ஒரு திரைப்படம் உருவாகும்போதே, ‘இதே படக்குழுவினரை வைத்து மேலும் ஒரு படத்தை தயாரிப்பேன்’ என்று பல தயாரிப்பாளர்கள் சொல்வதுண்டு. ஆனால், அவர்களின் உத்தரவாதம் மேடை பேச்சாக மட்டுமே இருக்கும். அதன் பிறகு சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரோ, இயக்குநரோ முகம் கொடுத்துக்கூட பேச மாட்டார்கள்.
ஆனால், சமீபதில் வெளிவந்த ‘சேது பூமி’ படத்தின் தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப், அப்படி இல்லாமல், தான் சொன்னது போலவே, தனது முதல் படக் குழுவினரை வைத்து இரண்டாவதாக ஒரு படத்தை தயாரிக்க தொடங்கிவிட்டார்.
ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீல் தயாரித்த முதல் படம் ‘சேது பூமி’. ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்க்கையையும், அங்கு இஸ்லாமியர்களும் இந்துக்களும் எப்படி ஒற்றுமையாகவும், உறவுக்காரர்களாக வாழ்கிறார்கள், என்பதை அழுத்தமாக சொல்லிய இப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
’சேது பூமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, இயக்கத்தில் ‘அக்பர்’ என்ற படத்தை தயாரிக்கிறார் எம்.ஏ.ஹபீப். இதில் ‘சேது பூமி’ பட நாயகன் தமன்தான் ஹீரோவாக நடிக்கிறார். எஸ்.முத்துராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, பாரதி – மோனிஷ் இசையமைக்கிறார்கள். இவர்கள் மட்டும் இன்றி, இப்படத்தில் இடம் பெறும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும், ‘சேது பூமி’ படத்தில் பணியாற்றியவர்களே.
தற்போது படத்திற்கான நாயகி தேர்வில் ஈடுபட்டுள்ள இயக்குநர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமியிடம் படம் குறித்து கேட்டதற்கு, “அன்பையும், அறனையும் நிலை நிறுத்துபவன் அக்பர். இப்படத்தில் நகைச்சுவை உள்ளிட்ட அனைத்து கமர்ஷியல் விஷயங்களும் இருக்கும். ’சேது பூமி’ படத்தில் எப்படி உறவுகளைப் பற்றி சொல்லி, குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக கொடுத்தேனோ, அதேபோல், ‘அக்பர்’ படமும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய கமர்ஷியல் படமாகவே இருக்கும்” என்றார்.









