full screen background image

படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினார் நடிகர் அருண் விஜய்..!

படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினார் நடிகர் அருண் விஜய்..!

நடிகர் விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கியுள்ளார்.

‘ICE – இன் சினிமா என்டர்டெயின்மென்ட்’ என்று அதற்கு பெயர் சூட்டியுள்ளார். இந்த பட நிறுவனத்தின் துவக்க விழா, நேற்று மாலை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் நடைபெற்றது.

IMG_1589

இந்த விழாவில் நடிகர் விஜயகுமார், அருண் விஜய்யின் தாயார் முத்துக்கண்ணு, மனைவி ஆர்த்தி, மற்றும் அவரது அக்காள் கணவரான டாக்டர் கோகுல கிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தப் பட நிறுவனத்தின் துவக்கம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் விரிவாகவே பேசினார் நடிகர் அருண் விஜய்.

IMG_1468

“நான் சினிமாவுக்குள்ள வந்த இந்த பதினெட்டு வருடங்களில் நான் ஒரே நாளில் லைம் லைட்டிற்கு வந்துவிடவில்லை. படிப்படியாகத்தான் வளர்ந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.

எனக்கு சினிமாவில் அறிமுகம் எளிதாக கிடைத்துவிட்டது. ஆனால் கடினமாக உழைத்துதான் இந்த இடத்துக்கு வந்தேன். அப்படி நான் நல்ல நிலைக்கு வந்தும் எனக்கு என்னை விளம்பரப்படுத்திக் கொள்ள தெரியாத காரணத்தால் எனக்கான முக்கியத்துவம் கிடைக்காமல் போனது.

‘தடையறத் தாக்க’ திரைப்படம் தமிழ்த் திரையுலகில் எனக்கான ஒரு இடத்தை சம்பாதித்துக் கொடுத்தது. அடுத்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் என்னை உலகம் முழுவதும் கொண்டு போய்விட்டது. இதற்காக இயக்குநர் கெளதம் மேனனுக்கு இப்போதும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நான் நடித்து முடித்திருக்கும் ‘வா டீல்’ திரைப்படம் மிக விரைவில் வெளிவரவுள்ளது.

இப்போது தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்றிலும், ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் ‘ப்ருஸ் லீ’ என்னும் கன்னடப் படத்தில் புனித் ராஜ்குமாருடனும் நடித்து வருகிறேன்.

நான் விரைவில் ஒரு ஹிந்தி படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளேன். இப்போதைக்கு அதை பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ள முடியாது. நான் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் அப்பா உணர்ச்சிப் பெருக்கில் சொல்லிவிட்டார். விரைவில் அதை பற்றிய தகவல்களை சொல்கிறேன்.

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் உள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தமிழ் சினிமாவை புகழ்ந்து பாராட்டுகிறார்கள். அந்தளவுக்கு நமது தமிழ் சினிமாவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இதுவே எனக்கு இந்த ‘ICE’ நிறுவனத்தை துவங்க மிக பெரிய உந்துகோலாக அமைந்தது.

இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஏன் துவக்கினேன் என்றால், இது எனக்குள்ளேயே இருக்கும் ரொம்ப நாள் ஆசை.. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பல புதிய இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் வாயிலாக புதிய நல்ல தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன்.. இதற்காகத்தான் இந்த இன் சினிமா எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தையே துவக்கியிருக்கிறேன்.

இப்போது நமது தமிழ் சினிமாவில் ஸ்டார் வேல்யு இல்லாத படங்கள் நல்ல படங்களாக இருந்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொண்டு ஆதாரவு தெரிவிக்கும் ஒரு நல்ல சூழல்  ஏற்பட்டுள்ளது. அதற்கு உதாரணமாக ‘காக்கா முட்டை’ படத்தைச் சொல்லலாம்.

இந்த நிறுவனம் சாதனை படைக்க நினைக்கும் புதிய இயக்குநர்களுக்கு மிக பெரிய பிளாட்பார்மாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. வரும் நவம்பர் மாதத்தில் இருந்து எங்கள் படத்தின் தயாரிப்பை துவங்கவுள்ளோம்.

மேலும் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ள நினைக்கும் இளம் இயக்குனர்களுக்கு ட்விட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் விரைவில் தகவல்களை வெளியிடுவோம்..” என்றார்.

Our Score