சினிமாவுக்கு ஜாதி மதம் மொழி வேறுபாடு கிடையாது என்று ‘பீரங்கிபுரம்’ சினிமா விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.
சென்னை முதல் ராஜஸ்தான்வரை நெடுஞ்சாலை வழியாகப் போகும் கதையாக உருவாகியிருக்கும் படம் ‘பீரங்கிபுரம்’. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.
கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் ‘நானு அவனுள்ள அவளு’ கன்னடப் படத்திற்காக 2015-ம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றவர்.
இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ எனப்படும் முதல் பார்வை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை, வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. ‘பர்ஸ்ட் லுக்’கை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட நடிகை நமீதா பெற்றுக் கொண்டார்.
விழாவில் படத்தின் இயக்குநர் ஜான் ஜானி ஜனார்த்தனா பேசும்போது, “எனக்குச் சொந்த ஊர் திருத்தணிதான். நான் பல்வேறு பெரிய இயக்குநர்களின் படங்களைப் பார்த்து சினிமா கற்றுக் கொண்டேன். சினிமா பற்றி பல்வேறுவிதங்களில் ஆய்வுகள் செய்தேன். அப்படி உருவானதுதான் இந்தக் கதை.
மூத்த தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் இடையே நடக்கும் உளவியல் ரீதியான போர்தான் இக்கதை. திரைக்கதை சென்னை முதல் ராஜஸ்தான்வரை போகிறது. ‘பீரங்கிபுரம்’ ராஜஸ்தானில் என் கற்பனையில் உருவாகியுள்ள கிராமம். முழுக்க முழுக்க ராஜஸ்தானில் படமாகியுள்ள தமிழ்ப் படம் இதுவாகத்தான் இருக்கும்.
படத்தில் ஒப்பனைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நடிப்பவர்கள் பலரும் நாடக நடிகர்கள். பிற நடிகர்கள் அனைவரையும் முறையாகப் பயிற்சியளிக்கப்பட்டு நடிக்க வைத்திருக்கிறோம். மேக்கப் கலைஞரான உமா மகேஷ்வர் இந்தப் படத்தின் ஒப்பனைக்காக நிச்சயம் பேசப்படுவார். நாயகனின் வயதான தோற்றத்துக்காக ஐந்து மணி நேரம் மேக்கப் போட்டுள்ளார். சோதனை முயற்சியாகத்தான் இப்படத்தை எடுக்க விரும்பினேன். இது ஒரு முன்னுதாரண படமாக இருக்கும்வகையில் உழைத்திருக்கிறோம்..” என்றார்.
நாயகனாக நடித்திருக்கும் சஞ்சாரி விஜய் பேசும்போது, “நான் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சியடைந்தேன். அதே நேரம் தமிழ் இயக்குநர் பாரதிராஜா அவர்களை நன்றியோடும் நினைத்துப் பார்க்கிறேன். ஏனென்றால், தேசிய விருது தேர்வுக் குழுவின் தலைவராக அவர் இருந்தபோதுதான் எனக்குத் தேசிய விருது கிடைத்தது. நான் அந்தப் படத்தில் மாற்றுப் பாலின பாத்திரத்தில் ஒரு திருநங்கையாக நடித்திருந்தேன்.
நான் கமல், விக்ரம் போன்ற நட்சத்திரங்கள் நடித்த தமிழ்ப் படங்களிள் பெரிய ரசிகன். சிறுவயது முதல் அவர்கள் நடிப்பை ரசித்து வளர்ந்தவன்.
அதே போலவேதான் இந்தப் படமும் எனக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. தேசிய விருது பெற்ற ‘நானு அவனுள்ள அவளு ‘ படம் போலவே இந்த ‘பீரங்கிபுரம்’ படமும் வித்தியாசமான முயற்சிதான். இதில் இளைஞன் தோற்றம், நடுத்தர வயது தோற்றம், முதிய தோற்றம். என மூன்று வகை தோற்றங்களில் வருகிறேன்.
இது ஒரு சைகாலஜிக்கல் த்ரில்லர் படம். இந்தப் படம் எனக்கு நல்ல அறிமுகமாக அமையும். இந்த ஒரு படமே வேறு பட வாய்ப்புகளையும் தேடித் தரும் என்று நம்புகிறேன். இந்த விழாவுக்கு ஸ்ரீகாந்த், நமீதா வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்…” என்றார்.
நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, “கன்னட மொழியிலிருந்து தேசிய விருது பெற்ற நடிகர் இங்கே தமிழில் நடிக்கிறார். அவரை வரவேற்கிறோம். அவர் தமிழ் மொழி தெரியாது என்று பேசினார். சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி வேறுபாடு எல்லாம் கிடையாது. இது கர்நாடகத்துக்கும் பொருந்தும். தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். அவரை வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கே இவ்வளவு உழைத்திருக்கிறார்கள். சினிமாவில் படப்பிடிப்புக்குப்போய் யோசிப்பவர்கள்கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு படம் தொடங்கும் முன்பாகவே ஆறு மாதம், ஒரு வருடம் என்று முன் தயாரிப்பு வேலைகள் செய்திருக்கிறார்கள். நன்றாக ஆயத்தம் செய்திருக்கிறார்கள். இப்படி எல்லாரும் செய்தால் கால விரயமும், பண விரயமும் வீணாகாது. இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்…” என்றார்.

நடிகை நமீதா பேசும்போது, “அண்மையில் ‘டோண்ட் ப்ரீத் ‘ என்கிற படம் பார்த்தேன். ஒன்றே முக்கால் மணி நேரத்தில் 1 மணி 10 நிமிடங்கள் வசனமே இல்லை. அப்படி ஒரு பரபரப்பு இருந்தது. எனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்துபோய் விட்டது. சினிமாவுக்கு மொழி முக்கியமல்ல. எனக்கு காமெடி, ஆக்சன், சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்கள் தனிப்பட்ட முறையில் பிடிக்கும். ‘பீரங்கிபுரம்’ படமும் இந்த வகையில் அடங்கும். ஜான் ஜானி ஜனார்த்தனா என்கிற இயக்குநர் பெயரைப் பார்த்தும் அந்தக் காலத்தில் அமிதாப்பச்சன் நடித்த படமான ‘ஜான் ஜானி ஜனார்த்தன்’ நினைவுக்கு வந்தது. இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.
விழாவில் மேக்கப்மேன் உமா மகேஷ்வர், இசையமைப்பாளர் ஸ்யாம். எல்.ராஜ், நடிகர்கள் சுகுமார். ராணா, ஜெய்கார், நடிகை கானவி, ஒளிப்பதிவாளர் அத்வைதா குரு மூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.












