‘ரெமோ’ படத்திற்காக யோகிபாபுவின் காதல் டிராக் காட்சியில் இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், அதில் ஒன்றுதான் இயக்குநரின் விருப்பத்திற்காக வைக்கப்பட்டதாக அந்தப் படத்தின் ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
இன்று மாலை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்ற ‘ரெமோ’ படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, “யோகிபாபு அண்ணன்கூட ‘மான் கராத்தே’ படத்துல நடிச்சேன். அதுல ‘வவ்வால்’ன்ற கேரக்டர்ல அவர் நடிச்சிருந்தார். அது எல்லாருக்கும் ரொம்பப் புடிச்சிருந்தது.
உண்மையில் இந்தப் படத்தில் யோகிபாபு அண்ணன் என்னைப் பார்த்து ஜொள்ளுவிடும் பகுதிக்காக இரண்டு கிளைமாக்ஸ் ஷூட் பண்ணியிருந்தாங்க. ஒரு கிளைமாக்ஸ் நீங்க பார்த்தது. இன்னொன்னும் நாங்க எடுத்தோம். ஆனா கடைசீல அதை படத்துல வைக்கலை.
நான் புடவை கடைல புடவை செலக்ட் பண்ணிட்டிருக்கும்போது யோகி பாபு அங்க வருவார். ‘நம்ம கல்யாண புடவையை எப்ப எடுக்கலாம்..?’னு என்னைக் கலாய்ப்பார். எனக்கு எப்படிடா இவரைக் கழட்டி விடுறதுன்னு எரிச்சலா இருக்கும்.
நானே அவர்கிட்ட போய், ‘ரொம்ப நாளா உங்ககிட்ட ஒண்ணு காட்டணும்னு இருக்கேன். இப்போ காட்டுறேன்.. பார்க்குறீங்களா?’ன்னு கேட்பேன். அதுக்கு அவரு, ‘அதுக்காகத்தான இத்தனை நாளா காத்துக்கிட்டிருக்கேன்’னு சொல்வாரு. ‘டிரையல் ரூமுக்கு போலாமா?’ன்னு கேட்பேன். ‘ஓ.. யெஸ்..’ன்னுட்டு வருவாரு.
ரெண்டு பேரும் ரூமுக்குள்ள போவோம். அடுத்து ‘ஓ’ன்னு ஒரு அலறல் சப்தம் கேட்கும். கதவைத் திறந்துட்டு நான் வேகமாக வெளில போயிருவேன். எனக்குப் பின்னாடி யோகி மெதுவா வெளில வருவாரு. அவர் கண்ணுல தண்ணி கொட்டிக்கிட்டிருக்கும்.
அவர்கிட்ட புடவைக் கடைக்காரர் போய், ‘பார்த்துட்டீங்களா ஸார்..?’ன்னு கேட்பார். அதுக்கு ‘நல்லா பார்த்திட்டேன்’னு சொல்வார் யோகி. ‘இன்னும் வேற வெரைட்டிஸெல்லாம் இருக்கு ஸார். பார்க்குறீங்களா..?’ன்னு கேட்பார். ‘இதுல என்னடா வெரைட்டீஸ்..?’ன்னு கேட்டுட்டு யோகி போயிருவாரு. இதையும் ஷூட் செஞ்சு வைச்சிருந்தோம். ஆனால் இயக்குநர் இது தொடர் கதை மாதிரி முடிச்சா நல்லாயிருக்கும். அதுனால அது வேணாம்னு சொல்லிட்டாரு..” என்றார் சிவகார்த்திகேயன்.
இந்த கேவலமான ‘டபுள் மீனிங்’ டயலாக் காட்சிக்கு இப்போது வைத்திருக்கும் காட்சியே மேலானது. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இதனைத் தேர்வு செய்யாதமைக்கு நமது நன்றிகள்..!










