தமிழ் திரையுலக இயக்குநர்களின் கனவுகளை நிஜங்களாக்குகிறது ‘ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்..!’
தமிழ்த் திரையுலகின் இன்றைய உடனடி தேவை அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான ஸ்டூடியோ. இதனைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர் ஆதித்யராம், இயக்குநர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப ‘ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்’ என்னும் படப்பிடிப்பு தளத்தை சென்னை அருகே ஈ.சி.ஆர் சாலையில் நிறுவியுள்ளார்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு புகாத படப்பிடிப்புத் தளமாக இருப்பது ஆதித்யாராம் ஸ்டுடியோவிற்கு மிகப் பெரிய பலமாக விளங்குகிறது. இருபத்தைந்து ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமாக ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கிறது இந்த ஸ்டூடியோ. இந்த இருபத்தைந்து ஏக்கர் இடமும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.
இங்குதான் தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட படங்களான உலகநாயகன் கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ மற்றும் கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படங்களின் படப்பிடிப்புகள் அரங்குகள் அமைக்கப் பெற்று நடைபெற்றன.
தற்போது இளைய தளபதி விஜய், ஹன்சிகா மொத்வானி, ஸ்ருதிஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில், பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில பெரும் பொருட்செலவில் தயாராகிவரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு பிரத்யேகமாக இந்த ஸ்டூடியோவில்தான் நடைபெற்று வருகிறது. படபிடிப்பு வளாகத்தின் முதல் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் ‘புலி’ படத்தின் பாடலுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஆதித்யாராம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ஆதித்யாராமும் ஒரு சினிமா தயாரிப்பாளர்தான். இவர் தயாரித்த ‘ஏக் நிரஞ்சன்’, ‘குஷி குஷிகா’, ‘ஸ்வக்தம்’, ‘சண்டதே சண்டதே’ போன்ற தெலுங்கு படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்களை தயாரித்து வருகிறார்.









