அண்மையில் வெளியான ‘தி டார்க் ஹெவன் ‘ திரைப்படம், களத்தில் நின்ற பல்வேறு போட்டிப் படங்களுக்கு மத்தியில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வெற்றி சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது.
இதன் வெற்றியை இயக்குநர் பாலாஜி தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் விழா எடுத்துக் கொண்டாடினார்.
நெல்லையைச் சேர்ந்த இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி வெளியான படம் ‘தி டார்க் ஹெவன்’.
இதில் சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், சாரண், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார்.
இப்படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் பிலிம் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
சஸ்பென்ஸ் திரில்லராக வெளியான இப்படம்
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநரின் சொந்த ஊரான நெல்லையில் நேற்று இப்படத்தின் வெற்றி விழாவும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருநெல்வேலி, நாகர்கோவில் தினமலர் நிர்வாக இயக்குநர் தினேஷ், வழக்கறிஞர் கமலநாதன் ஆகியோர் படக் குழுவினருக்கு வெற்றி விழா கேடயங்களை வழங்கி வாழ்த்திப் பேசினார்கள்.
விழாவில் திருநெல்வேலி, நாகர்கோவில் தினமலர் நிர்வாக இயக்குநர் தினேஷ் பேசியபோது:
‘’இயக்குநர் பாலாஜி கடந்த ஒன்பது ஆண்டுகளாக எனக்கு நண்பர். நெல்லையைச் சேர்ந்த இவர் நம் ஊர் நடிகர்களை வைத்து இந்தப் படத்தை சிறப்பாக எடுத்துள்ளார்.
இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதை. இந்தப் படத்திற்கு சக்தி பாலாஜி சிறப்பாக இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகன், கதாநாயகி மற்ற நடிகர், நடிகைகளும் அவர்களது கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.
நெல்லை மண்ணைச் சேர்ந்த பாலாஜி, இதுபோல் பல வித் தியாசமான கதைகளைக் கொண்ட படங்களை இயக்க வேண்டும்.
வழக்கமாகச் சென்னையில்தான் வெற்றி விழாவைக் கொண்டாடுவார்கள். ஆனால் தன் சொந்த மண்ணில் இந்தப் படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடிய இயக்குநர் பாலாஜிக்கு வாழ்த்துக்கள்’’. என்றார்.
விழாவில் நடிகர் ஜெயக்குமார் பேசும்போது,
“நான் இந்தப் படத்தில் பாலாஜி சிரமப்பட்டதை, அவர் எதிர்கொண்ட போராட்டங்களை நேரில் பார்த்தேன்.
என்னிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார். பாலாஜி ஒரு நல்ல ஆத்மா. அவர் எப்போது எப்போது எங்கே அழைத்தாலும் நான் வருவேன்.
இது வித்தியாசமான படக் குழு. இங்கே யாரும் மேல், கீழ் என்றெல்லாம் கிடையாது. தயாரிப்பாளர்கூட டீ வாங்கிக் கொண்டு வருவார்.
இது எனக்குப் புதிய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது. இது ஆத்மார்த்தமாக நினைத்து பணியாற்றிய படம். .அனைவரின் ஆசிகளும் பாலாஜிக்கு உண்டு. படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
படத்தில் நடித்திருந்த நடிகை தர்ஷிகா பேசும்போது,
“இது ஒரு குடும்ப நிகழ்ச்சி மாதிரி இருக்கிறது. படம் எடுக்கும்போது நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தார்கள்.
ஆனால் எடுத்து முடித்துவிட்டு பாடல்கள் வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு, நன்றி தெரிவிக்கும் சந்திப்பு என்றெல்லாம் நடைபெற்றது.
திரையரங்குகளுக்கெல்லாம் சென்றோம். இதெல்லாம் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.
இது எனக்கு முதல் படம், அதைப் பெருமையாக சொல்லக் கூடிய படம், இது எனக்கு சிறப்பான மேடை. என்னை இந்தப் படத்தில் உமையாளாகக் கொண்டு வந்த இயக்குநருக்கு நன்றி. அந்த உமையாள் பாத்திரம் என் மனதில் எப்போதும் நிற்கும்.
