full screen background image

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த கதாசிரியர் ஆரூர்தாஸ் காலமானார்

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த கதாசிரியர் ஆரூர்தாஸ் காலமானார்

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த கதாசிரியரும், எழுத்தாளரும், இயக்குநருமான ஆரூர்தாஸ் இன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

தமிழ்ச் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கதாசிரியராகப் பணியாற்றியவர் ஆரூர்தாஸ்.

நாகப்பட்டினத்தில், 1931-ல் எஸ்.ஏ.சந்தியாகு நாடார் -ஆரோக்கியமேரி அம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர் ஆரூர்தாஸ். திரைத்துறையில் நுழைந்தபோது தான் பிறந்த ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். 

முதன்முதலில் 1955-ல் தமிழாக்கப் படமான `மகுடம் காத்த மங்கை’க்கு வசனம் எழுதினார். பின்னர் சாண்டோ சின்னப்பா தேவரிடம் சேர்ந்து கதை-வசனம் எழுதிய முதல் தமிழ்ப் படம் ஜெமினி கணேசன் நடித்த `வாழ வைத்த தெய்வம்’.

தமிழ்த் திரையுலகில் இரு துருவங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவருடனும் நெருங்கிய நட்பு கொண்டு, இருவருக்குமே ஒரே நேரத்தில் பல படங்களுக்குக் கதை-வசனம் எழுதியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். நடித்த தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘அன்பே வா’, ‘குடும்பத் தலைவன்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘வேட்டைக்காரன்’, ‘தொழிலாளி’, ‘தனிப்பிறவி’, ‘தாய்க்குத் தலைமகன்’, ‘ஆசைமுகம்’, ‘பெற்றால்தான் பிள்ளையா’…

சிவாஜிகணேசன் நடித்த ‘பாசமலர்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பார் மகளே பார்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘புதிய பறவை’, ‘இரு மலர்கள்’, ‘தெய்வ மகன்’, ‘பைலட் பிரேம்நாத்’, ‘நான் வாழவைப்பேன்’, ‘விஸ்வரூபம்’, ‘தியாகி’, ‘விடுதலை’, ‘குடும்பம் ஒரு கோவில்’, ‘பந்தம்’, ‘அன்புள்ள அப்பா’….

ஜெமினிகணேசன் நடித்த ‘வாழ வைத்த தெய்வம்’, ‘சவுபாக்கியவதி’, ‘திருமகள்’, ‘பெண் என்றால் பெண்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம்‌ எழுதி, தான்‌ பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்‌ ஆரூர்தாஸ்.

500 திரைப்படங்களுக்கும் மேல் கதை-வசனம் எழுதி, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். `பெண் என்றால் பெண்’ என்னும் படத்துக்குக் கதை-வசனம் எழுதியதோடு, அதை இயக்கியும் உள்ளார்.

‘இதுதாண்டா போலீஸ்’, ‘பூ ஒன்று புயலாகிறது’, ‘பாரத் பந்த்’ என்று தெலுங்கில் வெற்றி பெற்ற பல படங்களுக்கும் தமிழ் வசனங்களை எழுதி அந்தப் படங்களை வெற்றி பெற வைத்தவர் ஆரூர்தாஸ்.

1972-ல் `கலைமாமணி’ விருது, 1996-ல் அறிஞர் அண்ணா விருதான `கலை வித்தகர்’ விருது என்று பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்புதான் திரைத்துறையில் இவரது சாதனையை கவுரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தவர் இன்று மாலை 6.40 மணியளவில் தன் வீட்டிலேயே காலமானார்.

திரு.ஆரூர்தாஸ் மறைவுக்கு தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகர், நடிகைகளும், இயக்குநர்களும், கதாசிரியர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, தி.நகரில் உள்ள ஆரூர்தாஸின் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு திங்கள் அன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது.

Our Score