தமிழ் சினிமாவில் அரிதினும் அரிதாக, ஒரு குறிஞ்சிப் பூவாகவே பூத்திருப்பவர் இயக்குநர் ராம்.

தமிழ்ச் சினிமாவில் எவ்வளவு கமர்ஷியல் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கிடையே அவ்வப்போது தனது 20 வருட கால சினிமா வாழ்க்கையில் வெறும் ஆறு படங்களை மட்டுமே கொடுத்திருக்கிறார்.

அவருடைய ஆறாவது படம்தான் இந்த ‘ஏழு கடல் ஏழு மலை’.

பொதுவாக “ஏழு கடல் ஏழு மலை” என்ற வார்த்தையை, நமது சிறு வயதில் நமது அப்பாவோ, அம்மாவோ நம்மைக் கதை சொல்லி தூங்க வைக்கும்போது கேட்டிருப்போம்.
 
“ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு இளவரசன், இளவரசியைத் தேடிப் போனான்” அல்லது “ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கோவிலுக்குள் ஒரு புதையல் இருந்தது, புதையலைத் தேடி ஒரு இளவரசன் போனான்” என்று சொல்லியிருப்பார்கள்.
 
அது மாதிரியான ஒரு ‘ஏழு கடல் ஏழு மலை’ தாண்டிய ஒரு இடத்திற்கு நம்மை தூக்கிக் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் ராம்.
 
தீபாவளி பண்டிகைக்காக ஏழு வருடங்கள் தன்னுடைய குடும்பத்தை விட்டுப் பிரிந்து சவுதி அரேபியாவின் ரியாத்தில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சூரி ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்.
 
அவர்  அவசரமாக ஓடி வந்து டிரெயினில் யாருமே இல்லாத ஒரு அன்ரிசர்வ்ட் பெட்டியில் ஏறிட்டார். அதே பெட்டியில் நிவின் பாலியும் உட்கார்ந்திருக்கிறார்.
 
அவருடைய தோற்றமே வித்தியாசமாக, பயமுறுத்தலாக இருக்கிறது. அவர் யாரென்று அவரே சொல்கிறார்.
 
“நான் 8832 வருடங்களுக்கு முன்பு பிறந்தவன். ஒவ்வொரு பிறவியிலும் நான் வேறு வேறாக பிறந்து வந்திருக்கிறேன், இப்போது நான் இந்தப் பிறவியில் இப்படி இருக்கிறேன்” என்று சொல்லி ஆரம்பிக்கிறார்.
 
சக மனிதர்களிடம் எப்படி ஃபிரெண்ட்லியா பேசுவது, நாகரீகமா பேசுவது என்பது நிவின் பாலிக்குத் தெரியவில்லை. 
 
அவர் எடுத்த எடுப்பிலேயே “நான்தான் எல்லாத்துக்கும் ராஜா” ஏன்பதுபோல் பேசுவதால் நிவின் பாலிக்கும், சூரிக்கும் இடையில் பிரச்சனை உருவாகி வாக்குவாதம் அதிகரித்து கடைசியில் கைகலப்பும் நடக்கிறது.
 
இதற்கு நடுவில், அதே பெட்டியில் குடித்தனம் நடத்தும் ஒரு எலி இப்போதுதான் நான்கு குட்டிகளை ஈன்று அவைகளுக்கு பால் கொடுத்து வருகிறது.
 
அந்த எலி வெளியில் வரும்போது சூரி தெரியாமல் கதவை வச்சு நசுக்கி விடுகிறார். இது தெரிந்து நிவின் பாலி சூரியை அடிக்கப் பாய இரண்டு பேருக்கும் இடையில் மோதல் ரத்தக் களறியாகிறது.
 
ஆனாலும் சூரியில், நிவின் பாலியிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. அந்த ட்ரெயின் அடுத்த இரண்டரை மணி நேரத்துக்கு எந்த ஸ்டேஷனிலும் நிற்காது என்பதில் சூரியனால் வேறு பெட்டிக்கும் மாற முடியவில்லை. 
 
சண்டை போடுகிறார்கள். பின்பு பேசிக் கொள்கிறார்கள். மீண்டும் சண்டை… மீண்டும் பேச்சு.
 
