தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக 10-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 12-வது படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கவுள்ளார்.
படத்தின் ஹீரோ கார்த்தியோ, சூர்யாவோ இல்லை. தெலுங்குலகின் பிரபலமான யங் ஸ்டார் நடிகரான அல்லு அர்ஜூன்தான். இந்த அல்லு அர்ஜூன் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்தின் மகன். இவரது இன்னொரு மகனான அல்லு சிரிஷும் தெலுங்கு சினிமாவில் ஒரு நடிகர்தான்.
அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் லிங்குசாமி இயக்கும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் நடிகர் அல்லு அர்ஜுன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் லிங்குசாமி, நடிகர் சிவகுமார், நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ் , எழுத்தாளர் கவிஞர் பிருந்தாசாரதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில் நடிகர் சிவகுமார் பேசும்போது, “தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, என் மகன் கார்த்தியுடன் படித்தவர். அவர் இன்று மிகப் பெரிய தயாரிப்பாளராக இருக்கிறார். சூர்யா, கார்த்தியை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
அவர் இவ்வளவு பெரிய தயாரிப்பாளராகி சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்து திரைப்படத்தை தயாரிப்பார் என்று நான் நினைத்ததில்லை. இப்போது அவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் பல வருடங்களாக நல்ல தொடர்பு இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அதே காலகட்டத்தில் என்.டி.ஆர், நாகேஷ்வரராவ் ஆகியோரும் இங்கே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று தமிழிலும் வெற்றி படங்களை கொடுத்து வந்தனர்.
இதேபோல் தெலுங்கு நடிகைகளான கண்ணாம்பாவும், பானுமதியும் தமிழ்ச் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்தனர். கண்ணாம்பாவை போல தமிழை அழகாக, அழுத்தமாக உச்சரிக்க இன்னொரு நடிகை இதுவரையிலும் வரவில்லை. அவருடைய நடிப்புத் திறமைக்கு அளவேயில்லை.
கண்ணாம்பா முதலில் தயாரிக்கப்பட்ட ‘கண்ணகி’ படத்தில் நடித்திருந்தார். இதே ‘கண்ணகி’யை மீண்டும் ஒரு முறை எடுத்தபோது அதில் நடித்த எம்.என்.ராஜம், கண்ணாம்பா அளவுக்கு தன்னால் தமிழ் பேசி நடிக்க முடியுமா என்றெண்ணி கலங்கிப் போனார்.
இதேபோல் திரையுலகத்தில் அஷ்டாவதனியை போல அவதரித்தவர் தெலுங்குலகை சேர்ந்த பானுமதியம்மா. அந்தம்மாவுக்கு தெரியாத விஷயமே கிடையாது. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, பாடல், இசை, இயக்கம் என்று அனைத்தையுமே செய்தவங்க அவங்க. இப்படி தெலுங்கு பேசும் மக்களே தமிழ்ச் சினிமாவில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தார்கள்.
இப்போது அங்கேயிருந்து அல்லு அர்ஜூன் தமிழுக்கு வந்திருக்கிறார். பார்க்க மிகவும் அழகாகத்தான் இருக்கிறார். கண், காது, மூக்கு என அனைத்தும் அழகாக உள்ளது. நல்ல வேளை அவர் 1960-ல் நடிக்க வரவில்லை. அப்படி வந்திருந்தால் எனக்கு போட்டியாக வந்திருப்பார். முருகர் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று அக்காலத்தில் என்னை தேர்வு செய்தனர். அல்லு அர்ஜூன் அக்காலத்தில் இருந்திருந்தால் இவரைத்தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்…” என்றார்.
நடிகர் அல்லு அர்ஜுன் பேசும்போது, “நான் பிறந்தது.. வளர்ந்தது… படித்தது எல்லாமே இதே சென்னையில்தான்.. 20 வருடங்களாக இங்கேதான் இருந்தேன். அப்படின்னு பார்த்தால், எனக்கு சொந்த ஊர் சென்னைதான்.
நான் இந்த மேடையில் தமிழில்தான் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தப்பாக பேசினாலும் தமிழில்தான் பேசுவேன்.
நான் இந்த ஒரு வாய்ப்புக்காக பல நாட்களாக காத்திருந்தேன். நல்ல கதைகளாக கேட்டுக் கொண்டேயிருந்தேன். எதுவும் செட்டாகவில்லை. முதல் படம் என்பதால் அதற்கேற்றாற்போன்ற கதையைத்தான் எதிர்பார்த்தேன். இந்த நேரத்தில்தான் இயக்குநர் லிங்குசாமி ஸார் என்னிடம் வந்து இந்தக் கதையைச் சொன்னார். இதற்காகத்தான் நான் காத்திருந்தேன் ஸார் என்று சொல்லி சட்டென்று ஒத்துக் கொண்டேன்.
நான் தெலுங்கில் நடித்த எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்து ரீலீஸ் செய்ய அனுமதிக்கவேயில்லை. அதற்கு காரணம் நான் பிறந்து வளர்ந்த இந்த சொந்த மண்ணில் நேரடி படத்தில்தான் அறிமுகமாக வேண்டும் என்று நான் நினைத்ததுதான். எந்த மண்ணில் ஜெயித்தாலும் என்னுடைய சொந்த மண்ணில் ஜெயித்தது போல் வராது. அதனால்தான் இத்தனை நாள் காத்திருப்பு. இதோ இந்தப் படம் நிச்சயம் என்னை தமிழ் ரசிகர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்…” என்றார் அல்லு அர்ஜுன்.
இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “நான் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்று என்னுடைய கிராமத்தில் உள்ளவர்களிடம் சொன்னபோது அவர்களில் சிலர் என்னிடம், ‘நாங்கள் அல்லு அர்ஜுனின் நடனத்திற்கு மிகப் பெரிய ரசிகர்கள்’ என்றனர். அவருக்கு தமிழிலிலும் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கவரும் வகையில் நான் அல்லு அர்ஜுனை வைத்து நான் தமிழில் இயக்கும் நேரடி தமிழ் படம் இருக்கும். நான் ‘சண்ட கோழி’ பாகம்-2 திரைப்படத்தை முடித்த பின்னர் இப்படத்தை துவங்கவுள்ளேன்..” என்றார்.












