சினிமாவில் பணத்தை மையமாக வைத்துக் கொண்டு உருவான பாடல்கள் ஏராளம். பிரபுதேவாவின் ‘சென்னைபட்டிணம் எல்லாம் கட்டணம்’, சிலம்பரசனின் ‘நோ மணி நோ ஹனி’, ‘காசு பணம் துட்டு மணி’ என ஏகப்பட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறது.
அந்த அளவிற்கு மனிதர்களை தன் பிடியில் வைத்திருக்கிறது பணம். அந்த பணத்தை கதைக் கருவாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் ‘பைசா’.
கான்பிடண்ட் பிலிம் கபே, K.J.R. ஸ்டுடியோஸ் மற்றும் R.K. ட்ரீம் வேர்ல்ட் நிறுவனங்கள் சார்பில் அப்துல் மஜீத், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
‘பசங்க’ புகழ் ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மற்றும் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன், தீபிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – K.P. வேல்முருகன், இசை – J.V. பாடல்கள் – நா.முத்துக்குமார், நடன அமைப்பு – பாபா பாஸ்கர், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமத், எழுத்து – இயக்கம் – அப்துல் மஜீத்.
வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் இந்தப் படம் பற்றி பேசுகிறார் படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் நடிகை ஆரா.
“பணம் வாழ்க்கைக்கு அவசியம் தேவைதான். ஆனால் அதுவே வாழ்க்கையாக மாறிவிடக் கூடாது. இதுதான் இந்த ‘பைசா’ படத்தின் கதைக் கரு.
எதார்த்த வாழ்க்கையை மிக அழகாக திரையில் படைக்கும் வல்லமை படைத்த இயக்குநர் அப்துல் மஜீத் இந்தப் படத்தையும் அழகாக உருவாக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் நான் சிறிது தயங்கி இருந்தாலும், அவருடைய நம்பிக்கையான பேச்சும், சாதிக்கும் எண்ணமும் என்னை பயத்தில் இருந்து முற்றிலும் வெளியே கொண்டு வந்துவிட்டது.
ஓவ்வொரு காட்சியையும் நன்கு உணர்ந்து கொள்ள தேவையான கால அவகாசத்தை தன்னுடைய நடிகர்களுக்கு வழங்குவதே அவரின் சிறப்பம்சம். எனக்கு மட்டுமின்றி எங்கள் படக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் நல்லாசிரியராக திகழ்பவர் அப்துல். இது போல ஒரு திறமையான கூட்டணியில் நான் பணிபுரிந்தது, எனது அதிர்ஷ்டம்.
எனக்கு நடிப்பின் மேல் ஆர்வம் வர காரணமாக இருந்தவர் எனது தந்தைதான். என்னுடைய இக்கட்டான நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்து ஆர்வம் ஊட்டிய அவருக்கு எனது நன்றிகளை சமர்ப்பித்து கொள்கிறேன்.
மக்களின் ரசனைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகரின் முக்கியமான கடமை. அந்த வகையில் எனது பங்கு பெருமளவு இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்..” என்கிறார் ஆரா.
சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும், ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு சென்ற ‘சாட்டை’, ‘கோலிசோடா’ மற்றும் ‘காக்கா முட்டை’ படங்களின் வரிசையில் இந்த ‘பைசா’ திரைப்படமும் இடம் பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.











