசையமைப்பாளர். பிரான்க் காமெடி ஷோக்களின் காட்சிகளிலும், நங்கேலியின் சோகக் காட்சியை சொல்லும் காட்சியிலும் பின்னணி இசைதான் படத்திற்கான கனத்தைக் கொடுத்திருக்கிறது.

சபீக் முகமது அலியின் படத் தொகுப்பில் இன்னும் நிறையவே காட்சிகளை ரத்து செய்திருக்கலாம். குறிப்பாக அமலா பால் அந்தக் கட்டிடத்திற்கு மாட்டிக் கொண்டு சுத்தும் காட்சிகள் ரொம்பவே ஓவராக இருக்கிறது. அவைகளை பாதிக்குப் பாதியாக கட் செய்து காக்காவுக்கு போட்டிருந்தால் திரைப்படம் இன்னும் கொஞ்சம் கிரிப்பாகவே இருந்திருக்கும்.

இடையில் மதுவருந்திவிட்டு ஒருவருக்கு போன் செய்து பேசும் காட்சியில் வேலைக்காரப் பெண் தான் விளக்குப் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லும் காட்சியெல்லாம் இந்தப் படத்திற்குத் தேவையா..? டூ மச்சான காமெடி சீன்.

எல்லாம் இயக்குநரின் விருப்பப்படியே சரியாக இருந்தாலும், பார்வையாளர்களாகிய நமக்கு தோன்றுவதெல்லாம் “இயக்குநர் ஏன்யா இப்படி குழப்பியிருக்காரு..?”
என்பதுதான்.

பிரான்க் ஷோக்கள் என்கிற பெயரில் தனி மனிதர்களின் கோபத்தையும், ஆத்திரத்தையும் தூண்டிவிட்டு அவர்களை கிண்டல் செய்வது எந்தவிதத்திலும் மீடியா நிகழ்ச்சியாக இருக்காது. அது போன்றவைகளை அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று பல காலமாக குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

15 ஆண்டுகளுக்கு முன்பாக சன் தொலைக்காட்சியும், ராஜ் தொலைக்காட்சியும் இது போன்ற பிரான்க் ஷோக்களை நடத்திக் கொண்டிருந்தபோது, இதனால் தமிழகத்தில் தினமும் எழுந்த சலசலப்புகளை வைத்து நடிகர் பார்த்திபன் ‘குடைக்குள் மழை’ என்ற படத்தையே எடுத்துக் கொடுத்தார். அதே கருவைத்தான் இயக்குநர் ரத்னகுமாரும் இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார்.

நங்கேலி என்ற அந்த கிராமத்துப் பெண் நகரத்திற்கு தேர்வு எழுத பல நூறு கிலோ மீட்டர்களை கடந்து வந்து தேர்வு எழுதச் சென்ற சமயத்தில் இவர்கள் நடத்திய பிரான்க் ஷோவால் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டு அதன் விளைவாய் பழிக்குப் பழியாய் அது போன்ற ஷோக்களால் ஒரு அப்பாவிகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லும்விதமாய் காமினிக்குக் கிடைப்பதுதான் இந்த நிர்வாண தண்டனை என்று இயக்குநர் கடைசியாய் சொல்கிறார்.

இப்படி ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணே அவமானத்தை உண்டு செய்யலாமா என்கிற கேள்வியும் இதனால் எழுகிறதே இயக்குநரே..? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்..? பதிலடி கொடுக்க நிர்வாணம்தான் கிடைத்ததா..? அப்படியானால் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்துவதுதான் அவளுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அவமானம் என்று நீங்களும் கருதுகிறீர்களா..? இப்படித்தான் இயக்குநரிடம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.

படத்தின் துவக்கத்தில் 18-ம் நூற்றாண்டில் கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக இருந்த ‘முலை வரி’ என்னும் கொடுமையான வரி விதிப்புத் திட்டத்தை எதிர்க்கும் நங்கேலி என்ற புரட்சிப் பெண்ணின் கதையை சித்திரமாக காட்டுகிறார்கள்.

உண்மையில் நடந்த கதையில் முலை வரிக்கான எதிர்ப்பைக் காட்டுவதற்காகத்தான் அந்தத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் தனது முலையை தானே வெட்டி எறிந்தாள். இது இன்றைக்கும் கேரளாவில் வரலாற்று சாதனையாகவும், சம்பவமாகவும் சொல்லப்படுகிறது.

இதே பிரச்சினை சீலை அணியும் போராட்டமாகவும் பிற்காலத்தில் வெடித்தது. அப்போதும் தாழ்த்தப்பட்ட  பெண்கள் மார்பை மறைத்து சேலை அணியக் கூடாது என்று திருவிதாங்கூர் சமஸ்தானம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்தும் பெரும் போராட்டம் நடைபெற்று.. கடைசியில் பல உயிர்கள் பறி போன பின்புதான் அந்த உரிமை தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கிடைத்தது. அது நாகரீகத்தை பேண என்பதைவிட பெண்ணுரிமையை நிலை நாட்டவும், சாதிய அடக்கு முறையை நீக்கம் செய்யும் வகையிலும்தான் அமைந்திருக்கிறது.

