“என்னைச் சுற்றி 15 கணவர்கள் இருந்தார்கள்…” – நடிகை அமலா பாலின் ‘பகீர்’ பேச்சு..!

“என்னைச் சுற்றி 15 கணவர்கள் இருந்தார்கள்…” – நடிகை அமலா பாலின் ‘பகீர்’ பேச்சு..!

திரை விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களை பெற்ற  ‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் ரத்னகுமார்.

தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்பெடுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் இயக்கியிருக்கும் அடுத்தத் திரைப்படம் ‘ஆடை’.

இந்தப் படத்தின் நாயகியாக நடிகை அமலா பால் நடித்திருக்கிறார். V Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்த ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சில இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.

IMG_9416

நிகழ்ச்சியில் இயக்குநர் மித்ரன் பேசும்போது, “நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஒரு தயாரிப்பாளரை சந்தித்துவி்ட்டாலே பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். இப்போதெல்லாம் படம் வெளியானால்தான் மகிழ்ச்சி.

இப்படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்க்கும்போது நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள். அடுத்த வீட்டைப் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம்.

ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும்வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள்.

அமலா பால் ஆடையில்லாமல் நடித்திருந்தாலும் ஒரு காட்சியில்கூட அதை ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குநர். அவர் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று எனக்குத் தெரியும். இப்படம் வெளியானதும் அது அனைவருக்கும் தெரிய வரும்…” என்றார்.

ravikumar

இயக்குநர்  ரவிக்குமார் பேசும்போது, “ஐந்து சந்திப்புக்களிலேயே இயக்குநருடன் எனக்கு  நெருக்கம் ஏற்பட்டுவிட்டது. பெண்களுடைய ஆடையினால்தான் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று இப்போதும் கூறுகிறார்கள். இன்னமும் துப்பட்டா அணிவதை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு கிடையாது. பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு அவர்களின் ஆடைகள்தான் காரணம் என்று இன்று இருக்கும் சமுதாயத்தின் கருத்தை மாற்றியமைக்கும் வகையில் இப்படம் இருக்கும்…” என்றார்.

இயக்குநர்  லோகேஷ் பேசும்போது, “இயக்குநர் ரத்னகுமார் மிக வலிமையான எழுத்தாளர். அதை இப்படம் மூலம் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார். இந்த ஆடை திரைப்படம் கருத்தாழமிக்க படமாக மட்டுமில்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான சினிமாவாகவும் இருக்கும். அவர்களின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது…” என்றார்.

IMG_9501

இயக்குநர்  நிதிலன் பேசும்போது, “மேயாத மான்‘ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எப்போதும் தனது இரண்டாவது படத்தில் முதல் படத்தில் சாயல் இருக்கக் கூடாது என்கிற எண்ணம் அனைத்து இயக்குநர்களுக்குமே இருக்கும்.

அந்த சாயல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இந்த ஆடை படத்தை இயக்கியிருக்கிறார் ரத்னகுமார். இப்படத்தைப் பார்த்த பிறகு பெண்களைப் பற்றியும் அவர்களின் ஆடை பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் அனைவருக்கும் தெளிவான புரிதல் வரும்…” என்றார்.

IMG_9260

ஆடை வடிவமைப்பாளர் கவிதா.ஜே. பேசும்போது “டீஸரைப் பார்த்துவிட்டு இந்தப் படத்திற்கு எதற்கு ஆடை வடிவமைப்பாளர் என்று பலரும் கேட்டார்கள். ஆடை என்பது எந்தளவு முக்கியமென்று அது நம் உடலில் இல்லாதபோதுதான் தெரியும். அதை இயக்குநர் இந்தப் படத்தில் மிக அழகாக கூறியிருக்கிறார்…” என்றார்.

vivek prasanna

நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, என்னுடைய குருநாதர் ரத்னகுமார். நான் இன்று நடிகனாக இருப்பதற்கு அவர்தான் காரணம். சில கறைகளைத் துடைப்பதற்கு கிழிந்த ஆடையை எடுப்போம். அதுபோல் சமுதாயத்தில் இருக்கும் கறையைத் துடைப்பதற்கு இந்த ‘ஆடை’யை எடுத்திருக்கிறோம். அனைவருக்கும் இப்படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்…” என்றார்.

ramya

நடிகை ரம்யா பேசும்போது, “இரண்டு, மூன்று படங்களில் நடித்திருந்தால் நன்றாக நடிப்பு வரும் என்று நம்பி நமக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுப்பார்கள். ஆனால் ஒரு தொகுப்பாளினியான என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரத்னகுமாருக்கு நன்றி.