சில நேரம் நல்ல படங்கள் வரும்; ஆனால் அவை வெளியே தெரியாமல் போய்விடும். இந்தப் படத்தின் வெற்றியைப் பார்ப்பதற்காக பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற பெரிய பெரிய திரையரங்குகளுக்கு எல்லாம் நாங்கள் செல்கிறபோது, அங்கெல்லாம் இந்தப் படம் சென்றடைந்து இருக்கிறபோது எங்கள் தயாரிப்பாளர்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.
அந்த அளவிற்கு முறையாகக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி” என்றார்.
படத்தின் நாயகன் சித்து பேசும்போது,
“இங்கே நான் கலகலப்பாக ஜாலியாகப் பேசலாம் என்று வந்தேன். ஆனால் இங்கே என்னைப் பற்றி ஒளிபரப்பப்பட்ட காணொலியைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது.
எனது வாழ்க்கை ஒரு பெரிய பயணமாகத்தான் இருக்கிறது. நான் திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்து சாலிக்கிராமத்தில் ஒரு பத்துக்கு பத்து அறையில் இருந்து கொண்டுதான் எனது முயற்சிகளை எல்லாம் எடுத்தேன்.
எனது முயற்சிகளைப் பார்த்து விட்டுத்தான் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தார்கள். அதிலிருந்துதான் நான் இப்போதுவரை வளர்ந்து கொண்டிருக்கிறேன்.
இங்கே பேசும்போது ‘ராஜா ராணி’ படத்தில் நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக வருவேன் என்றார்கள். அது மட்டுமல்ல இந்தப் படத்தின் முதல் கதாநாயகனாக நடித்த அந்த நடிகர் நடித்த ‘வல்லினம்’ படத்திலும் நான் அப்படி வந்திருப்பேன்.
ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருக்கிறோமே என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது இதுதான்.
கேமரா எல்லாருக்கும் ஒன்றுதான். கேமரா யார் முன்னாடி வந்து நின்றாலும் அழகாகக் காட்டும். அப்படி முன்னாடி நிற்பதற்கு நமக்கான நேரமும், வாய்ப்பும் வர வேண்டும் அவ்வளவுதான்.
இயக்குநர் சகோதரர் பாலாஜியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நான் படத்தில் நடித்த போதுகூட எனக்கும், அவருக்கும் ஒரு நெருக்கம் ஏற்படதில்லை.
ஏன் என்றால் அவர் பணி சார்ந்த அழுத்தத்தில் இருந்தார். நான் எப்படி நடிப்பது என்று இருப்பேன்.
ஆனால் இந்தப் படத்தின் விளம்பர வேலைகள் ஆரம்பித்தபோதுதான் அவரைப் பற்றி என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
அவ்வளவு சினிமாவின் மீது வெறியுள்ள ஒரு நபராக அவர் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நகைச்சுவை உணர்வு உள்ளவர். எனக்கு ஒரு நண்பராகவும் சகோதரராகவும் அவர் கிடைத்துள்ளார்.
இன்றும் சாலிகிராமத்தில் தனக்கான ஒரு வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கும் பலரை நான் பார்த்து வருகிறேன். அப்படி ஏராளமான பேர் இருக்கிறார்கள்.
45 வயது ஆகியும்கூட திருமணம் செய்து கொள்ளாமல், சினிமாவில் ஏதாவது செய்து விட்டுத்தான் திருமணம் என்று இருக்கிறார்கள்.
வலியைச் சுமந்து கொண்டு இருக்கும் அவர்களை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கும். அப்படி வலியோடு பலர் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் சகோதரர் பாலாஜி நல்ல திறமைசாலியாக இருக்கிறார். அவர் நிச்சயமாகத் தொடர்ந்து வெற்றி பெறுவார்.
நிறையபேர் படம் செய்து விட்டு அதை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பது, எப்படி வியாபாரம் செய்வது, எப்படி வெளியிடுவது, எப்படி விளம்பரப்படுத்துவது என்பதுகூட தெரியாமல் இருக்கிறார்கள்.
