full screen background image

பருந்து – சினிமா விமர்சனம்

பருந்து – சினிமா விமர்சனம்

நடிகர்கள்:-

ஆர்.அழகுமலை, வி.ஆர்.விநாயக், ஷர்மிஷா, சர்மிளா, மன்சூர் அலி கான், ஜி. மாரிமுத்து, அப்புக்குட்டி, சென்றாயன், இயக்குநர் பேரரசு மற்றும் பலர்

தொழில் நுட்பக் குழு:-

இயக்கம் மற்றும் தயாரிப்பு: ஆர்.அழகுமலை
ஒளிப்பதிவாளர்: காசிவிஸ்வநாதன்
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் ரூபர்ட்​
படத்தொகுப்பாளர்: ஜெயகிருஷ்ணா
பத்திரிக்கை தொடர்பு : விஜயமுரளி

ஒரு கிராமத்து காதல். இந்தக் காதலுக்கு இடையூறாக இருப்பது சாதி. ஆனால் இது காதலே இல்லை என்கிறார்கள் பெற்றோர்கள். காதல் காதல்தான் என்கிறார்கள் காதலர்கள். என்ன முடிவு? இதுதான் இந்தப் படம்.

கிராமத்தில் மெஜாரிட்டியாக இருக்கக் கூடிய உயர் சாதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு தற்போது மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது. இளைய மகள் அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். வகுப்பிலேயே முதல் மாணவி அவர்தான்.

இந்த நேரத்தில் மாரிமுத்துவின் கார் டிரைவரான மூர்த்தியுடன் ஏற்படும் காதலினால் இரண்டாவது மகளான உமா தன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

இதற்கு அந்தப் பகுதியில் மாற்று சாதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சென்ராயன் உதவி செய்கிறார்.

அந்த ஊர் தலைவரான அழகுமலை விஷயம் அறிந்து எப்படியாவது காதலர்களை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று களத்தில் குதிக்கிறார்.

அவர் ஒரு பக்கம் காதலர்களைத் தேட இன்னொரு பக்கம் மாரிமுத்துவும், உமாவின் தாய் மாமாவான மன்சூர் அலிகானும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அழகுமலையின் தம்பியான வி.ஆர்.நாயக், தன்னுடைய காதலியான போலீஸ் எஸ்.ஐ. ஜனனியின் மூலமாக சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் காதலர்கள் இருப்பிடத்தை அறிய முயல்கிறார்.

இவர்களுக்கு உதவி செய்தது சென்றாயன் என்பதை அறிந்து சென்றாயனைப் பிடித்து அவர் மூலமாக காதலர்களை பிடிக்க நினைக்கிறார் அழகுமலை.

இறுதியில் காதலர்களை இவர்கள் கண்டுபிடித்தார்களா? இல்லையா? காதலர்கள் நிலை என்ன ஆனது? அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்தப் ‘பருந்து’ படத்தின் கதை.

காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் விநாயக் மற்றும் ஷர்மிஷா இருவரும் அவரவரின் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். பாடல் காட்சிகளில் கொஞ்சம் ரொமான்ஸை காட்டியிருக்கிறார்கள்.

இளம் வயதில் கண்மூடித்தனமாக வரும் காதலும், இனம் புரியாத ஒரு ஏக்கமும், எதிர் பாலின ஈர்ப்பும்தான் இவர்களை சேர்த்து வைத்திருக்கிறது.

அதை அவர்கள் மிகச் சரியாக தங்களுடைய நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார்கள்.

உமாவின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்து, மூத்த மகளே திருமணத்தை காத்திருக்கும் நிலையில் இளைய மகள் ஓடிப் போனது தெரிந்தால் ஊருக்குள் தன்னை என்ன சொல்வார்களோ… மூத்த மகள் திருமணம் நின்றுவிடுமா என்கின்ற ஒரு பயத்திலும், அச்சத்திலும் குழப்பத்திலும் அவர் தவிக்கின்ற தவிப்பு அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக உள்ளது.

படத்தின் மிகப் பெரிய பலமாக மாரிமுத்துவின் நடிப்புதான் அமைந்துள்ளது.

ஊர்த் தலைவராக நடித்திருக்கிறார் இயக்குநர் அழகுமலை. இதுதான் அவருக்கு முதல் படம் என்றாலும் அந்தக் குறையே தெரியாத வண்ணம் நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில்தான் அனுபவம் இல்லாததால் திணறியிருக்கிறார்.

அவருடைய உதவியாளராக நடித்தவர் சில காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்.

உமாவின் தாய் மாமனாக நடித்திருக்கும் மன்சூர் அலிகான் திரைக்கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார். அதேபோல் இவர் அழகுமலையை குறித்துப் பேசுகின்ற வசனங்கள் எல்லாம் சிறப்பு.

காதலர்களுக்கு உதவி செய்து மாட்டிக் கொண்டு அடிவாங்கும் சென்றாயனும், பந்தா பரமசிவமாக அலட்டல் செய்து கடைசியில் மாட்டிக் கொண்டு அடிவாங்கும் அப்புக்குட்டியும் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

மாரிமுத்துவின் மனைவியாக நடித்திருக்கும் ஷர்மிளாவும், அழகுமலையின் மனைவியாக நடித்து இருப்பவரும் ஒரு பரிதவிப்பான கிராமத்து அம்மாக்களின் நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள்.

