full screen background image

ஒன்ஸ்மோர் – சினிமா விமர்சனம்

ஒன்ஸ்மோர் – சினிமா விமர்சனம்

இதுவும் ஒரு காதலை மையப்படுத்திய திரைப்படம்தான். இந்தக் ‘காதல்’ என்கின்ற வார்த்தையை தமிழ் சினிமாக்காரர்கள் ஆதிகாலத்தில் இருந்து கொத்து புரோட்டா போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த காதல் ஒவ்வொரு தலைமுறை தலைமுறையாக மாறி வரும்போது பல்வேறு பரிணாமங்களை அடைந்து சொல்ல சொல்லாமலேயே காதல், பார்க்காமலேயே காதல், என்றெல்லாம் வளர்ந்து காதலில் எத்தனைவிதமான விதங்கள் இருக்கிறதோ அத்தனையையும் வெங்காயத்தை உரிப்பதுபோல் உறித்து எடுத்துக் கொண்டிருக்கிறது திரைப்படத் துறை.

ஏற்கனவே ஒரு காதலில் தோல்வி அடைந்ததால் பெரும் சோகத்தில் இருக்கும் இளைஞன் ரகுவரன் என்ற அர்ஜுன் தாஸ்.

அவரை 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பஸ் ஸ்டாப்பில் சந்திக்கிறார் அர்ஜூனுடன் கல்லூரியில் ஜூனியராக படித்த அதிதி ஷங்கர்.

அர்ஜுன் தாஸை ட்ராப் செய்வதற்காக காரில் அழைத்துச் செல்லும் அதிதி திடீரென்று “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?!” என்று கேட்கிறார். தான் அவரை கல்லூரி காலத்திலிருந்து காதலிப்பதாக சொல்கிறார் அதிதி. அர்ஜுன் இப்போது காதல் மூடிலேயே இல்லை என்பதால் அதிதியின் அந்தக் காதல் பேச்சை தன் தவிர்க்கிறார்.

ஆனால் அதிதி விடாமல் பல்வேறு வேலைகளை செய்து அர்ஜுனை நெருக்குகிறார். இரண்டு குடும்பத்தினரையும் அதிதி சந்திக்க வைத்ததால் அனைவரும் ஒன்றிணைந்து திருமணத்திற்கு ஓகே சொல்ல வேறு வழியில்லாமல் அர்ஜுனும் இதற்கு ஒப்புக் கொள்கிறார்.

இவர்கள் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் தருணத்தில் எந்த காதல் தோல்வியினால் அர்ஜுன் தேவதாஸ் ஆனாரோ.. அதே காதலியான இந்திரா என்ற சொனா ஒலக்கல் மீண்டும் அர்ஜுன் தாஸை தொடர்பு கொண்டு பேசுகிறார்.

காதலியை மறக்க முடியாமல் இருக்கும் அர்ஜுன் தாஸ் இந்திராவை நேரில் சென்று சந்திக்க அவர்களின் காதல் தோல்விக்கு சமாதானம் சொல்லி அர்ஜுன் தாஸை மீண்டும் நெருங்குகிறார்.

திருமணத்திற்கு நாள் குறித்து இன்னும் மூன்று நாட்களே இருக்கும் சூழலில், பழைய காதலியா அல்லது புதிய காதலியா என்று இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார் அர்ஜுன் தாஸ்.

இறுதியில் என்ன நடக்கிறது? அர்ஜூன் தாஸ் யாரை திருமணம் செய்தார்? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஹீரோ அர்ஜுன் தாஸ் இயல்பாகவே ஒரு மூடி டைப் போலவேதான் இருப்பார். நடிகைகளில் சோனியா அகர்வால் எப்படியோ… அப்படித்தான் நடிகர்களில் அர்ஜுன்தாஸூம்.

கையில் சாராயப் பாட்டிலையோ, விஸ்கி பாட்டிலையோ குடுக்கவே தேவையில்லை. அவர் அமைதியாக நின்றிருந்தாலே பாவம் ஏதோ காதல் தோல்வி போல் இருக்கிறது என்று அனைவரும் நினைத்துக் கொள்வார்கள்.

அதனால் இந்தப் படத்தில் காதல் தோல்வியால் சிக்கித் தவிக்கும் தேவதாஸ் ரகுவரன் கதாப்பாத்திரத்தில் ரொம்ப, ரொம்ப எளிதாக நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

காதல் தோல்வி படுத்திய பாட்டினால் எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபட முடியாமல் யாருடனும் சகஜமாக பேச முடியாமலும் தவிக்கின்ற அந்தக் கதாபாத்திரத்தில் உண்மையாக நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

முதலில் தன்னைச் சந்திக்கும் அதிதியை தவிர்க்கும் பொருட்டு காரில் ஏற தயங்கும் அர்ஜுன், 8 வருடங்கள் கழித்து சந்திக்கும் ஜூனியரிடம் பேசக்கூட விருப்பம் இல்லாமல் போகின்ற பொழுது அவருடைய மனநிலை தெளிவாக இயக்குநரால் காட்டப்பட்டுள்ளது.

