இந்தப் படத்துல அபர்நதி, லிங்கேஷ், வெற்றிச் செழியன், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு மற்றும் பலர் நடிச்சிருக்காங்க. படத்தை எழுதி, இயக்கியிருப்பது வெற்றிச் செழியன். வேலாயுதம் என்கிற தயாரிப்பாளர் இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்காரு. இசை: தினேஷ் ஆண்டனி. ஒளிப்பதிவு: அர்ஜுன் ரவி, ஞானசேகர். எடிட்டிங்: சி.கே. ரஞ்சித். கலை இயக்கம்: ராகவன், சஞ்சீவி.
இந்தப் படம் செஸ் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, அதில் ஒரு மிகப்பெரிய ஆளாக வரவேண்டும் என்று துடிக்கும் ஒரு சின்ன பள்ளி மாணவனின் கதை இது.
அஸ்வின் என்கிற அந்தச் சிறுவன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுடைய தாய் அபர்நதி வந்து சென்னையில் துப்புரவுத் தொழிலாளி—கார்ப்பரேஷன்ல தெரு கூட்டுறவங்க. அவனுக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். அவனுக்குச் செஸ் விளையாட்டுல ரொம்ப ரொம்ப ரொம்ப ஆர்வம். ஸ்கூல்ல செஸ் விளையாட்டுல தன்னைச் சேர்த்துக்கங்க அப்படின்னு அந்த பிடி (PT) டீச்சர்ட்ட கெஞ்சுறான் அஸ்வின். ஆனால், அவரு வந்து இவனுடைய பின்னணி (background) தெரிஞ்சு, “இவன் ஒரு சாதாரண தெரு கூட்டுறவங்களோட மகன்” அப்படிங்கிறதினால அவனை உதாசீனப்படுத்துறாரு. அவனை எந்த டீம்லயுமே சேர்க்க மாட்டேங்கிறாரு, விளையாட்டுலயும் சேர்க்க மாட்டேங்கிறாரு.
அவங்க அம்மா இதைப் பத்தி வந்து வருத்தப்படுறாங்க. “ஆனா நீ நல்லா படிச்சு வக்கீல் ஆகணும், அதுதான் என்னுடைய ஒரே ஆசை” அப்படின்னு சொல்லி, “வக்கீலுக்குப் படி, படி, படி”ன்றாங்க. ஆனா இவனுக்குப் படிப்பு ஏறல. ஆனா செஸ், செஸ், செஸ்—24 மணி நேரமும் செஸ் விளையாடணும் அப்படின்னு ஒரு ஆர்வம். அதோட செஸ் டிரெய்னிங் குடுக்கிற ஒரு இடத்துக்குப் போய், அங்கேயும் நம்மளைச் சேர்க்க மாட்டாங்களா அப்படின்னு சொல்லி ஒரு ஆதங்கத்தோட பார்த்துகிட்டு இருக்கான்.
அந்த நேரத்துல அவனை அவனோட… அவனை வந்து ஸ்கூல்ல சாக்கடையெல்லாம் கிளீன் பண்ண வச்சுடுறாங்க, அதே ஸ்கூல் வாத்தியார். அதைக்கண்டு அவங்க அம்மா ரொம்ப கோபப்பட்டு ஸ்கூலுக்கு வந்து கத்து கத்துன்னு கத்துறாங்க. “என் பையனை மட்டும் ஏன் இது மாதிரி செய்யச் சொன்னீங்க? ஏன் மத்தப் பிள்ளைகளையெல்லாம் செய்யச் சொல்லியிருக்கலாமே?” அப்படின்னு சொல்லித் திட்டிட்டுப் போறாங்க. அதனால அந்த வாத்தியாருக்கு இன்னும் இவன் மேல கடுப்பு அதிகமாகுது.
இந்தச் செஸ்… ஏன் இவன் ஜெயிக்கணும், செஸ் விளையாடி ஜெயிக்கணும் அப்படின்னு இவன் நினைக்கிறான்றதும், செஸ் பக்கமே இவனை ஏன் அனுப்பக்கூடாது, இவனை ஏன் வக்கீல் ஆக்கணும் அப்படிங்கிறதுக்கும் ரெண்டு பேத்துக்குமே ஒரு பொதுவான காரணம் உண்டு. அந்தக் காரணம் ஒரு ஃபிளாஷ்பேக்ல சொல்றாங்க. அது உண்மையான ஒரு படத்துடைய கதையின் அடி நாதம்.
கடைசியில் என்ன ஆனது? அவன் செஸ்ல பெரிய பிளேயர் ஆனானா, இல்லையா அப்படிங்கிறதுதான் இந்தப் படத்தோட கதைச் சுருக்கம்.
