“விஜய் ஆளப் போகிறார்…” – ஏ.ஆர்.ரஹ்மானின் பாராட்டு..!

“விஜய் ஆளப் போகிறார்…” – ஏ.ஆர்.ரஹ்மானின் பாராட்டு..!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மெர்சல்.’ வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ், இயக்குநர் பார்த்திபன், நடிகர்கள் சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ், நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

விழாவுக்கு முன்பாகவே வந்த இளைய தளபதி  விஜய், வாசலில் நின்றபடியே விழாவுக்கு வந்த அனைத்து பிரபலங்களையும் கை குலுக்கி வரவேற்றார்.

படக் குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் பெருமளவில் விழா அரங்கில் குவிந்திருந்தனர். மேடையில் ஒவ்வொரு நட்சத்திரமும் வரும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நான்கு பாடல்கள் விழா மேடையில் வெளியிடப்பட்டன. சமீபத்தில் ‘ஆளப் போறான் தமிழன்’, ‘நீதானே நீதானே’ என்ற இரு பாடல்கள் மட்டும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன. ஏ.ஆர். ரஹ்மான் லைவ் இசை நிகழ்ச்சியையும் இந்த மேடையில் நடத்தினார்.

அப்போது மேடையில் பேசிய ஏ,ஆர்.ரஹ்மான், "25 ஆண்டுகளான எனது திரை வாழ்க்கையில், இப்போதைய ரசிகர்கள் புது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கேற்றாற்போல் இப்போது இசையமைத்து வருவதால் எனக்கு வயது குறைந்தது போலிருக்கிறது.." என்றார்.

இதனைத் தொடர்ந்து, "நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளாகியுள்ளது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...?" என்று தொகுப்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர். ரகுமான், "ஆளப் போறான் தமிழன் என்பதை விஜய்யின் ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும். அது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.." என்று பொடி வைத்துப் பேசினார்.