சப் இன்ஸ்பெக்டர் ஜனனியும், அவரது காதலனும் இன்னொரு காதல் கதையை படத்தில் காட்டி இருந்தாலும், சைபர் கிரைம் அலுவலகத்திற்கு உள்ளேயே சர்வசாதாரணமாக நுழைந்து காதலியுடன் பேசுவதெல்லாம் தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடக்கும்.

ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதன் அந்தக் கிராமத்தின் அழகை கண் குளிர காட்டி இருக்கிறார். ஆக்சன் காட்சிகளை பரவாயில்லாமல் பதிவு செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் ரூபர்ட் பாடல்களுக்கான இசையை சிறப்பாக இசைத்திருக்கிறார். பின்னணி இசை ஆங்காங்கே பழைய பாணியில் இருந்தாலும் சின்ன பட்ஜெட் படத்திற்கு ஏற்ற இசைதான்.

சமூகப் பொறுப்புள்ள படத்தைக் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லும் இயக்குநர் அழகுமலை, அதை சரியாகக் கொடுத்தாரா என்பது கேள்விக்குறிதான்.

சாதி கடந்த காதலை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் பள்ளி படிப்பைக்கூட முடிக்காத பெண்ணுக்கு காதல் தேவையா என்பதைத்தான் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம் என்று பேட்டிகளில் இயக்குநர் சொன்னாலும், படத்தில் அது பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை என்பது முரணான விஷயம்.

படத்தின் துவக்கத்திலிருந்து கடைசிவரையிலும் நம்ம சாதியில் இப்படி ஒரு பொண்ணு இன்னொரு சாதியை சேர்ந்தவனை இழுத்துட்டு ஓடுறது எவ்வளவு கேவலம்? எவ்வளவு அசிங்கம்? மானம் போச்சு! மரியாதை போச்சு! குடும்ப பெயர் கெட்டுப்போச்சு! என்றெல்லாம் சாதியத்தை தூக்கி பிடிக்கும் வசனங்களே அதிகமாக இருக்கின்றன.

அதிலும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பேரரசுவிடம் பேசும் பொழுது தங்கள் சாதித் திமிரையும் பெருமையையும் சொல்லியே பேசும் அழகுமலை, பின்பு பார்வையாளர்களுக்கு சொல்லாமல் ரகசியமாக ஒரு விஷயத்தை பேரரசுவிடம் சொல்லி விஷயத்தை அப்படியே யுடர்ன் அடித்து விடுகிறார்.

அவர் பேரரசுவிடம் சொன்ன விஷயம் அந்தப் பெண் இன்னும் பள்ளி படிப்பைகூட முடிக்கவில்லை என்பதுதான். இதை வெளிப்படையாக அப்பொழுதே சொல்லி இருந்தால் பார்வையாளர்களும் இது காதலே அல்ல. வெறும் இனக்கவர்ச்சிதான் என்று உணர்ந்து படத்தின் கதையோட்டத்திலும், இயக்குநர் உடனும் இணைந்து பயணித்து இருப்பார்கள்.

ஆனால் இயக்குநர் கடைசிவரையில் அதை சொல்லாமல்விட்டதால் இந்தப் படம் உயர் சாதிப் பெருமை பேசும் படமாகவே அமைந்துவிட்டது என்பது வருத்தமான விஷயம்.

கடைசியாக காதலர்களை கண்டுபிடித்து அவர்களையும் அடித்து உதைத்துவிட்டு அதன் பிறகு பள்ளி பருவ காதலைப் பற்றிச் சொல்லி அவர்கள் மனத்தை மாற்றுவதாகவும்,

அவர்களும் உடனடியாக  மனம் மாறி அவரவர் வீடு செல்வது போலவும் திரைக்கதையை போங்காட்டம்தான்!

காதலர்களைப் பிடித்த பின்புகூட படிக்கிற வயதில் இதெல்லாம் தேவையா? நீ படித்து பெரிய ஆளாக வேண்டாமா?!” என்று படிப்பைப் பற்றி சொல்லாமல், உணர்த்தாமல் வெறுமனே காட்சியை நகர்த்தி இருப்பது ஏன் என்று தெரியவில்லை!

மேலும், சென்றாயனும், அவரது அம்மாவும் திருட்டு வேலைகள் செய்வார்கள் என்பது போலவும் இப்படி காதலர்களை சேர்த்து வைப்பதாக சொல்லி அவர்களிடம் பணம், நகைகளை பறிப்பார்கள் எனவும், இதுதான் அந்த சாதியின் பழக்கம் என்பது போலவும் காட்சிகளையும், வசனத்தையும் வைத்திருப்பது அப்பட்டமான சாதி வெறி உணர்வைக் காட்டுகிறது.

கூடுதல் போனஸாக… “அந்தப் பெண்ணுடன் சீக்கிரம் உடலுறவு கொண்டு, உடனடியாக அவளை கர்ப்பம் ஆக்கிவிடு” என்று சென்றாயன் அட்வைஸ் கொடுப்பது போலவும் திரைக்கதையை எழுதி இயக்குநர் தன் சாதிப் பித்தைக் காட்டி இருக்கிறார்.

“அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள்” என்கின்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மனதில் விதைப்பதுபோல இப்படி விஷத்தை கொட்டி இருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் எதையோ எடுத்து எதுவோ கைக்கு வந்த கதையாக…

இந்தப் ‘பருந்து’ படம் பள்ளிப் பருவத்துக் காதலை எதிர்ப்பதாக சொல்லி சாதிய வெறியைத்தான் ஊட்டியிருக்கிறது.

RATING : 0 / 5

Our Score