‘மைனா’ படத்திலிருந்தே அமலாபாலுடன் எனக்கு நெருக்கமாக நட்பு இருந்தது. இடையில் சிறிது இடைவெளி இருந்தது. இப்படம் மூலம் மீண்டும் எங்கள் நட்பு தொடர்ந்தது.

இப்படத்தில் எனக்கு ‘ஜெனி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இம்மாதிரியான படத்தில் நடித்திருப்பதில் எனக்கு பெருமை. இந்தியாவிலேயே அமலா பால் மாதிரி தைரியமாக யாராவது இருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை…” என்றார்.

arun pandian

நடிகர் அருண் பாண்டியன் பேசும்போது, “பாதி படம் எடுத்து முடித்த நிலையில் படத் தயாரிப்புக்காக என்னிடம் வந்தார்கள். இக்கதையையும், அமலா பாலின் கதாபாத்திரத்தைக் கேள்விபட்ட பிறகு இப்படம் இயல்பான படம் இல்லை என்று இப்படத்தை வெளியிட முடிவு செய்தேன். இப்படம் இந்தியா முழுவதும் பேசப்படும். தணிக்கைச் சான்றிதழுக்கு செல்லும் முன்பு நான் பார்க்க வேண்டும் என்று கூறினேன். தணிக்கைக் குழுவே இப்படத்தை பாராட்டியிருக்கிறது…” என்றார்.

rathnakumar

படத்தின் இயக்குநரான ரத்னகுமார் பேசும்போது, “இக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று தெரியாத நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்க கூறினேன். அவர் படித்துவிட்டு உடனே தயாரிக்க ஒப்பபுக் கொண்டார்.

இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அமலா பாலிடம் கதை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அமலா பாலுக்கு பிடித்திருந்தால் உயிரைக் கொடுத்து நடிப்பார். இப்படம் பெண்களின் அதிகாரத்தைப் பற்றி பேசும் படமாக இருக்காது.

‘மேயாத மான்‘ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பிரதீப் இசையைத் தொகுப்பதில் வல்லவர் என்று கூறினார். பொதுவாக இரண்டாவது படம்தான் இயக்குநருக்கு சவாலாக இருக்கும் என்று கூறுவார்கள். பார்த்திபன் எப்போதும் எல்லோரும் போகும் பாதையில் பயணிக்கமாட்டார். அவர்தான் எனக்கு உத்வேகமாக இருந்தார்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இது ஆபாச படமாக இருக்குமோ? என்று பல தலைப்பு போட்டு எழுதினார்கள். ஆனால் இப்படம் வெளியானதும் அனைவரின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன்…” என்றார்.

IMG_9290

தயாரிப்பாளர் சுப்பு பேசும்போது, “இக்கதையைப் படித்ததும் அமலா பால்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கும் என்று அவரின் மேலாளர் பிரதீப்பிடம் கூறினோம். 23 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. சில சவாலான காட்சிகளில் நடிப்பதற்கு முதல் நாள் தயங்கினார் அமலா பால். ஆனால், அடுத்த நாளிலிருந்து ஒரு கேள்வியும் கேட்காமல் நடித்து முடித்தார். அதேபோல் ஒரு படத்திற்கு வெற்றி என்பது அப்படத்தில் பணியாற்றும் குழுக்களின் ஒற்றுமைதான். அது இப்படத்தில் அமைந்திருக்கிறது…” என்றார்.

parthiban

நடிகர் பார்த்திபன் பேசும்போது, “ஆண்களைவிட பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள், தைரியமானவர்கள். பெண்களை மையப் படுத்தி ஒரு படம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. நானும் இது போன்ற ஒரு நல்ல படத்தை எடுப்பதற்காக 30 வருட காலமாக தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்…” என்றார்.