படத்துடைய இயக்குநர் வெற்றிச் செழியன் ஒரு நல்ல கதையை, ஒரு சிறந்த கதையைத் தன்னால் முடிந்தளவுக்கான ஒரு சிறப்பான இயக்கத்தில் மிக அழகாகக் கொடுத்திருக்கிறார்.
படத்துல அபர்நதி வந்து ஒரு ஹீரோயின்—மத்த ஹீரோயின் மாதிரி எல்லாம் இல்லாமல், நிஜமா இந்த கேரக்டர்ல துணிஞ்சு வந்து நடிச்சிருக்காங்கன்னு ரொம்பப் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஏன்னா பொதுவா இது மாதிரி கேரக்டர், தெரு கூட்டுற… தெருவுல கூட்டுற வேலை அதிகமா யாரும் நடிக்க முன்வர மாட்டாங்க. ஆனா முன்வந்து நடிச்சிருக்காங்க. அதே சமயம் ஒரு பையனுக்கு அம்மாவாகவும் நடிச்சிருக்கணும். ரொம்பச் சிறப்பாகவும் நடிச்சிருக்காங்க. அவங்களோட… அந்தப் பையனைக் கண்டிச்சு வைக்கிற இடம், அவனை அடிச்சு ஒரு நல்வழிப்படுத்தணும்னு நினைக்கிறாங்க, அந்த காட்சிகளில் எல்லாம் ஒரு அம்மாவா தம்முடைய பொறுப்பைக் காட்டுறாங்க. ஒரு அம்மா என்ன செய்ய முடியும் அப்படிங்கிறத அவங்க செய்றாங்க.
அதே சமயம், அந்தப் பள்ளிக்குப் போயி அந்த பிடி டீச்சரை வந்து பொளந்து கட்டிட்டு வராங்க, ஒரு திட்டித் தீர்க்கிறாங்க. அவனைச் சொல்லாம, இவரைச் சொல்லாம, “என் பிள்ளைய ஏன் இப்படி வேலை வாங்குறீங்க? என் பிள்ளைட்ட வேலை வாங்கினா நடக்குறதே வேற”ன்னு ஒரு கத்து கத்திட்டு வர்றாங்க. ரொம்பப் புடிச்சமான ஒரு சீன் அது.
அதுக்கப்புறம் ஒரு ஃபிளாஷ்பேக் சீன்ல இவங்க ஒரு விளையாட்டுப் போட்டி விளையாடப் போவாங்க. விளையாட்டினால் ஒரு… கிடைக்கும் அப்படிங்கிற ஒரு ஒப்பந்தத்தின் பேர்ல விளையாடப் போவாங்க. அந்த இடத்துல அவங்க காட்டுற அந்தத் திமிரு இருக்கு பாருங்க, ரொம்ப அழகான திமிர், அட்டகாசமான ஒரு திமிர். அதை ஜெயிச்சுட்டு அவங்க பார்வை பார்ப்பாங்க பாருங்க, சூப்பர், சிம்ப்ளி சூப்பர் அப்படின்னு.
அதே மாதிரி இந்த அம்மா தம்முடைய மகனுக்குச் செஸ் விளையாடும் போது எப்படி இருக்கணும் அப்படிங்கிறதைச் சொல்லித்தர்றாங்க. ஒரு அட்டகாசமான ஒரு பாடம். பல செஸ் விளையாடுபவர்கள், இப்போது விளையாடுபவர்கள், புதிதாகக் கத்துக்கிறவங்க இந்தப் படத்தை கண்டிப்பா பாக்கணும். அதுல அபர்நதி சொல்லித்தர அந்த ஒரே ஒரு கடைசி ஒரு ஆக்ஷன்—நம்முடைய எந்த ஆக்ஷன்லயும் நம்ம தளர்ந்துட்டோம் அப்படிங்கிறது எதிராளிக்குத் தெரியக்கூடாது. அவனைச் சுத்தல்ல விடணும். நம்ம எவ்வளவு பாயிண்ட் எடுக்குறோம்ன்றது முக்கியமில்லை, ஆனால் எப்படியாவது மனதளவில் எதிராளியை நாம பலவீனப்படுத்தணும். அதுக்கு நம்ம எப்பவுமே தைரியசாலி மாதிரி காட்டிக்கணும் அப்படிங்கிற மாதிரியெல்லாம் நிறைய சொல்வாங்க. அது ரொம்ப ரொம்பப் பிடிச்சமான ஒரு விஷயம். நிச்சயமாக இதை வந்து செஸ் விளையாட்டுல ஆர்வமாய் இருக்கிறவங்க நிச்சயமாக இந்தப் படத்தை இந்த ஒரு காட்சிக்காகவே பாக்கணும்.
