லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்தாலும் சர்ச்சைகளும் அந்தப் படத்தை விட்டபாடில்லை.
இப்போதுதான் படப்பிடிப்பின்போது ஒரு குதிரை இறந்து போனதற்காக படத்தின் இயக்குநரான மணிரத்னம் மீது வழக்குப் பதிவு செய்து வனத் துறையும், விலங்குகள் நலத் துறையும் தனித்தனியே விசாரணையை மேற்கொண்டுள்ளன.
இதற்குள்ளாக அடுத்தப் பஞ்சாயத்தும் ஆரம்பித்துள்ளது. இப்போது இந்தச் சர்ச்சையில் சிக்கியவர் நடிகை திரிஷா.
மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோர் மாவட்டத்தின் ஹரிகேஷ்வரில் நடந்து வருகிறது.
நர்மதா நதிக் கரையிலுள்ள ராணி அகில்யா பாய் கோட்டை, அரண்மனை மற்றும் சிவன் கோயில்களிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
கார்த்தி மற்றும் ரகுமானுடன் நடிகை த்ரிஷா நடிக்கும் காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டு வருகின்றன.
நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. இந்த சிலைகளுக்கு நடுவில் படத்தில் குந்தவையாக கதாப்பாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷா காலில் செருப்பு அணிந்து நடித்துள்ளார். இது சிவலிங்கங்களையும், இந்துக்களையும் அவமானப்படுத்துதாகும் என்றும்… அதனால் நடிகை த்ரிஷா மீதும், இயக்குநர் மணிரத்னம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாநிலத்தில் இருக்கும் இந்து வித்யா மண்டல் அமைப்பின் தலைவர் தினேஷ் கட்டோர் அருகில் உள்ள ஹரிகேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் படம் இன்னும் எத்தனை வழக்குகளைச் சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை..!