‘திரிஷ்யம்-2’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை செய்யக் கூடாது என்று ‘வயாகாம்-18’ நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
மலையாள இயக்குநர் ஜீத்து ஜோஸப் இயக்கிய ‘திரிஷ்யம்-2’ திரைப்படம், தற்போது மலையாளத்தில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் இதன் ரீமேக் தொடங்கி முடிந்துள்ளது.
ஹிந்தியில் ‘திரிஷ்யம்-1’ அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் வெளியானது. இப்போது ‘திரிஷ்யம்-2’ படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கு தயாரிப்பாளர் குமார் மங்கத் முனைந்துள்ளார்.
இதற்காக ‘திரிஷ்யம்’ படத்தின் தயாரிப்பாளரான ஆசீர்வாத், சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து முறைப்படி உரிமத்தைப் பெற்றுள்ளார்.
ஆனால், ஹிந்தி ‘திரிஷ்யம்-1’ படத்தை வாங்கி வெளியிட்ட வயாகாம்-18 நிறுவனம் ‘திரிஷ்யம்’ என்ற டைட்டிலுக்கும், அந்தப் படத்தின் தொடர்ச்சியான பாகங்களுக்கும் தாங்கள் முன்பாகவே உரிமம் வாங்கி வைத்திருப்பதாகச் சொல்கிறது.
இதற்காக தயாரிப்பாளர் குமார் மங்கத் மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது வயகாம்-18 நிறுவனம். வழக்கினை விசாரித்த நீதிமன்றம், வழக்கு முடியும்வரையிலும் ‘திரிஷ்யம்-2’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணிகளில் ஈடுபடுக் கூடாது என்று தடை விதித்துள்ளது.