பாலாஜி நன்றாகக் கதை எழுதுவார்; நன்றாகக் காட்சிகள் அமைப்பார்; நன்றாக இயக்குவார்; நன்றாகப் பணிபுரிவார். இதையெல்லாம் தாண்டி அவர் திட்டமிடுதலில் பெரிய நிபுணராக இருக்கிறார்.
எப்படி ஒரு படத்தைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாகவும், தீவிரமாகவும் இருக்கிறார்.
எப்படிக் கொண்டு போய் சேர்த்து அந்தப் படத்தை பெரிய படமாக மாற்றுவது என்பதெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும்.
இது ஒரு இயக்குநருக்கு மிகவும் தேவை. அந்த அளவில் இவர் பெரிய இடத்தை அடைவார்.
அதேபோல் இதில் பணியாற்றியுள்ள ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் போன்ற அனைவரும் பெரிய அளவிற்கு வருவார்கள்.
என்னுடன் நடித்த ரித்விகா, தர்ஷிகா, ஜெயக்குமார் சார் மற்றும் அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் கோபால் பேசும்போது,
“இந்தப் படத்திற்கு சக்சஸ் மீட் நடத்தி இருக்கிறோம். வெற்றி விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் படம் என்ன சாதித்திருக்கிறது என்றால் நாங்கள் போட்ட முதலில் இருந்து இதுவரை இரண்டு மடங்கு லாபம் கிடைத்திருக்கிறது. நான் இதைப் பெருமையோடு சொல்வேன்.
இந்தப் படம் எங்களுக்கு மிகப் பெரிய லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. எந்தப் படத்திலும் லாபக் கணக்கை யாரும் சொன்னதில்லை.
ஆனால் நாங்கள் தைரியமாகச் சொல்ல இருக்கிறோம். முழு வசூல் விவரம் பற்றி விரிவாகப் பிறகு கூறுவோம்.
ஒரு சின்ன பட்ஜெட்டில் எடுத்த படம் பெரிய வெற்றி, பெரிய லாபம் பெற்றிருக்கிறது என்பது மிகப் பெரிய விஷயம்.
இதை சாத்தியப்படுத்திய பார்வையாளர்களுக்கு நன்றி. படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி..” என்றார்.
இயக்குநர் பாலாஜி பேசும்போது,
“இன்று நான் நிம்மதியாக ஒரு விஷயத்தை மட்டும் செய்வேன். ஏழாண்டுகள் கழித்து இன்றுதான் நான் நிம்மதியாகத் தூங்குவேன்.
2019 முதல் 2026 ஆண்டு காலக்கட்டத்தில் இன்றுதான் நான் நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்.
சிலர் சின்னச் சின்னப் பிரச்சினைகளோடு வந்ததாகச் சொன்னார்கள். நான் பெரிய பெரிய பிரச்சினைகளோடுதான் வந்தேன். பிரச்சினைகளைக் கண்டு பயந்துவிடக் கூடாது. தொடர்ந்து ஓட வேண்டும் என்று எனக்குக் கிடைத்த அறிவுரையை என்றும் மறக்க முடியாது.
என் உதவி இயக்குநர்களை மறக்க முடியாது. சினிமாவில் 24 கிராஃப்ட் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் இவர்களே 20 கிராஃப்ட்களைச் செய்ததுபோல் உழைத்தார்கள்.
இதில் நடித்திருந்த சித்து, ரித்விகா, தர்ஷிகா, ஜெயக்குமார் சார் நிழல்கள் ரவி சார், வேல ராமமூர்த்தி சார் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி.
என் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவர் பெயரையும் கூறினால், யாராவது பெயர் விடுபட்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.
இதில் சின்ன பாத்திரங்களில் வந்துள்ள நடிகர்கள் திறமை உள்ளவர்கள். அவர்கள் தனக்கான அடையாளத்தை விரைவில் பெறுவார்கள். முறையாக அவர்கள் முயன்று வாய்ப்பு தேடினால் பெரிய இடத்துக்குச் செல்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். ரசிகர்களுக்கு நன்றி..” என்றார்.
விழாவில் படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று அனைவருக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
இது தமிழ்த் திரை உலகில் பல ஆண்டுகளாக நிகழாத ஒரு காட்சியாகும்.