அதையே இந்த இயக்குநர் இந்தப் படத்திற்கான கதைக் கருவாகக் கையாள நினைத்திருக்கிறார். ஆனால் காமினியின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் அவர் ஆடையில்லாமல் தன்னை உணர்ந்த கணத்தில் இருந்து அதை ஒரு மிகப் பெரிய அவமானமாகக் கருதும் அளவுக்கு தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார். இது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய முரண்பாடாகவே  அமைந்துவிட்டது.

ஒரு பக்கம் பெமினிஸமாக ஆண்களைப் போலவே வாழ்ந்து கொண்டிருக்கும் காமினி, தன்னுடைய ஆடையில்லாத உடலைப் பார்த்து யாருக்காக..? எதற்காக பயப்படுகிறார் என்பதே புரியவில்லை.

“வெளிநாடுகளில் சில தொலைக்காட்சிகளில் நிர்வாணமாக செய்தி வாசிப்பார்களே.. அதேபோல் நானும் வாசிப்பேன். பெட் கட்டுறியா..?” என்று ரம்யாவிடம் கேட்கும் அளவுக்குத் தைரியமான காமினி, தான் நிர்வாணமாக இருப்பது அறிந்ததும், யாருமற்ற அந்த பில்டிங்கில்.. ஏன் தன் உடலை கைகளால் மறைத்துக் கொண்டு ஓடுகிறார்…? கூனிக் குறுகி அமர்கிறார்..?!

கூடவே தனக்குத்தானே தைரியமும் சொல்லிக் கொண்டு தன் அம்மாவிடம் பேசுவதாக நினைத்து செண்டிமெண்ட் காட்சியைத் தொடும்வகையில், “அம்மா நான் மானத்தோடு வீடு வந்து சேர்ந்து விடுவேன்” என்று மனதிற்குள்ளேயே சொல்லுவதெல்லாம் காமினியின் கேரக்டர் ஸ்கெட்ச்சே கிடையாதே..?!

தன்னை விரட்டி வரும் நாயை விரட்டியடிக்க தன் கையில் இருக்கும் கனமான இரும்புக் குழாயை பயன்படுத்த மறக்கும் காமினி.. தன்னுடைய உடலை கக்கூஸில் இருக்கும் பேப்பர் பேண்டின் மூலமாக மறைத்த பின்பே தைரியமாக வெளியில் வந்து அந்த குழாயுடன் காட்சி தருகிறார். இதைப் பார்த்தவுடன் அந்த நாய் அப்படியே திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறதாம்..! எப்படியிருக்கிறது திரைக்கதை..? அம்மணமாக கையில் குழாயுடன் வந்திருந்தாலும் நாய் ஓடியிருக்குமே..? எதற்காக நாயிடம்கூட அம்மணமாக தோன்ற மறுக்கும் காமினியாக மாற்றினீர்கள் இயக்குநரே..?

ஆண், பெண் என்ற பேதமே இல்லாத அளவுக்கு அனைவரிடமும் சோஸியலாக பழகும் குணமுள்ள காமினி, தன்னைத் தேடி வருபவரிடம் தன் நிலைமையை எடுத்துச் சொல்லி தனக்கு உடை வாங்கி வரும்படி சொல்லியிருக்கலாமே..? இல்லாவிடில் 100-க்கு போன் செய்து போலீஸிடம் சொல்லி தனக்கான உடைகளை வாங்கி வரச் சொல்லியிருக்கலாமே..?

இதையெல்லாம் தவிர்த்துவிட்டு.. உணவு கொண்டு வரும் பெண்ணிடம் உடையைத் திருட திட்டம் போடுவது.. பின்பு அவளையே தாக்குவது.. போலீஸை கண்டு ஓடி ஒளிவது.. இப்படி தன்னுடைய நிர்வாண உடலை அவமானமாகக் கருதி தப்பித்து ஓடி ஒளிவது மிகப் பெரிய பிழை. படத்தின் கதைக் கருவே இப்படி தவறாகிவிட்டது.

அதோடு அவருடைய நிர்வாண உடலை பார்வையாளர்களும் உடனேயே பார்த்துவிடக் கூடாது என்கிற கண்ணோட்டத்திலேயே அமலா பால் தன்னுடைய நிர்வாணத்தை தானே மறைத்துக் கொள்கிறார் என்கிறவிதத்தில் காட்சிகளை நமக்குக் காட்டியிருப்பதும் என்ன மாதிரியான திரைக்கதை வழங்கல் என்று புரியவில்லை.

இப்போதையக் காலக்கட்டத்தில் தினத்துக்கு ஒரு பெண் நிர்வாண புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதால் தற்கொலை என்கிற செய்தி வந்து கொண்டேயிருக்கிறது. இந்தத் தற்கொலைகளைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நமது சமூகம் இப்போது நமது பெண்களுக்குச் சொல்ல வேண்டிய ஒரே விஷயம்.. நிர்வாணம் பெரிய விஷயமே இல்லை.. அது உனது உடமை.. உனது உரிமை. நிர்வாணமான காட்சி இருப்பதாலேயே உன்னை யாரும் எதுவும் பேசிவிட முடியாது.