அப்புறம் படத்துல வில்லனா நடிச்ச சுரேஷ் மேனன், தன்னுடைய மொத்த நடிப்பையும் இறக்கியிருக்கிறார் இதுல. ஒரு அகில இந்திய செஸ் ஃபெடரேஷன் தலைவரா இருக்கிறவரு இந்த மாதிரி ஒரு சின்னத்தனமான விஷயத்துல எல்லாம் இறங்குவாரா அப்படிங்கிறது ஒரு வேற மாதிரியான ஒரு யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால் “இது நடந்த கதை” அப்படின்னு இயக்குநர் சொல்றதுனால நாம நம்பித்தான் ஆகணும். ஏன்னா இந்தியா இன்னைக்கு அப்படித்தான் இருக்கு. எல்லா இடத்துலயும் அரசியல், அரசியல் இல்லாத இடமே கிடையாது அப்படின்ற இருக்கும்போது நிச்சயமாக இதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். சுரேஷ் மேனன் தன்னுடைய வில்லத்தனத்தையும் அழகாத்தான் காட்டியிருக்காரு.
இந்தச் செஸ் அப்படிங்கிற ஒரு விளையாட்டு அப்படிங்கிறதை வச்சு, இதை இந்தச் சாதிக்காரங்கதான் விளையாடணுமா, அந்தச் சாதிக்காரன் விளையாடக் கூடாதா அப்படிங்கிற ஒரு கேள்வியையும் இதுல எழுப்பியிருக்காரு. இந்த மாதிரி சாதிக்காரங்கள், இந்த மாதிரியான வறுமையில் இருப்பவர்கள், வாழ்க்கையில் விளிம்பு நிலையில் இருக்கின்ற ஒரு மக்கள், அவர்கள் இந்த மாதிரி செஸ் மாதிரி பணக்காரர்களுடைய ஆட்டம் அப்படிங்கிற மாதிரி அதை ஒதுக்கி வச்சிருக்காங்கள்ள? அதுல நம்ம விளையாடக் கூடாது அப்படின்னு ஒருத்தன் தைரியமா வந்து சொல்லும்போது, அவனைக் கண்டிப்பா திருப்பி அடிக்கிறதுல தப்பே கிடையாது அப்படிங்கிறதை இந்தப் படம் அழுத்தமா சொல்லியிருக்கு. நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விஷயம்.
அதுலயும் அபர்நதியை அவமானப்படுத்தின பின்னாடியும், அவங்க வீட்டுக்காரரைக் கொலை பண்ணப் பின்னாடியும், அதுக்குப் பின்பும் அவங்க எந்திரிச்சு நின்னு, “எப்படி என் மகனை கிராண்ட் மாஸ்டர் ஆக்கியே தீருவேன்”னு ஒத்தக் கால்ல நின்னு அதுக்கான வேலையெல்லாம் செய்றாங்க பாருங்க, அந்தத் திரைக்கதை இடைவேளைக்குப் பின்னாடி பரபரபரபரன்னு போகுது. ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப அழகான ஸ்கிரீன் பிளே ரொம்ப அழகா பண்ணியிருக்காங்க. நிச்சயமாகப் பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். அந்த இயக்குநரின் இயக்கத் தன்மையை பாராட்டணும்.
அப்புறம் படத்துல நடிச்ச நல்ல பெயர் பெற்ற அனைவரும், அதுலயும் இவனுடைய இன்னொரு அம்மாவா ஒரு லேடி நடிச்சிருப்பாங்க. அவங்களும் ரொம்பச் சிறப்பா நடிச்சிருக்காங்க, நடிக்க வைக்கப்பட்டிருக்காங்க.
அப்புறம் படத்துல தொழில்நுட்பம் அப்படின்னு பார்த்தீங்கன்னா ஒளிப்பதிவுதான். ஒரு சின்ன பட்ஜெட் படத்துல ஒளிப்பதிவு எந்த அளவுக்கு ஒரு நல்ல விஷயமா இருக்குமோ, அந்த அளவுக்கு அழகா பண்ணியிருக்காங்க.
மியூசிக் டைரக்டர் தினேஷ் ஆண்டனி ஒரு ரெண்டு பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் அதைவிட எனக்குப் பிடிச்சது பின்னணி இசைதான். ரொம்பவும் காதைக் கிழிக்கிற மாதிரியெல்லாம் எதுவுமே பண்ணாமல், ரொம்ப அடக்கமா, அமைதியா, ஒரு சோகக் காட்சியில் கூட நம்ம அதை மனதில் லயித்துத் திரையைப் பார்க்கிற மாதிரி ஒரு அழகா பண்ணியிருக்காரு.