கொஞ்சம், கொஞ்சமாக அதிதி விரித்த வலையில் சிக்கும் அர்ஜுன் அதிலிருந்து தப்பிக்க முடியாமல் சரி கல்யாணத்தை செய்துதான் தொலைவோமே என்றெண்ணி அதிதியை திருமணம் செய்ய ஓகே சொல்கின்ற அந்தக் காட்சியில் தன்னுடைய நடிப்பினால் நிச்சயம் பாராட்டை பெறுகிறார்.

இடைவேளைக்குப் பின்பு இந்திராவுடன் காதல் காட்சிகளில் ஒரு துள்ளி குதித்தோடும் இளைஞனாக… கல்லூரி கலை விழாவில் ஆட்டம் போடும் ஒரு யூத்தாக… காதலில் திளைக்க விரும்பும் ஒரு வாலிபனாக… தன்னுடைய நடிப்பில் ஒரு குதூகலத்தை காட்டியிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

கல்லூரி கால அர்ஜுன் தாஸை ரொம்பவே நமக்கு பிடிக்கிறது. அவ்வளவு துள்ளலோடு நடித்திருக்கிறார். காதல் முறிந்து போனதாக தெரிந்தவுடன் அவருடைய அந்த துயரம், வருத்தம் அனைத்தையும் காட்டும்பொழுது அவர் மீது பாவமான ஒரு எண்ணத்தையும் நமக்குள் கிரியேட் செய்துவிட்டார். அந்த வகையில் இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸின் நடிப்பு ஓகேதான்.

‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் ‘அஞ்சலி’ கதாபாத்திரத்தில் நடித்த அமலா, ‘பூவே பூச்சூடவா’ படத்தில் நதியா நடித்திருந்த ‘கிரிலி மேத்யூஸ்’, ‘நேரம்’ படத்தில் நஸ்ரியா நஸ்ரின் நடித்த ‘ஜீனா’ கேரக்டர், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நிஜமோல் ஜோஸ் ஏற்று நடித்த ‘ராஜலக்ஷ்மி’ என்ற கதாபாத்திரம்… இந்த வரிசையில் ‘அஞ்சலி’ என்ற  கதாநாயகியாக படத்தை தாங்கிப் பிடிக்கக் கூடிய வசீகரமான, ரசிக்க வைக்கும் அளவுக்கான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஹீரோயின் அதிதி சங்கர்.

அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து இறுதியில் தன்னுடைய திருமணத்தை உறுதி செய்யும்வரையிலும் அவருடைய மிக இயல்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

பொதுவாக ஆண்கள் பெண்களிடம் அதிகம் எதிர்பார்க்கும் அந்த இனிமையான சிரித்த முகத்துடன் கூடிய நடிப்பை கடைசி வரையிலும் காட்டியிருப்பதால் நமக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது அதிதியை!

முதல் காதலியாக இந்திரா கேரக்டரில் நடித்திருக்கும் சோனா ஒலக்கல் அறிமுகக் கட்சியிலேயே “யார்ரா இந்த அழகி?!” என்று கேட்க வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு இவரை அழகாகவே காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்ற நடிப்பை அவர் காண்பித்து இருந்தாலும் கடைசிவரையிலும் ஒரு சோகமயமான நடிப்பையே கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இவருடைய நடிப்பு மின்னலாக வெட்டுகிறதா என்று பார்த்துவிட்டுப் பேசுவோம்.

மேலும் இருவரின் குடும்பத்தார்… சித்ரா லட்சுமணன், ரமா ராஜேந்திரன், அர்ஜுனனின் அக்காவாக நடித்தவர், மாமாவாக நடித்தவர், சர்ச் பாதர் ஜெகபர், அதிதியின் அப்பா, அம்மா என்ற அனைவருமே இயக்குநரின் சிறப்பான இயக்கத் திறமையால் குறை இல்லாமல் நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் படம் முழுவதும் ஏனோ ஒரு மத்தியமான ஒளிப்பதிவையே கொடுத்திருக்கிறார்.

அதிக வெளிச்சமும் இல்லாமல் குறைவான வெளிச்சமும் இல்லாமல் நடுவாந்திரமாக ஒளிப்பதிவு இருந்தது ஏன் என்று தெரியவில்லை.

