அண்மையில் வெளியான பட்ஜெட் படமான ‘வென்று வருவான்’ படத்தில் பாராட்டத்தக்க ஒன்றாக படத்தின் இசை அமைந்திருந்ததை மீடியாக்கள் தனித்து குறிப்பிட்டிருந்தன.
அந்தப் படத்திற்கு இசையமைத்த முரளி கிருஷ்ணனுக்கு அதுதான் முதல் படம். கார்ப்பரேட் நிறுவனத்தில் நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்றிருந்தவரை சினிமா ஆசை தனக்குள் இழுத்திருக்கிறது.
முதல் படத்திலேயே பெயரெடுத்த இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன், தான் கடந்து வந்த பாதை பற்றி பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார்.
உங்கள் முன் கதை சுருக்கம்..?
“எனக்கு சொந்த ஊர் சென்னைதான். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே இங்கேதான். எனக்குள் சினிமா பாடல்கள், இசை பற்றிய ஆர்வம் சின்ன வயதிலிருந்தே இருந்தது. கல்லூரிக்கு செல்லும்போது ஆடியோ கேசட் ரெக்கார்டு கடையில் பாடல்கள் கேட்டு கேட்டு பழக்கமாகி ரசனை வளர்ந்தது. பி.எஸ்ஸி கணிதம் படித்தேன்., இரண்டு எம்.பி.ஏ. முடித்திருக்கிறேன்.”
இசையை எங்கே கற்றுக் கொண்டீர்கள்..?
“எனக்கு சின்ன வயதிலிருந்தே இசையைக் கற்றுக் கொடுத்தவர் இளையராஜா சார்தான். அவர் பாடல்களையே சுவாசமாக்கி வளர்ந்தவன் நான். அவர் பாடல்களைக் கேட்டுக் கேட்டு ஒவ்வொரு பாடமாக கற்றேன். என் மானசீக குரு, முதல் குரு எல்லாமே அவர்தான்.
நான் நேரடியாக இசை கற்றது பலரிடம். கீபோர்டை டேனியல் மாஸ்டரிடம் கற்றேன். பாலா அவர்களிடமும் கற்றேன். இசையமைப்பாளர்கள் ‘மசாலா படம்’ கார்த்திக் ஆக்சார்யா, பிரபல புரோகிராமர் ராஜேஷ், ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘ஒரு நாள் கூத்து’ இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், பக்திப் பாடல்கள் இசையமைப்பாளர் பாலா ஆகியோரிடம் அருகிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
நட்புடன் சொல்லிக் கொடுத்தார்கள். இசைக் கலைஞர்கள் கவிராஜ், விஜய் ஆனந்த் ஆகியோர் சினிமா இசை நுணுக்கம் பற்றி நிறையவே சொல்லிக் கொடுத்தார்கள். ஐந்தாண்டுகள் இப்படியே போனது.
அப்போதெல்லாம் எனக்குத் தோன்றுகிறபோதெல்லாம் நானே சூழல்களை அமைத்து பாடல்கள் வரிகள் எழுதி இசையமைத்து ‘டேமோ’ பாடல்களை பதிவு செய்து வைப்பேன். இப்படி அமைத்த டெமோ பாடல்களைக் கேட்டுத்தான் முதல் படமான ‘வென்று வருவான்’ வாய்ப்பு வந்தது.”
முதல் பட அனுபவம் பற்றி..?
“அது ஒரு கிராமியக் கதை. 1980-களின் இசைக்கு வாய்ப்பிருந்த கதை. ஒரு தூக்கு மேடை கைதி தனது கடைசி ஆசையாக தன்னை வளர்த்த தாயின் பாட்டைக் கேட்க வேண்டும் என்ற தாயப்பாசம் சொல்லும் கதை.. இப்படி இசைக்கு பெரிய வாய்ப்பிருந்த படம். நானும் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் இசைக்காக லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்தான் பயன்படுத்தினோம்.
படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றன. ‘சுத்தும் பூமி’, ‘சின்ன சித்திரமே’, ‘ஏன் ஏனோ’, ‘மஞ்சள் குங்குமம்’, ‘ஆராரோ ஆரிராரோ’ என்ற அனைத்து பாடல்களுமே ஹிட்டடித்தன. அதிலும் கடைசியாக அந்தத் தாய் ஜெயிலுக்குள் பாடும் ‘ஆராரோ ஆரிராரோ’ பாடல் படத்தின் வெற்றிக்கே ஒரு காரணமாகிவிட்டது.
‘வென்று வருவான்’ வெளியான பிறகு வந்த விமர்சனங்களில் பல ஊடகங்கள் என் திறமையை மதித்து பாராட்டி எழுதியதில் எனக்கு மகிழ்ச்சிதான். அது எனக்குப் பெரிய ஊக்கம் தந்தது.”
இப்போது இசையமைக்கும் படம்..?
“நான் இப்போது இசையமைத்துவரும் படம் ‘லவ் குரு.’ இதில் கார்த்திக், பிரசன்னா, ஜானகி ஐயர், வேல்முருகன், அந்தோனி தாஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.
நல்ல வாய்ப்பு வந்தால் எப்போதும் என்னை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் என்கிற நம்பிக்கையும் எனக்குள் இருக்கிறது. காரணம், இசையமைப்பதை என் வேலையாக நினைக்கவில்லை. விருப்பமாக நினைக்கிறேன்..”
என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் முரளிகிருஷ்ணன்.












