full screen background image

ஆல் பாஸ் – சினிமா விமர்சனம்

ஆல் பாஸ் – சினிமா விமர்சனம்

ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகனா தயாரித்துள்ள படம் ‘ஆல் பாஸ்!’

‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா. ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பாண்டிய நாடு’, ‘எதிர் நீச்சல்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்’ படத்தில் பி.டி. வாத்தியாராக நடித்த அருவி மதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவு செய்த தில்ராஜு, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

‘பசங்க’ படத்தின் படத் தொகுப்பாளர் எஸ். பாஸ்கர் இப்படத்திற்கும் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன். டி பணியாற்றியுள்ளார். நடன இயக்குநராக ஐ. ராதிகா, சண்டைப் பயிற்சியாளராக மெட்ரோ மகேஷ் பணியாற்றியுள்ளனர். ஒப்பனை – எல்.வி. ராஜா, உடைகள் – ஏ.எஸ். வாசன், ஸ்டில்ஸ் – அண்ணாதுரை, விளம்பர வடிவமைப்பு – கிப்சன் UGA, பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ்.

வட சென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மைதீன்.

பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் கதை நடக்கும் இடம் வட சென்னை என்றாலே அடிதடி, வெட்டுக் குத்து, கொலை, அரிவாள்கள்தான் அதிகமாக காட்சிப்படுத்தப்படும். ஆனால் இந்த ‘ஆல் பாஸ்’ என்ற படத்தில் அது முற்றிலுமாக வேறுபட்டு ஒரு வித்தியாசமான கதையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் வருங்கால சந்ததியினருக்கு ஒரு மிகச் சிறந்த படிப்பினையும் இந்தப் படம் சொல்லியிருக்கிறது. அந்த வகையில் முதலிலேயே இந்தப் படத்தை நாம் பாராட்டி விடுகிறோம்.

ஜெயப்பிரகாஷ், சுப்ரமணிய சிவா, பிரசன்னா மூவரும் வட சென்னை பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிறிய வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் மூவரும் அண்ணன் தம்பிகளில்லை. உறவினர்களும் இல்லை. ஆனால் 18 வருடங்களுக்கு முன்பாக தற்செயலாக இவர்கள் மூவருக்கும் குழந்தை பிறந்த சமயத்தில் மருத்துவமனையில் சந்தித்தபோது நடந்த நிகழ்வுகளால் நண்பர்களாகி… இப்போது சித்தப்பா, பெரியப்பா என்று உறவு வைத்து அழைக்கும் அளவுக்கு நெருக்கமாகி விட்டார்கள்.

சுப்பிரமணிய சிவா, பிரசன்னா இருவரின் வீட்டிலும் ஜெயப்பிரகாஷை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்கள். அந்த வகையில் இருவரின் குழந்தைகளும் ஜெயபிரகாஷை ‘பெரியப்பா’ என்று பாசத்துடன் அழைத்து வருகிறார்கள்.

இதில் ஜெயபிரகாஷ் சமையல் காண்ட்ராக்ட் எடுத்து பிழைப்பை ஓட்டி வருகிறார். பிரசன்னா சைக்கிள் கடை வைத்திருக்கிறார். சுப்பிரமணிய சிவா பெயிண்ட் அடிக்கும் தொழிலில் இருக்கிறார். மூவருக்குமே சொற்ப வருமானம்தான். ஆனால் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

சுப்பிரமணிய சிவாவின் மகளான ஜனனி ஆட்டோ டிரைவரான துஷ்யந்தை காதலிக்கிறார். இந்தக் காதல் வீட்டுக்கு தெரிய வர பஞ்சாயத்து கூடுகிறது. அதில் “இன்னும் மூன்று மாதத்தில் சொந்தமாக ஆட்டோ வாங்கி விடுவேன். அதன் பின்பு முறைப்படி உங்களது வீட்டில் வந்து பெண் கேட்கிறேன்” என்று துஷ்யந்த் சொல்கிறார். இதை மூன்று குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இவர்கள் மூவருக்கும் ஒரே வயதில் ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது பிளஸ் 2 தேர்வு எழுதி பாஸ் ஆகி அடுத்த கல்லூரிக்கு போக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்கள். ஆனால். இவர்கள் விளம்பரத்தை பார்த்து மிகப் பெரிய கல்லூரி ஒன்றில் சேர வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அங்கே சேர்வதற்கு பணம் இல்லை என்பதால் அரசு கல்லூரியில் சேர்ந்து படிக்கும்படி ஜெயப்பிரகாஷ் அறிவுறுத்துகிறார்.

அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான சரத் லோகித்ஷவா வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் செலவுகளுக்காக முறைகேடாக சம்பாதித்த பணத்தை பல இடங்களில் பதுக்கி வைத்திருக்கிறார். அப்படி ஒரு 5 கோடி ரூபாயை தன்னுடைய குடோனில் பதுக்கி வைத்திருக்கிறார்.

கிரிக்கெட் விளையாடும் பொழுது ஓடிப் போன பந்தை எடுப்பதற்காக அந்தக் குடோனுக்குள் நுழையும் 3 பையன்களும் அந்தப் பணப் பெட்டியைப் பார்த்தவுடன் ஆசைப்பட்டு அந்தப் பணத்தை அப்படியே தூக்கிக் கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.

பணம் காணாமல் போன அதிர்ச்சியில் எம்.எல்.ஏ. அந்தப் பகுதிக்கே ஓடி வந்து அந்தப் பகுதியின் கவுன்சிலர் வீட்டுக்குள் குடியேறுகிறார். அந்தப் பணத்தையும், பணத்தை எடுத்தவனையும் கண்டுபிடித்து தர வேண்டும் என்று கவுன்சிலரை விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார் எம்.எல்.ஏ. கவுன்சிலரும் அவருடைய அடியாட்களும் பணத்தைத் தேடி அந்த சத்யா நகருக்குள் அலைகிறார்கள்.

இன்னொரு பக்கம், “இந்தப் பணம் நம்முடைய பணம் அல்ல; இதை எங்கே எடுத்தீர்களோ அங்கேயே கொண்டு போய் வைத்து விடுங்கள்” என்கிறார் ஜெயப்பிரகாஷ். ஆனால் ஜெயப்பிரகாஷின் மனைவியோ இதை எதிர்க்கிறார். “கடவுளா பார்த்து நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதை ஏன் நாம் கைவிட வேண்டும்?” என்று அவர் சொல்ல, மற்றவர்களின் மனைவிகளும் பிரசன்னாவும் சுப்பிரமணிய சிவாவும் இதற்கு “ஆமாம் சாமி” போட மூன்று குடும்பங்களுக்கும் இடையே பெரும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதன் முடிவுதான் என்ன? அந்த பணம் கடைசியில் யாரிடம் போய் சேர்ந்தது? எம்.எல்.ஏ. கவுன்சிலர் இருவரும் பணத்தைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா..? மூன்று பையன்களும் பணத்தைத் திருப்பி கொடுத்தார்களா? அல்லது அவர்களின் குடும்பத்தினரே அதை அனுபவித்தார்களா..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவாரசியமான திரைக்கதை.

முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்னா மூவருமே தங்களுடைய இயல்பான நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள். மற்றைய திரைப்படங்களில் இருப்பதைப் போல மிகையான நடிப்பு எதையும் எந்தக் கட்சியிலும் இவர்கள் கொடுக்காமல் நடித்திருப்பது இந்தப் படத்தை ரசிக்க வைத்திருக்கிறது.

மேலும் இவர்களது மனைவியாக நடித்திருக்கும் செந்தி குமாரி, வினோதினி, மோகனா மூவருமே ஒரு வீட்டுக்குள் ஓரகத்திகள் எப்படி இருப்பார்களோ.. அதுபோன்ற கேரக்டர்களை நமக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறார்கள்.

பணத்தினால் இவர்கள் மூவருக்கும் சண்டை வந்த பின்பு இவர்களுடைய நடிப்பு அப்படியே அட்சரகம் பிசகாமல் இயல்பான நம்முடைய பக்கத்து வீட்டு பெண்களைப் போலவே இருக்கிறது. அந்த வகையில் இவர்களிடமிருந்து ஒரு சிறந்த நடிப்பை வரவழைத்திருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் துஷ்யந்தும், ஜனனியும் காதல் போர்ஷனை அழகுபடுத்தி இருக்கிறார்கள். பாடல் காட்சிகளின் மண்டேஜ் ஷாட்களில் இருவருமே காதலை வெளிப்படுத்தும்விதம் மிக நாகரிகமாக இருந்தது.