“என்னுடைய நிர்வாண போட்டோவை எங்க வேண்ணாலும் போட்டுக்க.. வைச்சுக்க.. எனக்கென்ன.. அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை..” என்று பாதிக்கப்படும் பெண்கள் ‘டேக் இட் ஈஸி’யாக சொல்லிவிட்டுப் போக வேண்டும்.

இல்லாவிடில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி துணிந்து வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்தச் சமூகமும், அவளது பெற்றோரும், உற்றாரும், உறவினர்களும் ஆதரவு தர வேண்டும்.

இப்படியொரு கருத்தை நம் சமூகத்தில் நாமே பரப்பி வரும் வேளையில் “நிர்வாணம்தான் உன் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போகிறது. மாட்டிக் கொள்ளாதே..” என்று மிரட்டினால் எப்படிங்க இயக்குநரே..?

“மார்பை மறைக்க உடை அணிவது என்பது போராட்டம் செய்து நாம் வாங்கிய உரிமை. இப்போது அதே ‘மார்பை காட்டுவது எங்களது உரிமை…’ என்று சொல்லி மார்பை காட்ட போராடுகிறீர்கள்.. ச்சே.. வெட்கமாயில்லையா..?” என்று நங்கேலி அமலா பாலை நோக்கி சீறுகிறார்.

இந்தச் சீற்றம் அது ஆடைகள் அணிவது மனித நாகரிகத்தைச் சுட்டிக் காட்டுவதாய் அமைந்திருப்பதாக இருந்தால் ஓகேதான். ஆனால் நிர்வாணம் கற்புக்கு வரைமுறை என்ற கணக்கில் எடுத்துக் கொண்டால் அது மிக, மிக பிற்போக்குத்தனம்.

கேரளாவில் நடைபெற்ற முலை வரி.. உண்மையில் சாதியப் பிரச்சினையா.. அல்லது பெண்கள் சுதந்திரம் பற்றிய பிரச்சினையா என்கிற உண்மையை இயக்குநர் உணர்ந்திருந்தால் இதனை முன் வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்க மாட்டார்.

இப்போதும் நாடு முழுவதும் பல மாநிலங்களில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தலித் பெண்கள்தான் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள். அதுவும் உயர் சாதிப் பெண்களாலேயே.. இதில் பெண் சமூகம் என்பதே சாதிகளால் பிளவுண்டு போயிருக்கிறது நம் நாட்டில்.

அதே சமயம் சாதி, மதம் கடந்து அனைத்துவிதங்களிலும் பெண்களை அவமானப்படுத்தும் நோக்கில் அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய அந்தரங்கத்தை படம் பிடித்து வெளிகாட்டும் வக்கிர புத்திக்காரர்கள் நிறைந்த உலகமாகவும் மாறி வருகிறது நம் உலகம். இதையும் நாம் கணக்கில் கொண்டு இது மாதிரியான விஷயங்களை பெண்களுக்கு எதிரான பெரும் கொடுமையாய் கருதி தடுக்க வேண்டும்.

இப்படியொரு சூழலை நாம் சந்தித்து வரும் வேளையில் இந்தக் காமினி என்ற பெண்ணை வைத்து அவளுடைய நிர்வாண உடலை வைத்து.. பெண்ணுக்கு நிர்வாணம் என்பது மிகப் பெரிய அவமானம் என்பதுபோல பாடத்தைக் கற்றுக் கொடுக்க விரும்பிய இந்த இயக்குநரின் செயலைத்தான் நாம் முதலில் கண்டிக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய முதல் பாடத்தையே, இந்தப் படத்தில் இருந்துதான் துவக்க வேண்டும் போலிருக்கிறது.  

இறுதியில் “உங்களுடைய பொன்னான அறிவுத் திறனை இப்படி செலவழிக்காதீர்கள். மக்களுக்கு பிரயோனசமுள்ள முறைகளில் செலவழியுங்கள்..” என்கிற நங்கேலியின் அறிவுரைப்படி அமலா பாலின் பிரான்க் ஷோ, டிடெக்டிவ் ஷோவாக மாறி மறைமுகமாக கவியரசு வைரமுத்துவை மறைமுகமாகச் சுட்டிக் காட்டி ஒரு வயதான மனிதரின் முறையற்ற காமத் தேடலை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக மாறுவது நல்ல முடிவுதான்..! எதிர்பார்க்காதது..!

இந்த முடிவினால்தான் இயக்குநர் ஓரளவுக்கு தன் மீது எழுந்திருக்கும் கண்டனங்களில் இருந்து தப்பித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

ஆடை – காமினி என்னும் அமலா பாலுக்காகவே பார்க்கலாம்..!

Our Score