இந்தப் படத்தை கிரைம், மர்டர், சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்த குறும் படம் என்றே சொல்லலாம்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார் ஹீரோயின் மோனிகா செலினா. இவருக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது. இந்த நேரத்தில் அவரது கணவன் வெளியூர் சென்றுவிட்டார். அதனால், தனிமையில் இருக்கிறார் செலினா.
இந்த நேரத்தில் இவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த சுந்தரம் என்பவரை கொலை செய்யும் ஹீரோ சதா நாடார் கொலையாளியின் உடலுடன் செலினாவின் வீட்டுக்குள் வந்து அடைக்கலம் ஆகிறார்.
கொலை செய்யப்பட்டவரின் உடலோடு தப்பிச் செல்ல நினைக்கிறார் சதா நாடார். ஆனால் அவரது வருகையை எதிர்பார்த்து வெளியில் ஆம்னி வேனோடு காத்திருக்கும் அவரது சகாக்கள் அடுக்குமாடி குடியிருப்பின் கீழே இன்னமும் மக்கள் நடமாட்டம் இருப்பதாக சொல்ல… அங்கேயே காத்திருக்கிறார் சதா நாடார்.
இந்த நேரத்தில் செலினாவை விரட்டியும், மிரட்டியும் அமைதியாக இருக்கச் சொல்கிறார் சதா. அதே நேரம் இவரிடம் இருந்து தப்பிக்கவும் நினைக்கிறார் செலினா. ஆனால் அது முடியாமல் போகிறது.
அதன் பின்பு இருவரும் சமாதானமாக பேச துவங்கும் பொழுது “இந்தக் கொலை ஏன்? எதற்காக?” என்று செலினா விசாரிக்கிறார்.
அப்போது இந்தக் கொலையை தான் ஏன் செய்ய வேண்டி வந்தது என்பதை சதா நாடார் பிளாஷ்பேக் கதையாகச் சொல்கிறார்.
இடையிடையே போலீஸ் அடுக்குமாடி கொண்டிருப்பின் அருகில் வந்து செல்ல சதா நாடார் வெளியில் வருவது தாமதமாகிறது.
கடைசியில் என்ன நடக்கிறது? சதா நாடார் வெளியேறினாரா? செலினா தப்பித்தாரா இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘ல்தகா சைஆ’ என்ற வித்தியாசமான தலைப்பு வைத்து ஒரு படத்தைத் தயாரித்து இயக்கியிருந்த சதா நாடார்தான் இந்தப் படத்தையும் உருவாக்கி இருக்கிறார்.
நிஜ வாழ்க்கையில் சதா நாடார் மோனிகா செலினா இருவரும் தம்பதிகள்தான். இருவருமே பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்துவிட்டார்கள்.
நடிப்பென்று பார்த்தால் இருவரின் நடிப்பும் ரொம்பவும் சாதாரணமானதுதான். ஆனால் செலினா சிற்சில இடங்களில் பயப்படுவதுபோல் நடித்தக் காட்சிகளிலும் ஒரு அம்மாவாக தவிக்கின்ற தவிப்பிலும் குழந்தையைப் பாதுகாக்க நினைக்கும் ஒரு தாயின் நடிப்பை சிறப்பாகக் காண்பித்திருக்கிறார்.
சதா நாடாரின் நடிப்பு மிகவும் சாதாரணமானதுதான். அவர் தன்னுடைய கதையை பிளாஷ்பேக்கில் சொல்லும் பொழுதுகூட உணர்ச்சிகள் பொங்காமல் சாதாரணமாக சொல்லி இருக்கிறார். சில இடங்களில் ஆவேசத்துடன் பேசியிருக்கிறார். அவ்வளவுதான்.
வில்லனாக நடித்திருக்கும் சுந்தரம், சதா நாடாரின் நண்பனாக நடித்திருக்கும் பாண்டி இருவரும் தங்களால் முடிந்த நடிப்பையே கொடுத்திருக்கிறார்கள்.
இது போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது. அந்த வகையில் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கும் எம்.எஸ்.மனோ குமார் சின்ன பட்ஜெட் படத்திற்கு எப்படி கேமரா ஒர்க் நடக்குமோ அது போலவே செய்து இருக்கிறார்.
ஜான்சனின் பின்னணி இசை அவ்வப்பொழுது நமக்குள் ஒரு பதட்டம் வரும் அளவுக்கு ஒலிக்கிறது. படத்தொகுப்பாளர் தன்னால் முடிந்த அளவுக்கு இந்தப் படத்தை திரில்லர் படமாகக் கொடுக்க முனைந்திருக்கிறார்.
இந்தப் படத்தை திரைப்படம் என்று சொன்னால் நம்மால் ஏற்கவே முடியாது. ஒரு குறும்படம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு குறும் படத்திற்கு எந்த அளவுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கம் செய்வார்களோ… அதைத்தான் இதிலும் காட்டி இருக்கிறார்கள்.
கேமரா கோணங்கள், வசனங்கள் காட்சி அமைப்புகள், திரைக்கதை அனைத்துமே ஒரு அமெச்சூர்தனமாக இருக்கிறது.
இதைவிடவும் சிறந்த நடிப்பு, இயக்கம், வசனம் இசை, ஒலிப்பதிவு, படமாக்கல் என்று அனைத்தையும் பல குறும் படங்களில் காட்டிவிட்டார்கள். அதில்கூட இடம் பிடிக்க முடியாத அளவுக்கு இந்தப் படத்தில் இருக்கும் குறைபாடுகள் மிகவும் வருந்தத்தக்கது.
இந்திய சினிமாவில் இப்போதைய ட்ரெண்டான பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பற்றி இந்தப் படம் பேசுவது ஒன்றுதான் நமக்கு இருக்கும் ஒரேயொரு ஆறுதல்!
அதிலும் பெண் குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ என்பதைச் சொல்லித் தர வேண்டும் என்பதை இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதை மட்டும் நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
சொல்ல வரும் விஷயத்தை சினிமா மீடியாவில் சொல்வதற்கு இயக்குநர் இன்னமும் நிறையவே சினிமா பற்றிப் பாடம் கற்றுக் கொண்டு வர வேண்டும்.
RATING : 1 / 5