இதற்கிடையில் நிவின் தன்னுடைய காதல் கதையைச் சொல்கிறார். ஒவ்வொரு தலைமுறையிலும் தான் காதலித்த பெண், அடுத்த பிறவியில் இன்னொரு இடத்தில் பிறந்து, அந்த இடத்திலேயும் இவரும் போய் அந்தப் பெண்ணிடம் காதலைச் சொல்வது வழக்கமானாலும் எந்தக் காதலுமே நிறைவேறவில்லை.
 
இப்போது கடைசியாக தன்னுடைய காதலியைத் தரங்கம்பாடியில் பார்த்துத் தன் காதலைச் சொல்லி இருக்கிறேன் என்கிறார் நிவின் பாலி.

அதே சமயம் சூரி தன்னுடைய சோகக் கதையைச் சொல்கிறார். அவருக்கு மகன் பிறந்து ஏழு வருஷமானாலும், ஒரு தடவைகூட மகனை போரில் பார்க்கவில்லை. தினமும் செல்போனில் பார்த்துதான் பேசியிருக்கிறார். மகனை கட்டிப் பிடிக்க முடியல. ஒரு முத்தம்கூட கொடுக்க முடியல…” என்று வருத்தப்படுகிறார்.

நிவின் பாலிக்கு இது பற்றிய எந்தக் கவலையும் இல்லை. இவர்கள் இருவரின் பயணமும் கடைசியில் என்னவாயிற்று என்பதுதான் இந்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் திரைக்கதை.
 
ராமின் படம் இப்படித்தான் இருக்கும். அதனால் இப்படிப்பட்ட கதையை ராம் கொடுத்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை.
 
அவருடைய இயக்கமும் வேறு மாதிரியாகத்தான் இருக்கும், ஆனால் இந்த முறை அவருடைய இயக்கத்திற்கு மிகப் பெரிய உதவியைச்  செய்திருப்பது சண்டை பயிற்சி இயக்குநர், ஒளிப்பதிவாளர், உதவி இயக்குநர்கள்தான். அவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

படத்தின் மேக்கிங் அப்படியொரு பிரம்மாண்டமான மேக்கிங். பிரம்மாண்டமான செலவெல்லாம் இல்லை என்றாலும் படம் பதிவே பிரம்மாண்டம்தான்.

ஆனால் ஒரு கம்பார்ட்மெண்ட்க்குள் நடக்கும் சண்டை காட்சிகளை எவ்வளவு அழகு, அழகான வித்தியாசமான ஷாட்ஸ்களை எல்லாம் வைத்து எடுத்துள்ளார் இயக்குநர் ராம்.

சூரியும், நிவின் பாலியும் பேசும் பேச்சு எல்லாமே தத்துவார்த்த விசாரங்கள், விசாரணைகள்… அறிவார்ந்த பேச்சுக்கள் அடங்கிய தத்துவத் தொகுப்புகள்.
 
ஆதித்தமிழனின் வாழ்க்கை முறை, அவனது உணவு பழக்கம், மருத்துவ செயல்பாடுகள், அடுத்த தலைமுறையை வளர்த்த விதம், விவசாயத்தை வளர்த்தது போலவே மனிதர்களிடையே அன்பையும், பாசத்தையும் விதைத்தது, இப்போது மாறி இருக்கும் உலகச் சூழல், சக மனிதர்களை நேசிக்க தயங்கும் மனோபாவம், விலங்குகள் மீது காட்டமறுக்கும் காரணம் காருண்யம், தமிழ் மொழியை உச்சரிக்கத் தெரியாமல் பேசுகின்ற தலைமுறை… என்று இந்த ஒரே படத்திலேயே இந்த சமூகத்தின் மீது தான் வைத்திருக்கும் அதிருப்தியை மொத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ராம்.
 
நல்லதொரு உடற்கட்டு, முகத்தை மறைக்க முடி, அச்சம் என்பதே தெரியாத முகம், யார் எவர் என்று பார்க்க விரும்பாத குணம்.. என்று தன்னுடைய அடுத்தடுத்த பிறவிகளை அறிந்த ஒரு தேவலோக மனிதனாக இந்தப் படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் நிவின் பாலி.
 
