மோகன்லால், கமாலினி முகர்ஜீ, ஜெகபதிபாபு, நமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் ‘புலி முருகன்.’ முலக்குப்படம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை வைஷாக் இயக்கியிருக்கிறார்.
கேரளா மட்டுமன்றி உலகமெங்கும் வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வசூல் சாதனை படைத்திருக்கும் இந்த ‘புலி முருகன்’ திரைப்படம் மோகன்லாலின் திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்துள்ளது.
மோகன்லால், மீனா நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்’ படத்திற்கு பிறகு, அதிக வசூல் செய்திருக்கும் மோகன்லாலின் படம் இதுதான் என்கிற பெருமையையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தின் பிற மாநில மொழி உரிமையை பெற பலரும் போட்டியிட்டனர். இறுதியில் இந்த ‘புலி முருகன்’ படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க உச்ச நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
‘புலி முருகனின்’ இந்திய மொழிகள் பதிப்பை ரமேஷ்.பி.பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தோமிச்சனின் முலகுப்பாடம் பிலிம்ஸும் இணைந்து தயாரிக்கவுள்ளது.
விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் விரிவான செய்திகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.









