திரைப்படம் தயாரித்து அதில் நஷ்டப்பட்டதால் திருட்டுத் தொழிலில் இறங்கியதாக பரிதாபத்துக்குரிய தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
2012-ம் ஆண்டு கோழி கூவுது என்ற தமிழ்ப் படம் வெளியானது. இதில் அசோக், ஸ்ரீஜா ஆகியோர் நடித்திருந்தனர். கே.எல்.ரஞ்சித் என்பவர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை தனது வி.வி. பிலிம்ஸ் சார்பில் தயாரித்தவர் நாகராஜன் என்ற தயாரிப்பாளர்.
இவரைத்தான் மினி வேன் கடத்தல் வழக்கில் கேரளா போலீஸ் கைது செய்துள்ளது.
இவர் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் “2012-ம் ஆண்டு நான் ‘கோழி கூவுது’ என்ற தமிழ் படத்தைத் தயாரித்து வெளியி்ட்டேன். படம் ஓடவில்லை. இதனால் எனக்கு கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடனை சமாளிக்க முடியாமல் இப்படி திருட்டுத் தொழிலில் இறங்கினேன்..” என்று சொல்லியிருக்கிறாராம்.
நாகராஜனின் சொந்த ஊர் நாகர்கோவில். அருகில் இருக்கும் கேரளா இவருக்கு அத்துப்படி என்பதால் அங்கேயுள்ள தொடுபுழா மாவட்டத்தில் இருந்து பல்வேறு மினி வேன்கள், கார்களை கடத்திக் கொண்டு வந்து அவற்றை மேட்டுப்பாளையத்தில் ஒரு மெக்கானிக் கடையில் கொடுத்து உதிரி பாகங்களை மாற்றி வேறு பெயரில் புதிய வண்டியாக மாற்றி விற்றுவிடுவாராம்.
கடைசியாக தொடுபுழாவில் ஒரு மினி வேனை கடத்தி வந்துவிட.. இது போலீஸ் கேஸாகியிருக்கிறது. இந்த வழக்கில் விசாரணை செய்த கேரள போலீஸ் சன்னி, பிஜூ, சிவசங்கரபிள்ளை, ரமேஷ் ஆகிய நாகராஜனின் கூட்டாளிகளை கைது செய்து விசாரித்திருக்கிறது. இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நாகராஜனையும் கடைசியாக கைது செய்துள்ளது.
‘கோழி கூவுது’ பார்க்கக் கூடிய படம்தான். ஆனால் ஓடவில்லை. தயாரிப்பாளரின் கஷ்டம் அவரை கடைசியில் திருடனாக்கி சிறைக்குள்ளும் தள்ளிவிட்டது..!
ஏற்கெனவே படம் வெளியான அடுத்த ஆண்டே தான் மீட்டர் வட்டி கடனில் சிக்கித் தவிப்பதாகவும், தனக்குக் கடன் கொடுத்தவர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் நாகர்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார் நாகராஜன்.
அப்போது போலீஸில் கொடுத்த புகாரில், “இந்த ‘கோழி கூவுது’ படத்தை 75 லட்சத்தில் படத்தை முடித்து விடலாம் என்று எண்ணி துவக்கினேன். ஆனால், படத்துக்கு 2 கோடியே 75 லட்சம் செலவானது. இதனால் 1 கோடியே 75 லட்சம் பணத்தை மீட்டர் வட்டிக்கு வாங்கியிருந்தேன்.
இந்த படம் 28.12.2012 அன்று வெளியானது. தமிழகம் முழுவதுமே 60 திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டு சில நாட்கள்தான் ஓடியது.
படம் தோல்வியை தழுவியதால் எனக்கு கடன் தந்தவர்கள் பணத்தை கேட்டு மிரட்டினார்கள். எனது படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் எந்த சம்பள பாக்கியும் நான் வைக்கவில்லை.
ஆனால் 20 பேரிடம் நான் கடன் வாங்கியதில் 18 பேருக்கு இதுவரை 50 லட்சம்வரையிலும் வட்டி மட்டும் செலுத்தியுள்ளேன்.
இந்நிலையில், என்னை என் குடும்பத்தினரோடு தீயில் கொளுத்தி கொலை செய்துவிடுவேன் என கரூரைச் சேர்ந்த ஒருவரும், நாகர்கோவிலைச் சேர்ந்த 3 பேரும் மிரட்டி வருகிறார்கள். எனது வீடு தேடி வந்து அவர்கள் தொடர்ந்து மிரட்டுவதால் நான் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளேன்.
எந்த நேரத்திலும் அவர்கள் என்னையும், எனது குடும்பத்தினரையும் கொலை செய்வார்கள் என்று தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன். எனவே, மீட்டர் வட்டி கும்பலிடம் இருந்து எனது குடும்பத்தை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தார்களோ தெரியவில்லை.. மனிதர் தடம் புரண்டு தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு இப்போது மொத்தமாக வீழ்ந்துவிட்டார். பாவம்..!