ஏழு வருடங்கள் கழித்து குடும்பத்தை பார்க்க போகும் துடிப்புடன் இருக்கும் ஒரு சராசரி சாதாரணமான இளைஞன்.. ஒரு வேற்று கிரகத்து மனிதரிடம் சிக்கி என்ன பேசுவது என்பதே தெரியாமல் பேசி என்ன செய்வது என்றே தெரியாமல் செய்து படம் முழுவதும் இப்போதைய இளைஞர்களின் அடையாளமாக பேசி நடித்திருக்கும் சூரிக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் சூரி. 
 
சில காட்சிகளே ஆனாலும் அஞ்சலி நம்மைப் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொரு பிறவியிலும் அஞ்சலியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நிவின் பாலி பேசும்போது, அஞ்சலி பேசுகின்ற விதமும், அந்த விட்டேத்தியான நடிப்பையும் பார்த்தால் ராம், அஞ்சலிக்காகவே செய்த கதாபாத்திரமோ என்று கேட்கத் தோன்றுகிறது.
 
என்.கே.ஏகாம்பரத்தின் கேமரா ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறது. பேண்டஸியை தொட்டுவிடும் காட்சிகளிலும், சிலிர்ப்பூட்டும் சண்டை காட்சிகளிலும், அந்த சின்ன ரயில் பெட்டியில் போரடிக்காத வண்ணம் மாறி, மாறி கேமிரா லொகேஷனை மாற்றி, கோணங்களை திருப்பி, படம் முழுவதையும் போர் அடிக்காமல் கொண்டு சென்று இருக்கிறார் ஏகாம்பரம்.
 
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மெலோடி ரகம். ஆனாலும் இதையும்விட சந்தோஷ் தயாநிதி உடன் இணைந்து இசைத்திருக்கும் பின்னணி இசைதான் படத்தின் மிகப் பெரிய பலம்.
 
இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு மிக மிக முக்கியமான ஒரு திரைப்படம். ராமின் திரைப்பட வாழ்க்கையிலும் இந்தப் படம் ஒரு மிகப் பெரிய பெயரை அவருக்குப் பெற்றுத் தரும்.
 
சண்டைக் காட்சிகளும், சூரியும், நிவீனும் ரிஸ்க் எடுத்திருக்கும் சில ஆக்ஷன் காட்சிகளும்… சண்டை இயக்குநருக்கும் நல்லதொரு பெயரை பெற்று தந்திருக்கிறது.
 
தொழில் நுட்பத்தில் எந்த ஒரு குறையும் இல்லாமல் அத்தனை பேருமே மிகச் சிறப்பாக தங்களது பணியை செய்திருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக ஒலி வடிவமைப்பாளரையும், ஒலிப்பதிவு செய்தவரையும் மனதாரப் பாராட்டுகிறோம்.
 
என்னுடைய படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று இயக்குநர் ராம் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
 
அதேசமயம் இதுபோன்ற தீவிரமான திரை மொழி படங்களை பார்க்கும் ரசிப்பு தன்மை இன்னமும் நம்முடைய பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கவில்லை.
 
அதனால் இனி அடுத்து வரக் கூடிய திரைப்படங்களில் இயக்குநர் ராம் தன்னுடைய இது மாதிரியான சோதனை முயற்சிகளை நிறுத்திவிட்டு, ‘பறந்து போ’ மாதிரியும் ‘கற்றது தமிழ்’ மாதிரியும்…
 
மிக எளிமையான மனிதர்களிடையேயான கதையை எடுத்து அவர்களுக்கே அதை ரசிக்கும்படியாக திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
 
இந்தப் படம் தியேட்டர்களிலும் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கும் மிகப் பெரிய வசூலையும், படக் குழுவினருக்கு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று தரும் என்ற நம்புகிறோம்.
 
ஒரு வித்தியாசமான படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அவசியம் இந்தப் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள். ஒரு புது அனுபவம் நிச்சயமாக கிடைக்கும்.
 
RATING : 4 / 5