full screen background image

சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் அடுத்த நாயகி..!

சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் அடுத்த நாயகி..!

சினிமாவின் மரபணுக்கள் இரத்தத்தின் வழியாகவே ஓடும் குடும்பங்களிலிருந்து, சிறந்த திறமைகள் திரைப்படத் தொழிலுக்கு வருவது தடுக்க முடியாததாகவே உள்ளது.

தமிழ் திரையுலகம் அத்தகைய சிறந்த திறமையான நடிகர்கள் பலரை கொண்டாடி ஏற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களிடம் தன்னிச்சையாகவே நடிப்பு திறமை அதிகமாக இருக்கிறது, பார்வையாளர்களின் இதயங்களை அவர்கள் எளிதில் வென்றுவிடுகின்றனர்.

இந்த வரிசையில் தமிழ் சினிமா உலகில் நாயகியாக நடிகை சாய் பிரியா தேவா புதிதாக இணைந்திருக்கிறார். இயக்குர் எழில் இயக்கி வரும், மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமான யுத்த சத்தம்’ படத்தில்தான் நாயகி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.

Kallal Global Entertainment சார்பாக தயாரிப்பாளர் D.விஜயகுமரன் இந்த யுத்த சத்தம்’ படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்த ‘யுத்த சத்தம்’ திரைப்படத்தில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாய் பிரியா தேவா நாயகியாக நடிக்க பிச்சைக்காரன்’ புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், ரோபோ சங்கர், காமராஜ், மதுஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் மற்றும் பல முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கனல் கண்ணன் சண்டை இயக்குநராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத் தொகுப்பு செய்திருக்கிறார். சுகுமார் கலை இயக்கம் செய்ய, முருகேஷ் பாபு வசனங்கள் எழுதியிருக்கிறார். யுகபாரதி பாடல் வரிகளை எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா மூவரும் நடன  இயக்கம் செய்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதையை தமிழகத்தின் முன்னணி குற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் எழுதியுள்ளார். இயக்குநர் எழில் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

தமிழ் சினிமாவின் திரையரங்கு வர்த்தகத்தில் கொடி கட்டி பறந்த புகழ் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், நடிகை சாய் பிரியா தேவா தனது முந்தைய தலைமுறையினரின் கலைத் திறமையை இயல்பிலேயே பெற்றுள்ளார்.

நடிகை சாய் பிரியா தேவா இது குறித்து கூறியதாவது, “எனது தாத்தா தமிழ்நாட்டின் முதல் திரையரங்கான முருகன் டாக்கீஸ் (மிண்ட், சென்னை), உரிமையாளர் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு.

நான் வளரும்போது திரைப்படங்களின் ஈர்ப்பு மட்டுமல்லாது, பார்வையாளர்கள் படங்களை எப்படி ரசிக்கிறார்கள் என்பதையும் பார்த்தே வளர்ந்தேன். இது பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு வாங்க வேண்டும் என்கிற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. அப்படியாகத்தான் நடிப்பு துறையை என் தொழிலாக நான் தேர்ந்தெடுத்தேன்.

முதலில் சினிமாவில் நடிப்பதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை. ஆனால் என் ஆர்வத்தை கண்டு, என்னை புரிந்து கொண்டு, பின்னர் எனக்கு ஆதரவளித்தனர். நான் நடிப்பை முறையாக கற்றுக் கொண்டு மாடலிங் செய்து என்னை படிப்படியாக தயார் செய்து கொண்டேன்.

இயக்குநர் பி.வாசு சாரின் ‘சிவலிங்கா’ திரைப்படத்தில் இரண்டாவது நாயகி கதாபாத்திரத்தில் நடித்ததுதான் எனது முதல் திரைப்பட அறிமுகம், அதன் பிறகு நான் ஒரு மலையாள படத்தில் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக நாயகி கதாபாத்திரத்தில் நடித்தேன்.

இந்த நேரத்தில் இயக்குநர் எழில் சாரின் யுத்த சத்தம்’ படத்திற்காக ஆடிஷன் அழைப்பு வந்தபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். என்னால் முடிந்தளவு மிக சிறப்பாக ஆடிஷனில் நடித்து காட்டினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, நான்தான் இப்படத்தின் நாயகி என்ற தகவல் கிடைத்தது.

இந்த சிறந்த வாய்ப்புக்காக எழில் சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இயக்குநர் எழில் சார் எந்த வகை திரைப்படங்களை உருவாக்கினாலும், அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவரது படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எனது அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.

அதிலும் மிக சிறந்த நடிகர்களான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவருடனும் நடித்திருப்பதில் எனக்குப் பெருமைதான்..” என்றார்.

தற்போது இப்படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 
Our Score