நடிகை அமலா பால் பேசும்போது, “இப்படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரையிலும் நீண்ட எனது பயணம் அழகிய பயணமாக இருந்தது. ஒரு திரைப்பட கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

அவள் தியாகியாகவோ, பாதிக்கப்பட்ட பெண்ணாகவோ இருந்து அதிலிருந்து அவள் எப்படி மீள்கிறான் என்ற கருத்தைச் சொல்லும் படம் இது.

amala paul

என்னிடம் கதை சொல்ல வர்றவங்க எல்லாருமே, ஒரு பெண்ணை கெடுத்திட்டாங்க. அந்தப் பெண் அவங்களை எப்படி பழி வாங்குறா என்பது மாதிரியான கதைகளைத்தான் சொல்லி வருகிறார்கள். நான் கேட்ட கிட்டத்தட்ட பத்து கதைகளும் இதே டைப்புதான்.

ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் சினிமாவுக்கு குட்பை சொல்லலாம்னு என் மேனேஜரிடம் சொன்னது உண்டு. அந்த சமயத்தில்தான் இந்த ‘ஆடை’ கதையின் கதைச் சுருக்கம் எனக்கு கிடைத்தது. படிச்சுப் பார்த்து நல்ல கதையாக இருக்கே என்று நினைத்து இயக்குநரை வரச் சொன்னேன்.

தாடி, மீசை, நீண்ட முடி வைச்சுக்கிட்டே இதே மாதிரியே வந்தார். இரண்டு மணி நேரம் கதையைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால் அவருடைய உருவத் தோற்றத்தைப் பார்த்ததும் எனக்கு ஒரு டவுட் வந்தது. இந்தி அல்லது இங்கிலீஸ் படங்களில் இருந்து இந்தக் கதையைச் சுட்டிருப்பாரோன்னு!

‘இங்கிலீஸ் படத்தின் ரீமேக்கா..?’ என்று அவரிடமே கேட்டேன்.  ‘அய்யயோ அதெல்லாம் இல்ல மேடம்’ன்னு சொன்ன பின்புதான் படித்தில் நடிக்கவே ஒத்துக் கொண்டேன்.

இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது எனக்குள் ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால்தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம்.

ஒரு காட்சியில் நடிக்கும்போது நீங்கள் யாரோ போல நடிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்றார் இயக்குநர். நானும் முடிந்த அளவுக்கு அப்படித்தான் இருந்திருக்கிறேன்.

இயக்குநர் ரத்னகுமாருக்கு ‘ஆடை’ படம்தான் முதல் படம் என்பது பல பேருக்குத் தெரியாது. அவர் பன்முக திறமை வாய்ந்தவர்.

ரம்யா இனிமேல் தொகுப்பாளினி இல்லை. சினிமாத் துறைக்கு மற்றுமொரு நடிகை கிடைத்துவிட்டார். விவேக் படத்திலும் நிஜத்திலும் எனக்கு சகோதரர் மாதிரிதான்.

‘ஊறுகாய்‘ குழுவினரின் பணி சிறப்பாக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் எனக்கு பாதுகாப்பு இருக்குமா என்று நினைத்தேன். ஏனென்றால், ஒளிப்பதிவாளர்களையும் சேர்த்து படக் குழுவில் மொத்தம் 15 பேர் இருந்தார்கள். ஆனால் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்.

நான் ஆடையில்லாமல் நடித்தபோது, அந்த 15 அண்ணன்கள் மட்டும் உடன் இருந்தார்கள். மகாபாரதத்தில் பாஞ்சாலிக்குக்கூட 5 கணவர்கள்தான். ஆனால், இங்கே என்னைச் சுற்றி 15 கணவர்கள் இருப்பதாக உணர்ந்தேன்…” என்றார்.

இறுதியாக, ‘ஆடை’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.

 

Our Score