ஒளிப்பதிவாளர்கள் ரெண்டு பேருமே, இந்த அர்ஜுன் ரவி, ஞானசேகர், அவங்க திண்டுக்கல், மதுரையில பெரும்பாலான காட்சிகளை எடுத்திருக்காங்க, பார்த்தாலே தெரியுது. அந்த ஊரை அவ்வளவு அழகா காட்டியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. அதுலயும் அந்தக் குடிசைப் பகுதிகளைக் காட்டினாங்க பாருங்க, அதெல்லாம் ரொம்ப… அந்த கலை இயக்குநர் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த இடத்தை தேடிக் கண்டுபிடிச்சு அதுக்கான இடத்தைப் போட்டாரோ தெரியல, ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. அந்த இடத்துல எல்லாம் நீங்க ஒரு ரெண்டு நிமிஷம் கூட நம்மளால நிக்க முடியாது. ஆனால் அதுல ஒரு மக்களே அவ்வளவு மக்கள் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்றதைப் பார்க்கும்போது உலகம் எப்படி இருக்குன்றதை நாம வெளியில இந்த மாதிரி படங்களைப் பார்த்தாவது தெரிஞ்சுக்கணும்.
அப்புறம் சி.கே. ரஞ்சித் எடிட்டிங் பண்ணியிருக்காரு. அந்தச் செஸ் விளையாட்டுப் போட்டிகளை மட்டும் இதுல கொஞ்சம் ரொம்ப இதுவா காட்ட முடியாது. ஏன்னா மத்த ஃபுட்பால் மாதிரியோ, கிரிக்கெட் மாதிரியோ, மத்தவங்க பந்து வீசி அடிக்கிற மாதிரியோ, ஃபுட்பால் பால எட்டிப் போடுற மாதிரியோ பரபரப்பா இருக்கிறத காட்ட முடியாது. மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு விளையாட்டு அப்படிங்கிறதுனால, தன்னால் முடிந்த அளவுக்கு அந்தச் செஸ் போட்டியில காய் நகர்த்துவதிலேயே ஒரு பரபரப்பை உருவாக்கி, அது நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிற அளவுக்குப் படத்தைக் கட்டிங் பண்ணி கொடுத்திருக்காரு.
கலை இயக்குநரை நிச்சயமாக ஒரு அளவுக்குப் பாராட்டணும். கலை இயக்குநர் அந்த வீடு, அந்தப் பகுதிகளையெல்லாம் கரெக்டா தேர்ந்தெடுத்து வச்சிருக்காரு. ரொம்பப் போலித்தனமாக, பூச்சுத்தனமாக இல்ல. இந்த மாதிரி ஃபேமிலி இந்த மாதிரி இடத்துலதான் குடியிருப்பாங்க அப்படிங்கறது நல்ல ஊருக்கே தெரிஞ்ச விஷயம். அந்த இடத்தை கொஞ்சம் அழகாகவும் காட்டியிருக்காங்க.
ஒரு சாதிப் பிரச்சனை வந்து காதலில் மட்டுமல்ல, எல்லா இடத்துலயுமே சாதிப் பிரச்சனை இருக்கு. தமிழ்நாட்டுல இல்லை, இந்தியாவையே பிடிச்ச மிகப்பெரிய சாபக்கேடு இந்தச் சாதிதான். அதுல மிகப்பெரிய விளையாட்டுக்கு அனுப்பும்போது கூட சாதி, விளையாட்டு ஆட்களைத் தேர்வு செய்யும் பொழுதும் சாதி, தேசிய அணி, மாநில அணி, மாவட்ட அணி இப்படி எந்த அணி தேர்வு செய்யும் பொழுது கூட சாதியைப் பார்க்கிறாங்கன்றது எல்லாருக்குமே தெரியும். அது இருக்கக்கூடாது அப்படிங்கிறதை முன்வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்காங்க. அந்த அளவுக்கு ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிற திரைப்படம் என்பதால் நிச்சயமாக இந்தப் படத்தை நம்ம பாராட்டி வரவேற்க வேண்டும், வரவேற்கணும்.
அதே சமயம் செஸ் விளையாட்டு விளையாடணும் அப்படிங்கிற ஆர்வத்துல இருக்கிறவங்களும், மற்றவர்களும் நிச்சயமாக இந்தப் படத்தைப் பார்த்தே தீரணும். அந்த அளவுக்கு சில நுணுக்கமான செஸ் விளையாட்டு விஷயங்கள் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கு.
இந்தப் படம் நிச்சயமாக ஒரு பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவசியம் தியேட்டரில் படத்தைப் பாருங்கள்.
RATING : 3.5 / 5









