பத்திரிகையாளர்கள்தான் ஒரு சினிமாவை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்வதற்கு வசதியாக கூர்ந்து கவனிப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் நிஜத்தில் உல்டாவாகத்தான் இருக்கிறது.
வலையுலகத்திலும், இணைய வெளியிலும் பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் பல சினிமா விமர்சனங்களில் சினிமாக்களை கொத்து புரோட்டா போடுவதை பார்த்தால் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
தற்செயலாக இன்றைக்கு யூடியூபில் பார்க்கக் கிடைத்த வீடியோ இது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படம் சம்பந்தமாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் இந்த வீடியோவைத் தயாரித்த நண்பர்.
காட்சிப்படி காஜலை பெண் பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு வருகிறார் விஜய். இதன் பின்பு காஜலும் அவரது தோழியும் ஆட்டோவில் செல்கிறார்கள். அப்போது விஜய்யும், சத்யனும் பைக்கில் வருகிறார்கள்.
டிராபிக் சிக்னலுக்காக இருவரும் அருகருகே நிற்கும்போது காஜலை பார்த்துவிட்ட விஜய், வேண்டுமென்றே அவரை வெறுப்பேற்றும்வகையில் நடந்து கொள்கிறார். இதனால் கோபப்படும் காஜல் ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து விஜய்யுடன் சண்டையிடுகிறார். தோழி அவரை சமாதானப்படுத்தி அழைக்க.. அதற்குள் சிக்னலும் கிடைத்துவிட மீண்டும் காஜல் ஆட்டோவுக்குள் அடைக்கலமாக ஆட்டோ செல்கிறது.
இப்போது விஜய் பைக்கை ஸ்டார்ட் செ்யய உதைக்கிறார். ஆனால் சென்று கொண்டிருக்கும் ஆட்டோவில் இருந்து தனது கையை மட்டும் வெளியே நீட்டும் காஜல் அகர்வால் தன் கையில் விஜய் வந்த பைக்கின் சாவி இருப்பதைக் காட்டுகிறார். பின்பு முகத்தையும் காட்டி சிரிக்கிறார். இதுதான் காட்சி.
இந்தக் காட்சிப்படி காஜல் அகர்வால் பைக்கில் இருந்த சாவியை எடுக்கும்படியான நிகழ்வே இல்லை என்கிறார் இந்த வீடியோவை தயாரித்தவர். நாமும் பல முறை ஓட்டிப் பார்த்தும் நமக்கும் அதுதான் தோன்றுகிறது. இயக்குநர் காட்சிப்படுத்ததில் கோட்டைவிட்டுவிட்டார். அல்லது ரசிகர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று அலட்சியமாக இருந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்புறம் எப்படி காஜல் அகர்வால் கைக்கு பைக் சாவி போச்சு..?
ஹீரோ பறந்து வந்து அடிக்கிறதையே ஒத்துக்குற நீங்க, ஹீரோயின் ஒரு சாவியை சுட்டுட்டுப் போயிட்டாங்கன்றதை ஒத்துக்க மாட்டீங்களா..? போங்கய்யா அங்கிட்டு..!!!
நாட்டுல எப்படியெல்லாம் குத்தம் கண்டுபிடிக்கிறாங்க பாருங்கப்பா..!?