full screen background image

தமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..!

தமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..!

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த பின்னணி பாடகரான திரு.ஏ.எல்.ராகவன் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

ஏ.எல்.ராகவனின் இயற் பெயர் ‘அய்யம்பேட்டை லட்சுமணன் ராகவன்’ என்பதாகும். இதில் ‘அய்யம்பேட்டை’ என்பது அவர் பிறந்த ஊர். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. 1933-ம் ஆண்டில் பிறந்தவர் ஏ.எல்.ராகவன்.

இவருடைய தந்தை லட்சுமண பாகவதர் அந்தக் காலத்திய ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் ராஜபார்ட் நடிகராக இருந்தார். தந்தையின் வழியிலேயே நாடகத்தில் ஈர்க்கப்பட்டிருந்த ராகவன் தந்தையின் மறைவுக்குப் பின்னர். பத்து வயதில் ‘பால கான விநோத சபா’வில் சேர்ந்தார் ராகவன்.

அந்த சபாவின் சார்பில் போடப்பட்ட அனைத்து நாடகங்களிலும் நடித்தும், பாடியும் வந்தார் ராகவன். சிறு வயதிலேயே ஒரு நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் கால் பதித்த ராகவன் காலப்போக்கில் தனது கனமான, வித்தியாசமான குரலால் பின்னணி பாடகராகவும் மாறினார்.

1946-ல் இவர் நடித்த திருமழிசை ஆழ்வார்’ நாடகத்தைப் பார்க்க வந்த ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு செட்டியாருக்கு ராகவனின் நடிப்பு மிகவும் பிடித்துவிட்டது. இதன் விளைவாக அவரது ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டில் உருவான ‘கிருஷ்ண விஜயம்’ படத்தில் பால கிருஷ்ணனாக நடிக்க வைத்தார் சோமு செட்டியார்.

அந்த வயதிலேயே ராகவனின் குரல் வளம் பெண் குரல்போல் இருந்ததால், ராகவனுக்கு ‘மோகினி’, ‘வேலைக்காரி’ உள்ளிட்ட படங்களில் பெண் கோரஸிலும் இடம் கிடைத்தது. 1950-ம் ஆண்டில் வெளியான சி.எஸ்.ஜெயராமன் இசையமைத்த ‘விஜயகுமாரி’ படத்தில்  ‘காட்சி யாவும் கலைஞன் ஆட்சியே…’ என்ற பாடலை பெண் குரலில் பாடியிருக்கிறார். 1951-இல் வெளிவந்த ‘சுதர்ஸன்’ என்ற படத்தில் கிருஷ்ணனாக நடித்திருக்கிறார்.

சிவாஜி கணேசனின் நாடகக் குழுவிலும், சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவிலும் கதாநாயக நடிகர்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறார் ராகவன்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘புதையல்’ படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘ஹலோ மை டியர் ராமி…’ பாடலைப் பாடினார் ராகவன். இதுதான் ஆண் குரலில் ராகவன் பாடிய முதல் பாடல்.

இதன் பின்னர் 1950-களிலிருந்து 1980 வரை தமிழ்த் திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகிய மூத்த இசையமைப்பாளர்களின் இசையில் அதிகப் பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழுடன் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடியுள்ளார்.

கல்யாண் குமார், ஜெமினி கணேசன் போன்றோருக்கு பல பாடல்களை பாடியிருக்கிறார்.