இந்த மூன்று குடும்பங்களின் பிள்ளைகளாக நடித்திருக்கும் சஞ்சய், கோகுல், முகில் மூவருமே அந்தந்த வயதுக்கேற்ற அழகான, அமைதியான நடிப்பையே காண்பித்து இருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ.வாக நடித்திருக்கும் சரத் லோகித்ஷவா ஒரு மூர்க்கமான, வெறித்தனமான, திமிர் பிடித்த அரசியல் வியாதி எப்படி இருப்பாரோ… அதை அப்படியே நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டி இருக்கிறார்.

ஏரியா கவுன்சிலராக நடித்திருக்கும் சத்யா சிரித்தபடியே வில்லத்தனத்தை காட்டுபவராக அறிமுகமானாலும், கடைசியில் அவருடைய பரிதாபமான நிலைமையைப் பார்த்து நமக்கே சிரிப்பு வந்துவிட்டது. சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் சத்யா.

ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். அதிலும் அந்த காதல் பாடல் திரும்பத் திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசையும் அதிகமாக அடித்து ஆடாமல் திரைக்கதை நகர்வதற்கு உதவியாக உயிரோட்டமான இசையாக அமைந்திருக்கிறது.

படத் தொகுப்பாளர் பாஸ்கர் தன்னுடைய பணியை கச்சிதமாக செய்திருக்கிறார், படத்தின் சிறந்த திரைக்கதையினால் அந்தப் பணம் என்னவாகும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பை படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் நிற்க வைப்பதுபோல அடுத்தடுத்து காட்சிகளை விறுவிறுப்பாக தெரியும் அளவுக்கு நறுக்கி தந்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய பணியும் பாராட்டுக்குரியது.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய கருப்பு பணத்தை பதுக்கி வைத்து அது காணாமல் போனால் எப்படி எல்லாம் புலியாய் மாறுவான் என்பதை எடுத்துக்காட்டுவது போல எம்.எல்.ஏ. கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்.

அதோடு அந்தப் பணம் காணாமல் போன பின்பு அதைத் தேடுகின்ற பணியிலும் ஒரு கூட்டம்.. அதை வைத்து என்ன செய்யலாம் என்று இன்னொரு கூட்டம்… இந்த இரண்டு டீம்களுக்கு இடையிலான பிரச்சனைகளைகூட மிகவும் சுவாரசியமான திரைக்கதையில் நகர்த்தி இருக்கிறார். இதனால் படம் மிகவும் பிடித்துப் போகிறது.

பணத்தை தேடி அலையும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள்,  கவுன்சிலரை கைக்குள் வைத்துக் கொண்டு அலைகின்ற அலைச்சலும் அவர்கள் மிக எளிதாக அந்தப் பணத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையில் லாஜிக் இல்லை மீறலே இல்லாத அளவுக்கு இயல்பான காட்சிகளை அமைத்திருப்பது இயக்குநரின் திரைக்கதை திறமையைக் காட்டுகிறது.

இந்தப் படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநரான மைதீன், “ஏழையாக இருந்தாலும் நேர்மையாக இரு” என்கின்ற இப்போதைய இளைய சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை மிக எளிமையான முறையில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் அடுத்தவர் பணத்தை நாம் எடுத்து பயன்படுத்துவது மிகப் பெரிய குற்றம் என்று ஜெயபிரகாஷின் கேரக்டர் மூலமாக அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

அந்த வகையில் இந்தப் படம் அனைவரும் குடும்பத்தோடு பார்த்து ரசித்து ஒரு நல்ல விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டிய திரைப்படம்.

மிஸ் பண்ணிராதீங்க!

இந்த ‘ஆல் பாஸ்’ படம் உண்மையாகவே ஆல் பாஸ் ஆகிவிட்டது!

RATING : 4 / 5

Our Score