கல்லூரி கலை விழாவில்கூட ஒளியை பளிச்சென்று கொடுக்காமல் விட்டுவிட்டார். அதையும் நாம் அதிகமாக ரசிக்க முடியவில்லை. திராவிட முகம் கொண்ட அதிதியின் முகத்தை அத்தனை குளோஸப் ஷாட்டுகளில் அழகாகப் படம் பிடித்து காட்டியிருக்கிறார். அதேபோல் சோனா ஒலக்கலையும் ஒரு சில காட்சிகளில் அடுத்தடுத்த படங்களில் புக் செய்யலாமே என்று தயாரிப்பாளர்களை நினைக்க வைப்பதுபோல பதிவு செய்து இருக்கிறார்.

பாடல் காட்சிகள் முழுவதையும் படமாக்கியவிதத்தில் பாராட்டுகளைப் பெறுகிறார். அதிலும் மான்டேஜ் காட்சியாக வருபவை எல்லாமே அழகுதான். என்ன…. இன்னமும் கொஞ்சம் லைட்டை பிரைட் செய்திருக்கலாம்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில் அதகளம் செய்திருக்கிறார்.

‘வா கண்ணம்மா’, ‘இதயம்’, ‘மீண்டுமா’, ‘மிஸ் ஒருத்தி’, ‘இந்திரா’ என்று பாடல்கள் அனைத்துமே இனிமை. ‘ஒன்ஸ்மோர்’ கேட்க வைப்பவை.

காட்சிகளின் தன்மைக்கேற்ப பின்னணி இசையை அமைத்து இயக்குநருக்கு பெரிதும் உதவி இருக்கிறார்.

காதலில் தோல்வியடைந்த ஒருவனுக்கு மருந்தாக இன்னொரு காதல் வருவதையும் அதை இந்த காதலன் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள மறுப்பதும் இரண்டாவது காதலி அவனது மனதில் இடம் பிடிக்க எத்தனையோ வித்தைகள் செய்து அவனது மனதைக் கரைப்பதுமான திரைக்கதையில் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன அந்த வரிசையில் இதுவும் ஒன்றாக இடம் பிடித்து இருக்கிறது.

காதலை கொஞ்சம் டீசண்டாக காட்ட வேண்டும் என்று நினைத்த இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த், இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப படத்தை உருவாக்குவதாக நினைத்து கொஞ்சம் அத்துமீறி காதலர்கள் உறவு கொள்வதாகவே வைத்து காட்டிவிட்டார். இதிலேயே அந்த இரண்டு கேரக்டர்களும் அடிபட்டு போகிறது. பின்பு இவர்கள் மீது ரசிகர்களுக்கு பரிதாபம் எப்படி வரும்?

முதல் பாதியில் படம் வேகமாக நகர்வதைப் போல தோன்றியது. ஆனால் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒருமுறை ஒரு முட்டுச் சந்தில் போய் நின்று திரும்பவும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்கிறது.

அப்படி ஒரு குழப்பமான திரைக்கதைதான் நம்மை கொஞ்சம் சோர்வடைய வைத்துவிட்டது.

இந்திரா திரும்பத் திரும்ப “சந்திப்போமா? சந்திப்போமா? என்று அர்ஜுனை அழைப்பதும், இவரும் போய் சோகத்துடன் தத்துவ வசனங்களை எல்லாம் பேசி கேட்டுக் கொண்டே இருப்பதும் மிகவும் போர் அடிக்கிறது.

திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் மனதை மாற்றுவது போல இந்திரா நடந்து கொள்வதும், அர்ஜுன் அதை இரட்டை மன நிலையில் எதிர்கொள்வதுமான திரைக்கதை பார்வையாளர்களே கவரவே இல்லை.

சில இடங்களில் வசனங்களின் மூலமாக ஒரு சுவாரசியத்தைக் கூட்டி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் அதிதி சங்கரை அர்ஜுன் தாஸ் தவிர்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் அதிதி சங்கர் பேசுகின்ற ஒவ்வொரு வசனமும் சிறப்பு. ஒரு புன்சிரிப்பை நமக்குள் உதிர்க்க வைத்திருக்கிறது. வசனம் எழுதிய இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

முறிந்து போன காதலை மீண்டும் ஒட்ட வைப்பதுபோல இயக்குனர் திரைக்கதையை கொண்டு வந்ததுதான் இந்தப் படத்தை மிகச் சிறப்பான காதல் படம் என்று சொல்ல முடியாதபடி தடுக்கிறது.

ஒரு சிறந்த காதல் படமாக வந்திருக்க வேண்டிய இந்தப் படம் இடைவெளிக்கு பின்பான திரைக்கதையில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டுவிட்டதால் சுமாரான காதல் படமாக மாறிவிட்டது.

RATING : 3 / 5

Our Score