கே.வி.மகாதேவனின் இசையில் ‘பாஞ்சாலி’ படத்தில் ‘ஒரு முறை பார்த்தாலே போதும்…’, ‘மனிதன் மாறவில்லை’ படத்தில் ‘காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்…’, ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் ‘அன்று ஊமைப் பெண்ணல்லோ…’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் பாடிய ‘எங்கிருந்தாலும் வாழ்க…’, ‘படிக்காத மேதை’யில் ‘பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு…’, ‘இருவர் உள்ளம்’ படத்தில் ‘புத்தி சிகாமணி பெத்த புள்ள…’, ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் ‘உலகத்தில் சிறந்தது எது…’, ‘சொர்க்கம்’ படத்தில் ‘நாலு காலு சார்…’, ‘பணமா பாசமா’ படத்தில் ‘வாழைத்தண்டு போல ஒடம்பு அலேக்…’, ‘பூஜைக்கு வந்த மலர்’ படத்தில் ‘திங்களுக்கு என்ன இன்று திருமணமோ…’, ‘வேட்டைக்காரன்’ படத்தில் ‘சீட்டுக்கட்டு ராஜா…’, ‘பூவா தலையா’ படத்தில் ‘போடச் சொன்னா போட்டுக்கறேன்…’ ‘காசேதான் கடவுளடா’ போன்ற பாடல்கள் இவருக்கு பெருமை சேர்த்தவை.

நடிகர் நாகேஷூக்கு இவரது குரல் மிகப் பொருத்தமாக இருக்கும். இதனால் நாகேஷுக்குப் பல படங்களில் பாடல்களைப் பாடியிருக்கிறார். நாகேஷ்-மனோரமா ஜோடியின் புகழ் பெற்ற பாடலான ‘சீட்டுக் கட்டு ராசா’ பாடலை இவர்தான் பாடியிருக்கிறார்.

மேலும், ‘வாடா மச்சான் வாடா’ (அன்று கண்ட முகம்), ‘உலகத்தில் சிறந்தது எது’ (பட்டணத்தில் பூதம்), ‘சாப்பிடத்தான் தெரியும்; எனக்கு சமைக்கத் தெரியலியே’(பவானி) ‘என்ன வேகம் நில்லு பாமா'(குழந்தையும் தெய்வமும்), ‘அங்கமுத்து தங்கமுத்து’ (தங்கைக்காக), ‘கடவுளும் நானும் ஒரு ஜாதி’ ஆகிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.

எத்தனை பாடல்களை பாடியிருந்தாலும் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்ற பாடல் இவரது குரலில் வெளியானவைகளில் மிகப் பிரபலமானதாகும்.

எக்கோ வசதியில்லாத அந்தக் காலத்தில் தனது குரலிலேயே எக்கோ எஃபெக்டை கொடுத்தவர் இவர்தான். மேடைகளில் ஆர்க்கெஸ்டிரா கச்சேரிகள் உருவானதன் முன்னோடியும் இவர்தான். எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து முதன்முதலில் ஆர்க்கெஸ்டிரா குழுவை உருவாக்கினார் ஏ.எல்.ராகவன்.

‘கல்லும் கனியாகும்’,  ‘கண்ணில் தெரியும் கதைகள்’ ஆகிய இரு படங்களைத் தயாரித்துள்ளார் ஏ.எல்.ராகவன்.  இதில் ‘கல்லும் கனியாகும்’ படத்தை மற்றொரு மூத்த பின்னணிப் பாடகரான டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து தயாரித்தார்.

1980-ம் ஆண்டு ‘கண்ணில் தெரியும் கதைகள்’ என்கிற படத்தைத் தயாரித்தார் ஏ.எல்.ராகவன். இந்தப் படத்தில் ஒரு புதுமையாக ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் கணேஷ், கே.வி.மகாதேவன், டி.ஆர்.பாப்பா, இளையராஜா  உள்ளிட்ட 5 இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்தார்.

சரத்பாபு, ராதிகா, வடிவுக்கரசி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அனைத்துப் பாடல்களும் பிரபலமானாலும், கதையில் வலுவில்லாததால் படம் தோல்வியைத் தழுவியது.

இதன் பின்பு சில படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வந்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திரைப்படங்களுக்கு வரி விலக்குக் கொடுக்கும் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்து வந்தார்.

இவருடைய மனைவி பழம் பெரும் நடிகை எம்.என்.ராஜம் அவர்கள். இருவரும் இணைந்து நாயகன், நாயகியாக ஒரு திரைப்படத்தில் நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.  இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கும் பெருந்தொற்று நோயான கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏ.எல்.ராகவன் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 7.30 மணியளவில் காலமானார்.

அன்னாரின் மறைவுக்கு எமது இதயப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Our Score